பூர்வீக சங்கீத உண்மை
பூர்வீக சங்கீத உண்மை என்னும் இந்நூலை, 1930 ஆம் ஆண்டு, புகழ் பெற்ற நாதசுர மேதை மதுரை பொன்னுசாமிப் பிள்ளை எழுதினார். இசை வரலாற்றில் இந்நூல் மிகப்பெரிய சிந்தனைப் புரட்சியைத் தோற்றுவித்தது. ஆனால், தமிழிசை ஆய்வு வரலாற்றில், இவருக்கும், இந்நூலுக்கும் உரிய இடம் தரப்படாமல் மறைக்கப்பட்டது.
நூற்சிறப்புகள்
- பெரும்பண்கள், கிளைப்பண்கள், சுர அமைப்புகள், இசை நுணுக்கங்கள் ஆகியன குறித்து மிகவும் நுணுக்கமாக ஆராய்ந்து, இயற்றப்பட்ட நூல் இதுவாகும்.
- இதில் தமிழிசை இலக்கண மரபு வழி நின்று, கர்நாடக இசையில் வழங்கிவரும் 72 மேளகர்த்தா இராகங்களைத் தர்க்கரீதியாக நிராகரித்து, அவற்றுள் 32 மேளகர்த்தாக்கள் மட்டுமே பெரும் பண்கள் என நிறுவ முனைந்தது.
- அகமதாபாத்தில் நடைபெற்ற அகில இந்திய இசை மாநாட்டுக்கு மைசூர் மன்னரின் உதவியோடு சென்று, அம்மாநாட்டில் கலந்து கொண்டார். இம்மாநாட்டில் இவர் கூறிய தாய் இராகம் 32 என்கிற கொள்கை விவாதிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது.
நூலமைப்பு
இந்நூல் ஐந்து பகுதிகளைக் கொண்டுள்ளது.
- நூன் மரபு
- கர்த்தா ராகத்தின் நிர்ணயம்
- மூர்ச்சை பிரசுதாரம்
- கர்த்தா இராகங்களும் அனுபவத்திலிருக்கிற ஜன்ய இராகங்களும்
- இசை நுணுக்கம் என்னும் சுதிபேத ராக சூட்சுமம்
நூற்பொருட்கள்
- பன்னிரு சுரங்கள் பற்றியும், பன்னிரு சுரங்களும் வான் மண்டலத்தில் நிலவும் பன்னிரு இராசிகளில் நிற்கும் முறையையும் விளக்குகின்றது.
- பண், பண்ணியல், திறம், திறத்திறம் அமையும் நிலைகளை விளக்குகிறது.
- பழந்தமிழ் மக்கள் 32 தாய் இராகங்களில் பாடி வந்துள்ள நிலையை எடுத்துரைக்கின்றது.
- பரதர், சாரங்கதேவர், சோமநாதர், புண்டரீக விட்டலர், வெங்கடாத்ரி ராஜா, வேங்கடமகி ஆகியவர்களின் இசை இலக்கண அமைப்புகளைக் குறிப்பிட்டு, பொன்னுச்சாமியின் 32 தாய் இராகங்கள் தெளிவுபடுத்தப்பட்டு, அவைகளை உண்மையானவை என்றும் விளக்கியுள்ளார்.
இவற்றையும் பார்க்கவும்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.