பிரேசிலின் முதலாம் பெட்ரோ

டொம் பெட்ரோ I (Pedro I, ஆங்கிலம்: Peter I; 12 அக்டோபர் 1798 24 செப்டம்பர் 1834), "விடுவித்தவர்" என்ற விளிப்பெயருடைய,[1] முதலாம் பெட்ரோ பிரேசிலை நிறுவியவரும் அரசரும் ஆவார். போர்த்துக்கல்லின் அரசராக டொம் பெட்ரோ IV, என்ற பட்டப்பெயருடன் சிறிது காலம் ஆண்டவர். போர்த்துக்கல்லிலும் இவரை "விடுவித்தவர்" என்றும் "சிப்பாய் அரசர்" என்றும் அழைக்கின்றனர்.[2] லிசுபனில், அரசர் டொம் ஆறாம் யோவானுக்கும் அரசி கார்லோட்டா யோக்குனாவிற்கும் நான்காவது மகவாகப் பிறந்த பெட்ரோ I பிரகன்சா குடும்பத்தைச் சேர்ந்தவர். 1807இல் போர்த்துக்கல்லை பிரெஞ்சு துருப்புக்கள் ஆக்கிரமித்தப்போது தமது குடும்பத்துடன் பிரேசிலுக்கு தப்பியோடினார்.

பிரேசிலின் முதலாம் பெட்ரோ
போர்த்துக்கல்லின் நான்காம் பெட்ரோ
பேரரசர் டொம் பெட்ரோ I 35 அகவையில், 1834
பிரேசிலியப் பேரரசர்
ஆட்சிக்காலம் 12 அக்டோபர் 1822 – 7 ஏப்ரல் 1831
முடிசூடல் 1 திசம்பர் 1822
பின்னையவர் பெட்ரோ II
போர்த்துக்கல், அல்கார்வெசு அரசர்
ஆட்சிக்காலம் 10 மார்ச் 1826 – 2 மே 1826
முன்னையவர் யோவான் VI
பின்னையவர் மாரியா II
வாழ்க்கைத் துணை
  • ஆத்திரியாவின் மாரியா லெபோல்டினா
  • அமேலி
வாரிசு
மாரியா II, மிகுவல், யோவான் கார்லோசு, யானுவாரியா, பவுலா, பிரான்சிஸ்கா, பெட்ரோ II, பிரேசில் பேரரசர், மாரியா அமேலியா
முழுப்பெயர்
பெட்ரோ டி அல்கான்டரா பிரான்சிஸ்கோ அன்டோனியோ யோவான் கார்லோசு சேவியர் டி பவுலா மிகுவல் ராபேயில் யோக்கிம் ஓசே கோன்சாக்கா பாசுக்கோல் சிபிரியனோ செரஃபிம்
குடும்பம் பிரகன்சா குடும்பம்
தந்தை யோவான் VI, போர்த்துக்கல் பேரரசர்
தாய் எசுப்பானியாவின் கார்லோட்டா யோக்குனா
பிறப்பு அக்டோபர் 12, 1798(1798-10-12)
கியூலுசு அரண்மனை, லிஸ்பன்
இறப்பு 24 செப்டம்பர் 1834(1834-09-24) (அகவை 35)
கியூலுசு அரண்மனை, லிஸ்பன்
அடக்கம் பிரேசிலிய விடுதலைக்கான நினைவுச்சின்னம், சாவோ பாவுலோ
கையொப்பம்
சமயம் உரோமானியக் கிறித்துவம்

1820இல் லிசுபனில் எழுந்த சமத்துவப் புரட்சியை எதிர்கொள்ள பெட்ரோவின் தந்தை யோவான் போர்த்துக்கல்லிற்கு திரும்ப வேண்டி வந்தது. ஏப்ரல் 1821இல் யோவான் பிரேசிலை தமது சார்பாளராக ஆட்சிபுரிய மகன் பெட்ரோவை நியமித்து நாடு திரும்பினார். புரட்சியாளர்களின் அச்சுறுத்தல்களையும் போர்த்துக்கேய துருப்புக்களின் ஒழுங்கீனத்தையும் எதிர்கொண்ட பெட்ரோ அவற்றை அடக்கினார். 1808இல் பிரேசிலுக்குக் கொடுக்கப்பட்ட அரசியல் தன்னாட்சியை மீட்கும் போர்த்துக்கல் அரசின் முடிவிற்கு பிரேசிலில் பரவலான எதிர்ப்பு எழுந்தது. பெட்ரோ பிரேசிலியர்களுடன் இணைந்து கொண்டு செப்டம்பர் 7, 1822இல் பிரேசிலின் விடுதலையை அறிவித்தார். அக்டோபர் 12 அன்று பிரேசிலின் பேரரசராக அறிவித்துக் கொண்டார். போர்த்துக்கல்லிற்கு ஆதரவாக போரிட்ட படைகளை மார்ச்சு, 1824க்குள் வென்று ஆட்சியை நிலைப்படுத்தினார். பிரேசிலின் வடகிழக்கில் உருவான மாநிலப் பிரிவினைவாதிகளின் எதிர்ப்பையும் அடக்கினார்.

1825இல் தெற்கு மாநிலமான சிஸ்பிளாட்டினாவில் எழுந்த பிரிவினைப் புரட்சியும் இரியோ டி லா பிளாட்டா ஐக்கிய மாநிலங்களின் பிரிவினை முயற்சியும் சிஸ்பிளாட்டினா போரைத் தொடுக்க காரணமாயிற்று. 1826இல் மார்ச்சு மாதம் சிறிது காலத்திற்காக போர்த்துக்கல்லின் அரசரானார்; இப்பொறுப்பை தமது மூத்த மகள் டொனா மாரியா IIவிற்காக விட்டுக் கொடுத்தார். 1828இல் சிஸ்பிளாட்டினாப் போரில் பிரேசில் அம்மாநிலத்தை இழந்தது. அதே ஆண்டு லிசுபனில் அவரது மகளிடமிருந்து ஆட்சியை பெட்ரோவின் தம்பி மிகுவல் கைப்பற்றிக் கொண்டார். பேரசரின் சர்ச்சைக்குரிய காதல் விவகாரம் அவருக்கு இழுக்கானது. பிரேசிலிய நாடாளுமன்றத்தில் அரசை தேர்ந்தெடுக்கும் உரிமை அரசருக்குள்ளதா நாடாளுமன்றத்திற்குரியதா என்ற விவாதம் வலுப்பெற்றது. பிரேசில், போர்த்துக்கல் பிரச்சினைகள் இரண்டையும் ஒருசேர கவனிக்க இயலாத அரசர் 7 ஏப்ரல் 1831 அன்று தமது வாரிசும் மகனுமான டொம் பிரேசிலின் இரண்டாம் பெட்ரோவிடம் ஆட்சியை ஒப்படைத்து நாடு திரும்பினார்.

மேற்சான்றுகள்

  1. Viana 1994, பக். 252.
  2. Saraiva 2001, பக். 378.

மேற்கோள் நூற்றொகை

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.