வாணிதாசன்

கவிஞரேறு வாணிதாசன் (ஜுலை 22 1915 - ஆகஸ்டு7, 1974) புதுவையைச் சேர்ந்த தமிழறிஞரும், கவிஞரும் ஆவார். இவர் 'பாரதிதாசன் பரம்பரை' என்றழைக்கப்படும், பாவலர் தலைமுறையில் வருபவர்.

வாழ்க்கைச் சுருக்கம்

புதுவையை அடுத்த வில்லியனூரில் 22-7-1915ஆம் நாள் தெலுங்கைத் தாய்மொழியாகக்கொண்ட அரங்க.திருக்காமு, துளசியம்மாள் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். [1] இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் அரங்கசாமி என்ற எத்திராசலு என்பதாகும். இவர் 'ரமி' என்னும் புனைப்பெயரும் கொண்டவர்.

இவர், பாவேந்தர் பாரதிதாசனிடம் தொடக்கக் கல்வி பயின்றவர். அத்தொடக்கக் கல்வியே பாப்புனையும் தமிழுணர்விற்கும் தொடக்கமாயிற்று. இவர்தம் பாடல்கள், சாகித்திய அகாதமி வெளியிட்ட 'தமிழ்க் கவிதைக் களஞ்சியம்' என்ற நூலிலும் தென்மொழிகள் புத்தக வெளியீட்டுக் கழகம் வெளியிட்ட புதுத்தமிழ்க் கவிமலர்கள் என்ற நூலிலும் மற்றும் பற்பல தொகுப்பு நூல்களிலும் இடம் பெற்றுள்ளன. உருசியம், ஆங்கிலம் முதலிய மொழிகளில் இவர் பாடல்கள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. இவர் பிரெஞ்சு மொழியிலூம் புலமை பெற்றவர். 'தமிழ்-பிரெஞ்சு கையகர முதலி' என்ற நூலை வெளியிட்டுள்ளார். பிரெஞ்சு குடியரசுத்தலைவர் இவருக்கு 'செவாலியர்' என்ற விருதினை வழங்கியுள்ளார். மேலும் 'கவிஞரேறு', 'பாவலர் மணி' முதலிய பட்டங்களும் வாணிதாசனுக்கு வழங்கப்பட்டுள்ளன. தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய மொழிகளில் வல்லுநர். 34 ஆண்டுகள் தமிழ் ஆசிரியராகப் பணிபுரிந்தவர்.

பாரதிதாசன் அடியொட்டிப் பாடிய கவிஞர்களை அக்காலத்தே வெளிவந்த 'பொன்னி' இதழ், 'பாரதிதாசன் பரம்பரை' என்னும் தலைப்பிட்டு அறிமுகப்படுத்தியது. பாரதிதாசன் பரம்பரையினருள் வாணிதாசன் குறிப்பிடத்தக்கவர். "தமிழச்சி", "கொடிமுல்லை" ஆகிய சிறு காப்பியங்களையும், 'தொடுவானம்', 'எழிலொவியம்', 'குழந்தை இலக்கியம்' ஆகிய கவிதை நூல்களை வழங்கியுள்ளார். எனினும் 'வாணிதாசன் கவிதைகள்' என்னும் தொகுப்பே பெரும் புகழ் பெற்றது.

இயற்கைப் புனைவு இவருடைய பாடல்களில் சிறந்து விளங்குவதைக் காணலாம். எனவே இவரை 'தமிழகத்தின் வேர்ட்ஸ்வார்த்' என்று பாராட்டுகின்றனர். கவிஞரேறு வாணிதாசன் 7-8-1974 இல் மறைந்தார். கவிஞரேறு வாணிதாசனுடைய தமிழ்த்தொண்டைப் பாராட்டித் தமிழக அரசு இவர் குடும்பத்துக்கு 10000 ரூ பரிசு வழங்கியுள்ளது. இவர் பெயரால் சேலிய மேட்டில் ஓர் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது.

பாரதிதாசனின் கவிதை வளத்தையும் உள்ளத்தையும் அறிந்தே திரு. வி. க. 'திருவாணிதாசர் ஒரு பெரும் உலகக் கவிஞர் ஆதல் வேண்டும்', என்றார். மயிலை சிவமுத்து, 'தமிழ்நாட்டுத் தாகூர்' வாணிதாசனார் என்று புகழ்ந்தார்.

தமிழ் நாடு அரசு கவிஞர் வாணிதாசன் நூல்களை நாட்டுடைமை ஆக்கியுள்ளது.

கவிஞர் வாணிதாசன் எழுதிய நூல்கள்

  1. இரவு வரவில்லை
  2. இன்ப இலக்கியம்
  3. இனிக்கும் பாட்டு
  4. எழில் விருத்தம்
  5. எழிலோவியம்
  6. குழந்தை இலக்கியம்
  7. கொடி முல்லை
  8. சிரித்த நுணா
  9. தமிழச்சி
  10. தீர்த்த யாத்திரை
  11. தொடுவானம்
  12. பாட்டரங்கப் பாடல்கள்
  13. பாட்டு பிறக்குமடா
  14. பெரிய இடத்துச் செய்தி
  15. பொங்கற்பரிசு
  16. வாணிதாசன் கவிதைகள்-முதல் தொகுதி
  17. வாணிதாசன் கவிதைகள்-இரண்டாம் தொகுதி
  18. வாணிதாசன் கவிதைகள்-மூன்றாம் தொகுதி
  19. விட்டர் விகோவின் ஆன்ழெல்லோ

குடும்பம்

வாணிதாசன் 1935ஆம் ஆண்டில் தன் சிற்றன்னைக்கு தம்பி மகளான ஆதிலட்சுமி என்பவரை மணந்தார். அவர்களுக்கு ஆணும் பெண்ணுமாக ஒன்பது குழந்தைகள் பிறந்தனர். [1] அவர்களுள் மூத்தவரான மாதரிக்கும் வ.கலியமூர்த்தி என்பவருக்கும் 10.5.1959ஆம் நாள் மயிலை சிவ.முத்து தலைமையில் திருமணம் நடைபெற்றது. [2]


சான்றாவணங்கள்

  1. தமிழ் அறிஞர்கள் அறிவோம்: கவிஞர் வாணிதாசன், தினமணி 29-12-2013
  2. தென்னகம், 8-5-1959; சென்னை; பக்.6

வெளியிணைப்பு

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.