பிராங்க் கெரி

பிராங்க் ஓவென் கெரி (Frank Owen Gehry) (பிறப்பு: பிப்ரவரி 28, 1929) ஒரு கட்டிடக்கலைஞர். சிற்பங்களைப் போன்ற வடிவமைப்புக் கொண்ட இவரது கட்டிடங்கள் மூலம் இவர் பரவலாக மக்களுக்கு அறிமுகமானவர். மினுக்கம் கொண்ட உலோகங்களினால் மூடப்பட்ட வளைவுகள் நெளிவுகளோடுகூடிய தோற்றம் கொண்ட கட்டிடங்களை வடிவமைத்ததன் மூலம் இவர் மக்களைக் கவர்ந்தார். இவரது பாணியைச் சிறப்பாக விளக்கும், ஸ்பெயின் நாட்டின் பில்பாவோ என்னுமிடத்தில் அமைந்துள்ள குகென்ஹெய்ம் அரும்பொருட் காட்சியகம் (Guggenheim Museum), டைட்டானியம் உலோகத்தால் மூடப்பட்டதாகும்.

பிராங்க் கெரி
பிறப்பு28 பெப்ரவரி 1929 (age 90)
தொராண்டோ
படித்த இடங்கள்
பணிகட்டடக் கலைஞர்
குறிப்பிடத்தக்க பணிகள்Stata Center
விருதுகள்Companion of the Order of Canada, Princess of Asturias Award for the Arts, honorary doctorate of the University of Alcala, Queen Elizabeth II Golden Jubilee Medal, Queen Elizabeth II Diamond Jubilee Medal
கெரியின் மிகப் புகழ் பெற்ற கட்டிடம், குகென்ஹெய்ம் அரும்பொருட் காட்சியகம், பில்பாவோ, ஸ்பெயின்

தோற்றமும் வாழ்க்கையும்

கனடா நாட்டிலுள்ள டொராண்டோவில், யூதக் குடும்பமொன்றில் பிறந்த இவர், தனது 17 ஆவது வயதில் கலிபோர்னியாவுக்கு இடம் பெயர்ந்தார். அங்கே லாஸ் ஏஞ்சலீஸ் நகரக் கல்லூரியில் பயின்ற பின்னர், தென் கலிபோர்னியப் பல்கலைக்கழகத்தின், கட்டிடக்கலைக் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றார். இதன் பின் ஹார்வாட் வடிவமைப்புக்கான பட்டப்படிப்புக் கல்லூரியில் சேர்ந்து நகரத் திட்டமிடல் கல்வி கற்றார். இன்று இவர் ஒரு அமெரிக்கக் குடிமகனாகக் கலிபோர்னியாவில் வாழ்ந்து வருகிறார்.

மில்லெனியம் பூங்காவிலுள்ள பிரிட்ஸ்கர் மண்டபம்

தத்துவார்த்த நிலப்பாடு

கெரியின் பாணி பிந்திய நவீனத்துவத்தில் (late modernism) இருந்து உருவானதாகும். இவருடைய கட்டிட அமைப்புக்களில் காணும் முறுகிய உருவ அமைப்பு (forms), நவீன கட்டிடக்கலையின், கட்டமைப்புவிலக்கவாதக் (deconstructivist) குழுமத்தினரின் கோட்பாடுகளை வெளிப்படுத்தி நிற்பதாகக் கருதப்படுகிறது. கட்டமைப்புவிலக்கவாத இயக்கம், சமூகவியல்சார்ந்த இலக்குகள் மற்றும் செயற்பாட்டுத் தேவைகளுக்கு முக்கியத்துவம் தராமை மூலமாக, நவீன கட்டிடக்கலைக் கோட்பாடுகளிலிருந்து விலகியிருப்பதைக் காணலாம். தொடக்ககால நவீனத்துவ கட்டிட அமைப்புக்களைப் போல், கட்டமைப்புவிலக்கவாத அமைப்புக்கள் குறிப்பிட்ட சமூக எண்ணக்கருத்துகளை வெளிப்படுத்துவனவாக அமையவில்லை. அத்துடன் நவீனத்துவவாதிகள் மத்தியில் பிரபலமாக இருந்த "செயற்பாட்டைப் பின்பற்றியே வடிவம் அமைகின்றது" (form follows function) என்ற நம்பிக்கையையும் கட்டமைப்புவிலக்கவாதக் கட்டிடங்கள் வெளிப்படுத்தவில்லை. கெரி தனது வடிவமைப்புகள் மூலம் கட்டமைப்புவிலக்கவாதக் கருத்துக்கு உருவம் கொடுத்ததுடன் அதைத் தொடர்ச்சியாகச் செம்மைப்படுத்தியும் வந்தார். ஐக்கிய அமெரிக்காவின் சாந்தா மொனிக்கா பகுதியிலேயே இந்தப் பாணி தொடர்பான சோதனை வடிவமைப்புகள் நிகழ்ந்ததாலும், இப் பாணியிலான கட்டிடங்கள் அப்பகுதியில் செறிந்து காணப்படுவதாலும், இது சாந்தா மொனிக்கா குழுமக் கட்டிடக்கலை (Santa Monica school of architecture) எனவும் அறியப்படுகின்றது.

விமர்சனங்கள்

கெரி, நவீன கட்டிடக்கலைத்துறையின் ஒரு புகழ்பெற்ற மனிதராவார். இவருடைய வீடு உட்பட இவர் வடிவமைத்த கட்டிடங்கள் பல இன்று சுற்றுலாப் பயணிகளைக் கவரும் இடங்களாக உள்ளன. இதனால் பல அரும்பொருட் காட்சியகங்களும், நிறுவனங்களும், நகரங்களும் வடிவமைப்பின் முத்திரையைப் பொறிப்பதற்காகவே இவரது சேவைகளை நாடி நிற்கின்றன.

Chiat/Day Building, in Venice, California. Designed with help from Claes Oldenburg and Coosje van Bruggen.

சீட்டிலில் அமைந்துள்ள அநுபவ இசைத் திட்டத்தின் இசை அரும்பொருட் காட்சியகம் (Seattle's EMP Music Museum) இவ்வாறான ஒரு கட்டிடமாகும். இந்தக் கட்டிடம், "மைக்குரோசொவ்ட்" நிறுவனத்தைச் சேர்ந்த போல் அலன் என்பவருடைய தனிப்பட்ட இசைப் பொருட் சேமிப்புகளைக் காட்சிப்படுத்தும் நோக்கத்துக்காக அமைக்கப்பட்டது. இது மறுக்கமுடியாதபடி தனிச்சிறப்பு வாய்ந்த ஒரு கட்டிடமாக உருவாகியிருந்தபோதும், பெருமளவு விமர்சனங்களுக்கும் இது உட்பட்டது. இயல்புக்கு ஒத்துப்போகாத நிறங்களின் பயன்பாடு, கட்டிட மற்றும் இயற்கைச் சூழலுடன் ஒத்திசையாமை, மற்றும் இதன் பாரிய அளவு என்பன கெரி கட்டிடத்தின் அடிப்படையையே பிழையாகப் புரிந்து கொண்டார் என்ற குற்றச்சாட்டுகளுக்கு அவரை இலக்காக்கின. 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஈபெல் கோபுரம் கட்டப்பட்டபோது உருவான விமர்சனங்களைச் சுட்டிக்காட்டும் இவரது ஆதரவாளர்கள், வரலாற்று நோக்கின் அடிப்படையிலேயே ஒரு கட்டிடத்தை நியாயமான முறையில் மதிப்பீடு செய்யமுடியும் என்கிறார்கள்.

கெரி தனது வடிவமைப்புகளில் திரும்பத் திரும்ப ஒரே அம்சங்களையே பயன்படுத்துவதாக, அண்மையில், விமர்சகர்களால் குற்றம் சாட்டப்பட்டார். குகென்ஹெய்ம் அருங்காட்சியகத்தில் பயன்படுத்திய உலோக போர்வையையே எல்லாக் கட்டிடங்களிலும் பயன்படுத்தியதை அவர்கள் சுட்டிக் காட்டினார்கள்.

இவர் வடிவமைத்த கட்டிடங்கள்

கட்டிமுடிக்கப்பட்டவை

  • கண்காட்சி மையம், மெரிவெதர் போஸ்ட் மண்டபம், மற்றும் ரவுஸ் நிறுவனத் தலைமைச் செயலகம், கொலம்பியா, மேரிலாந்து, ஐக்கிய அமெரிக்கா (1974)
  • லோயோலா சட்டக் கல்லூரி, லாஸ் ஏஞ்சலீஸ், கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா (பல்வேறு கட்டிடங்கள், 1978 - 2002)

  • சாந்தா மொனிக்கா பிளேஸ், சாந்தா மொனிக்கா, கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா (1980)
  • எட்ஜ்மார் விற்பனைத் தொகுதி, சாந்தா மொனிக்கா, கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா (1984)
  • சியாத்/டே கட்டிடம், வெனிஸ், கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா (1985 -1991)
  • வித்ரா வடிவமைப்பு அரும்பொருட் காட்சியகம், வெயில் அம் ரெயின், ஜெர்மனி (1989)
  • பிரடெரிக் வைஸ்மன் ஓவிய அரும்பொருட் காட்சியகம், மினெசோத்தா பல்கலைக்கழகம், மினெசோத்தா, ஐக்கிய அமெரிக்கா (1990)
  • அயோவா உயர் தொழில்நுட்பச் சோதனைக்கூடங்கள், அயோவாப் பல்கலைக்கழகம், அயோவா நகர், அயோவா, ஐக்கிய அமெரிக்கா (1987 - 1992)
  • காட்சிக் கலைகள் மையம், தொலேடோ பல்கலைக்கழகம், தொலேடோ, ஓஹியோ, ஐக்கிய அமெரிக்கா (1993)
  • அமெரிக்க மையம், பாரிஸ், பிரான்ஸ் (1994)
  • த டான்சிங் ஹவுஸ், பிராக், செக் குடியரசு (1995) Photo 1, Photo 2, Photo 3
  • குகென்ஹெய்ம் அரும்பொருட் காட்சியகம், பில்பாவோ, ஸ்பெயின் (1997)
  • டெர் நெயூ ஸொல்ஹோவ், டுசெல்டோர்வ், ஜெர்மனி (1999)
  • மூலக்கூற்று ஆய்வுகளுக்கான வொண்ட்ஸ் மையம், சின்சினாட்டி பல்கலைக்கழகம், ஓஹியோ, ஐக்கிய அமெரிக்கா (1999)
  • டிஜி வங்கிக் கட்டிடம், பரிசெர் பிலாட்ஸ் 3, பெர்லின், ஜெர்மனி (2000)
  • ஈஎம்பி திட்டம், சியாடில், வொஷிங்டன், ஐக்கிய அமெரிக்கா (2000)
  • கெரி கோபுரம், ஹனோவர், ஜெர்மனி (2001)
  • ஐசே மியாக்கே, Flagship Store, நியூயார்க், ஐக்கிய அமெரிக்கா (2001)
  • பீட்டர். பி. லூயிஸ் கட்டிடம், கிளீவ்லாந்து, ஓஹியோ, ஐக்கிய அமெரிக்கா (2002)
  • நிகழ்த்து கலைகளுக்கான ரிச்சர்ட் பி. பிஷர் மையம், பார்ட் கல்லூரி, நியூயோர்க், ஐக்கிய அமெரிக்கா (2003)
  • மகீஸ் மையம், டுண்டீ, ஸ்கொட்லாந்து (2003)
  • வால்ட் டிஸ்னி அரங்கம், லாஸ் ஏஞ்செலீஸ், கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா (2003)
  • பிரிட்ஸ்கர் மண்டபம், மில்லெனியம் பூங்கா, சிகாகோ, இலினொய்ஸ், ஐக்கிய அமெரிக்கா (2004)

கூடுதல் படிமங்கள்

கீழேயுள்ளவை கெரியின் கட்டிடங்களைக் காட்டும் வேறு படங்களாகும்.

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.