போகொட மரப் பாலம்

போகொட மரப் பாலம் 16 ஆம் நூற்றாண்டு தம்பதெனியாக் காலத்தில் கட்டப்பட்ட ஒரு மரப் பாலம். இலங்கையில் உள்ள மிகப் பழைய மரப்பாலம் இதுவே. இப்பாலம் பதுளைக்குத் தெற்கே 13 கிலோமீட்டர் (8.1 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. பொருத்துவதற்கான ஆணிகள் உட்பட இப்பாலத்தின் எல்லாப் பகுதிகளுமே மரத்தால் செய்யப்பட்டவை. கூரை ஓடுகள் கண்டி இராச்சியத்தின் செல்வாக்கைக் காட்டுகின்றன. இப்பாலம் கண்டியையும் பதுளையையும் இணைக்கும் பழைய பாதை ஒன்றில், கல்லந்த ஓயாவுக்கு குறுக்கே அமைந்துள்ளது.

போகொட மரப் பாலம்

விபரம்

போகொட மரப் பாலத்தின் பக்கத்தோற்றம்

போகொடப் பாலம் 400 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தது. முழுவதும் மரப்பலகைகளால் ஆன இப்பாலத்துக்கான பலகைகள் ஒரே மரத்தில் இருந்து பெறப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இதன் நீளம் 15 மீட்டர் (49 அடி), அகலம் 1.5 மீட்டர் (4.9 அடி). இதன் முழு நீளத்துக்கும் 2.4 மீட்டர் (7.9 அடி) உயரமான ஓடு வேய்ந்த கூரை அமைப்பு உள்ளது. பாலத்தில் இரு பக்கங்களிலும் உள்ள தடுப்புக்கள் பழங்கால முறையில் அலங்காரம் செய்யப்பட்டுள்ளன. பாலம் ஒரு பெரிய அடி மரத்தினால் தாங்கப்பட்டுள்ளது. இதன் உயரம் 2.4 மீட்டர் (7.9 அடி).

அமைப்புத் தேவைகளுக்கு பெரும்பாலும், பலா (Artocarpus heterophyllus), கும்புக் (Terminalia arjuna) போன்ற மரக் குற்றிகள் பாலத்தின் அமைப்புத் தேவைகளுக்காகப் பயன்பட்டுள்ளன.

கோயில்

பாலத்துக்கு அருகில் ஒரு பழைய கோயிலும் உள்ளது. கோயில் பாலத்தைவிடக் காலத்தால் முந்தியது. அனுராதபுரக் காலத்தில் கிமு முதலாம் நூற்றாண்டில் இது கட்டப்பட்டது. இது அரசன் வலகம்பாவின் கட்டளைப்படி அமைக்கப்பட்டது. இங்குள்ள பிராமி எழுத்தில் எழுதப்பட்ட கல்வெட்டொன்றின்படி இக்கோயில் பதுளையின் உள்ளூர்த் தலைவரான திஸ்ஸ என்பவரால் பிரம்மதத்தர் என்னும் மதகுருவுக்கு வழங்கப்பட்டது. உள்ளே கண்டி இராச்சியக் காலத்தைச் சேர்ந்த ஓவியங்கள் உள்ளன. சுவர்கள் பருத்திப் பஞ்சு, தேன், சுத்தப்படுத்திய களிமண் என்பவற்றின் கலவையால் கட்டப்பட்டது.[1]

மேற்கோள்கள்

  1. "Bogoda Temple". The Nation (12 October 2008). பார்த்த நாள் 10 September 2009.

வெளியிணைப்புக்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.