பேருந்து நிறுத்தம்

பேருந்து நிறுத்தம் என்பது, பயணிகளை ஏற்றுவதற்கும் இறக்குவதற்குமாக, பொதுப் போக்குவரத்துப் பேருந்துகளை நிறுத்துவதற்காக ஒதுக்கிய இடத்தைக் குறிக்கும்.

பின்லாந்திலுள்ள வண்ணமயமான பேருந்து நிறுத்தம் ஒன்று.

வகைகள்

பேருந்து நிறுத்தங்களில் மூன்று முக்கிய வகைகள் உள்ளன.

  • திட்டமிட்ட நிறுத்தம்: ஒதுக்கப்பட்ட நிறுத்தம். பயணிகள் ஏறுவதற்கோ இறங்குவதற்கோ இல்லாவிட்டாலும் இந்த நிறுத்தங்களில் பேருந்து நிறுத்தப்படும்.
  • தேவைக்கான நிறுத்தம்: ஒதுக்கப்பட்ட நிறுத்தம். ஆனால், இறங்குவதற்கு அல்லது ஏறுவதற்குப் பயணிகள் இருந்தால் மட்டுமே இந்நிறுத்தங்களில் பேருந்து நிறுத்தப்படும்.
  • தேவைப்படும் இடத்திலான நிறுத்தம்: இது, பேருந்து வழித்தடத்தின் ஒரு குறித்த பகுதியில் விரும்பிய இடத்தில் பயணிகள் ஏற அல்லது இறங்கிக்கொள்ள உள்ள ஒரு ஒழுங்கு ஆகும். இதில் ஒதுக்கப்பட்ட பேருந்து நிறுத்தங்கள் வேண்டியதில்லை.


சில நிறுத்தங்கள் முனைய நிறுத்தங்களாக இருக்கலாம். இவை பேருந்து வழித்தடங்களின் தொடக்க அல்லது முடிவிடங்கள் ஆகும். எனினும் எல்லாப் பேருந்துகளுக்குமே இது முனைய நிறுத்தங்களாக இருக்கவேண்டும் என்பதில்லை. சில வழித்தடப் பேருந்துகளுக்கு இது இடையில் உள்ள நிறுத்தமாக இருக்கக்கூடும். அதிக அளவில் பேருந்துச் சேவைகளைக் கொண்டுள்ள நெருக்கமான நகரப் பகுதிகளில் செயற்றிறனைக் கூட்டுவதற்கும், நிறுத்தங்களில் ஏற்படும் கால தாமதத்தைக் குறைப்பதற்கும் பேருந்துகள் இடைவிட்ட நிறுத்தங்களில் நிற்கும் ஒழுங்குகளும் உள்ளன.

அடையாளங்கள்

தாய்லாந்தில் சலாலோங்கோன் பல்கலைக்கழகத்தை அண்டி வரிசையாக அமைந்துள்ள பேருந்து நிறுத்தங்கள்.

பெரும்பாலான பேருந்து நிறுத்தங்களில் ஒரு கம்பத்தில் பொருத்தப்பட்ட ஒரு அடையாளச் சின்னம் இருக்கும். சிலவிடங்களில் நிறுத்தங்களில் அமைக்கப்படும் நிழலுக்கான அமைப்புக்களில் இவ்வடையாளச் சின்னங்கள் பொருத்தப்படுவதும் உண்டு. இந்த அடையாளம் பொதுவாகப் பேருந்தைக் குறிக்கும் ஒரு வரைபடத்தைக் கொண்டிருக்கும் சில இடங்களில் "பேருந்து நிறுத்தம்" என எழுதப்பட்டிருப்பதும் உண்டு.

அமைப்பு

சாலையோரம் உள்ள நடைபாதையில் ஒரு பகுதியே பேருந்து நிறுத்தமாக இருப்பது மிக எளிமையான அமைப்பு ஆகும். போக்குவரத்தைத் தடை செய்யாமல் இருப்பதற்காக நடைபாதை உட்புறம் வளைவாக அமைக்கப்பட்டுப் பேருந்து நிறுத்துவதற்குச் சாலையில் இருந்து தனிப்படுத்திய இடம் ஒதுக்கப்படுவதும் உண்டு. பல பேருந்து நிறுத்தங்களைச் சேர்த்து ஒரு தொகுதியாக அமைக்கும் வழக்கமும் உள்ளது. இது ஒரு பேருந்திலிருந்து இறங்கி வேறு வழித்தடத்தில் செல்லும் இன்னொரு பேருந்தில் ஏறுவதற்கு வசதியாக அமைகின்றது. இவை ஒன்றையடுத்து இன்னொன்றாக ஒரே வரிசையில் அமையலாம் அல்லது பல அணுகு வழிகளுடன் ஒன்றுக்கொன்று இணையாக அமைந்த நிறுத்தங்களாக இருக்கலாம். இத்தைகைய நிறுத்தத் தொகுதிகள் ஒரு போக்குவரத்து மையத்தின் ஒரு பகுதியாகவும் இருப்பதுண்டு.

கட்டுமானங்களும் வசதிகளும்

மிக எளிமையான பேருந்து நிறுத்தங்கள் தவிர்ந்த பல நிறுத்தங்களில் மழை, வெய்யில் முதலியவற்றிலிருந்து பயணிகளுக்குப் பாதுகாப்பு அளிக்கக்கூடிய கூரையுடன் கூடிய அமைப்புக்கள் இருப்பது உண்டு. இவை பக்கங்களில் திறந்த அமைப்புள்ளவையாகவோ, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பக்கங்கள் மூடப்பட்டவையாகவோ இருக்கலாம். இவ்வமைப்புக்கள் அவற்றின் வடிவமைப்புக்களுக்கு ஏற்ற வகையில் கற்கள், செங்கற்கள், மரம், உலோகம், கண்ணாடி போன்ற பல்வேறு வகையான கட்டிடப்பொருட்களைப் பயன்படுத்தி அமைக்கப்படுகின்றன. சில இடங்களில் இவை இருக்கைகளுடன் கூடியவையாகவும் வடிவமைக்கப்படுகின்றன. பெரும்பாலும், ஒரு பகுதியில் அமைந்துள்ள அல்லது ஒரு போக்குவரத்துச் சேவை நிறுவனத்துக்கு உரிய இவ்வமைப்புக்கள் ஒரே வடிவமைப்பில் அமைந்திருப்பதுண்டு.


இத்தகைய அமைப்புக்கள் விளம்பரங்களையும், பிறவகையான அறிவித்தல்களையும் கொண்டிருப்பதைக் காணலாம். விளம்பரங்களுக்கு இடமளிப்பதன்மூலம் சேவை நிறுவனங்கள் இவ்வமைப்புக்களை நிறுவுவதற்கும், அவற்றைப் பராமரிப்பதற்குமான செலவுகளில் ஒரு பகுதியை ஈடு செய்யமுடிகிறது. சில இடங்களில், வணிக நிறுவனங்கள், சமூக அமைப்புக்கள் அல்லது தனியார் இத்தகைய அமைப்புக்களை மக்களுடைய நலன்கருதி அமைத்துக் கொடுப்பதும் உண்டு.


வெப்பமான தட்பவெப்ப நிலை கொண்ட நாடுகள் சிலவற்றில் இவ்வாறான அமைப்புக்கள் காற்றுப்பதனம் செய்யப்படுகின்றன.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.