அம்மா உணவகம்

அம்மா உணவகம் என்பது தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை,சென்னை மாநகராட்சி மற்றும் தமிழகத்தின் அனைத்து மாநகராட்சிகள் மூலமாக இயங்கும் மலிவு விலை உணவகத்திற்கு இடப்பட்டுள்ள பெயராகும். இது சென்னையின் அனைத்து பகுதிகளிலும் வாழும் ஏழை எளிய மக்கள், அன்றாட கூலி வேலை செய்பவர்கள், ஓட்டுநர்கள், பாரம் தூக்குபவர்கள் என குறைந்த ஊதியத்தில் பணிபுரிபவர்கள் பயன்பெறும் வகையில் திறக்கப்பட்டுள்ளது.

சேலம் மாநகராட்சியில் அம்மா உணவகம்

மலிவு விலை உணவகங்கள்

அம்மா உணவகம் ஒன்றின் முன் வைக்கப்பட்டுள்ள விலைப்பட்டியல்

சென்னை மாநகராட்சியின் திட்டமான மலிவு விலை உணவகம் திட்டம் 2013 மார்ச் 19ஆம் நாள் சென்னை-சாந்தோமில் முதல்வர் ஜெயலலிதாவால் தொடங்கப்பெற்றது. அதே நாளில் 15 இடங்களில் மலிவு விலை உணவங்கள் செயல்பாட்டிற்கு வந்தன. அரசு பொது மருத்துவமனை வளாகங்களில் அம்மா உணவகம் திறக்கப்பட வேண்டும் என்ற பொது மக்களின் கோரிக்கையினை நிறைவேற்றிடும் வகையில் முதற்கட்டமாக 20.11.2013 அன்று சென்னை அரசு பொது மருத்துவமனை வளாகத்திலும், இரண்டாம் கட்டமாக 21.2.2014 அன்று அரசு ஸ்டான்லி மருத்துவமனை மற்றும் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை வளாகங்களிலும் அம்மா உணவகங்களை ஜெயலலிதா திறந்து வைத்தார்.இந்த உணவகங்களில் இட்லி ஒரு ரூபாய்க்கும், சாம்பார் சாதம் 5 ரூபாய்க்கும், தயிர் சாதம் 3 ரூபாய்க்கு விற்கப்படுகின்றன. [1]

பெயர் மாற்றம்

மலிவு விலை சிற்றுண்டி உணவகம் என்ற பெயரை 'அம்மா உணவகம்' என்று மாற்றுவதற்கு சென்னை மாநகராட்சியில் தீர்மானம் 2013 மார்ச் 23ம் தேதியில் நிறைவேற்றப்பட்டது. அப்போது மலிவு விலை உணவகங்களின் எண்ணிக்கை எழுபத்தி மூன்றாக (73) இருந்தன. [2]

திட்ட விரிவாக்கம்

சென்னை மாநகராட்சியின் சார்பில் நூற்றி இருபத்தி ஏழு (127) அம்மா உணவகங்களை ஜெயலலிதா திறந்துவைத்தார். இந்த நிகழ்ச்சி காணொளிக் காட்சி முறையில் நடந்தது. [3] இதன் மூலம் அம்மா உணவங்களின் எண்ணிக்கை இருநூறாக (200) மாறியது. சென்னை மாநகராட்சியை தொடர்ந்து மற்ற மாநகராட்சிகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படுமென சட்டசபையில் ஜெயலலிதா அறிவித்தார். [4] தமிழகத்தில் அமைந்துள்ளதுபோல் ராஜஸ்தான் மாநிலத்திலும் மலிவு விலையில் உணவகங்கள் திறக்க முடிவு செய்யப்பட்டது. [5] தமிழகத்தில் ‘அம்மா உணவகம்’ போன்று, ஆந்திர மாநிலத்தின் 2015-16 ஆண்டுக்கான பட்ஜெட்டில் “அண்ணா அம்ருத ஹஸ்தம்” எனும் திட்டத்துக்காக ரூ. 104 கோடி ஒதுக்கப்பட்டது.[6]

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.