பவளப் பாறை

பவளப் பாறைகள் (Coral Reefs) என்பவை கடலினுள் பவளம் எனப்படும் ஒரு உயிரினத்தால் சுரக்கப்படும் கல்சியம் கார்பனேட்டினால் உருவாகின்றன. பெரும்பாலும் இவை காணப்படும் பகுதி பூமத்தியரேகைக்கு கீழே உள்ள வெப்ப நாட்டு கடல் பகுதிகளும், பசிபிக் பெருங்கடலும் ஆகும். இந்தியாவில், அந்தமான் தீவுகளிலும், லட்சத் தீவுகளை ஓட்டிய கடல் பகுதிகளிலும் இவை காணக்கிடைக்கின்றன.

பவளப் பாறைகளின் சில உயிரியற் பல்வகைமை

பவளப்பாறைகளில் கண்டத்திட்டுப் பவளப்பாறைகள், தடுப்புப் பவளப்பாறைகள்கரை விலகிய பவள பாறை), வட்டப் பவளத்திட்டுகள் என மூன்று வகைகள் உள்ளன.[1]

பசிபிக் பெருங்கடலில் பல அழகான வண்ணங்களில் பவளப்பாறைகள் அமைந்துள்ளன. இவை பச்சை, கருஞ்சிவப்பு, பழுப்பு, மஞ்சள் முதலான நிறங்களில் காணப்படுகின்றன. மேலும் இவை பல்வேறு கடல் உயிரினங்கள் வாழ்வதற்கான இடமாகவும் இருக்கின்றன. இவை "கடல்களின் மழைக்காடுகள்" என அழைக்கப்படுகின்றன. இவை 25 வீதமான கடல் வாழ் உயிரினங்களின் வாழிடமாக இப்பவளப் பாறைகள் காணப்படுகின்றன.

பவளப்பாறை உருவாக்கம்

பவளம் எனும் சிறிய அங்கிகளே பவளப்பாறைகளை உருவாக்குகின்றன. முள்ளந்தண்டு அற்ற இந்த உயிரினத்தை பொலிப் என்று அழைப்பர். இந்தப் பொலிப் உயிரினங்கள் மென்மையான மற்றும் ஒளி ஊடுருவும் தன்மையுடைய ஒரு உயிரினமாகும். இவ்வாறான ஆயிரக்கணக்கான பொலிப் உயிரினங்கள் ஒன்று சேர்வதாலேயே பவளப்பாறைகள் உருவாகின்றன. இவை கடல் நீரிலிருந்து பெற்றுக்கொள்ளும் கல்சியம் ஆனது கல்சியம் கார்பனேட் ஆக மாறுவதால் அவை கற்பாறைகள் மீது ஒட்டிக் கொள்வதால் பவளப் பாறைகளாக மாறுகின்றன.

பவளப்பாறைகள் உருவாகத் தேவையான சூழ்நிலை

உலகின் அனைத்து சமுத்திரங்களிலும் பவளப்பாறைகள் உருவாவதில்லை. இவை உருவாவதற்கு விசேட சுற்றுச்சூழல் அவசியம் ஆகும். அவையாவன:

  • சமுத்திர நீரின் வெப்பநிலை 20 °C - 24 °C இற்கு இடைப்பட்டதாக இருக்க வேண்டும்.
  • சமுத்திர நீரின் ஈரப்பதம் 30 சத வீதத்தில் இருந்து 35 சத வீதம் வரை இருக்க வேண்டும்.
  • சூரிய ஒளி சமுத்திரத்தின் ஆழ்பகுதி வரை நன்கு ஊடுருவ வேண்டும்.
  • கடல் அலை குறைவாக இருக்க வேண்டும்.

இவற்றையும் பார்க்க

வெளி இணைப்புகள்

உசாத்துணை

  1. அறிவியல் உலகம் ஓர் அறிமுகம்-6, நீர்வாழ்வன, என். சீனிவாசன், வித்யா பப்ளிகேசன்சு, சென்னை, முதற்பதிப்பு, திசம்பர் 1999
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.