பழுப்புக் கொழுப்பு

பழுப்புக் கொழுப்பு (brown fat) என்பது கொழுப்பிழையத்தின் இரு வகை இழையங்களுள் ஒன்றாகும்.கொழுப்பிழையத்தின் மற்றொரு வகை வெள்ளைக் கொழுப்பு இழையமாகும்.

வெள்ளைக் கொழுப்புடன் வேறுபடுதல்

இது பிறந்த குழந்தைகளிலும் குளிர்காலத் தூக்கம் (hibernation) மேற்கொள்ளும் விலங்குகளிலும் அதிகமாகக் காணப்படும்[1]. இதன் முக்கியப் பணி வெப்ப உற்பத்தி (thermogenesis) ஆகும். ஒரு தனித்த கொழுப்புத் துளியைக் கொண்ட வெள்ளைக் கொழுப்புடன் ஒப்பிடுகையில், பழுப்புக் கொழுப்பில் எண்ணற்ற சிறிய கொழுப்புத் துளிகளும் அதிக எண்ணிக்கையிலான இழைமணிகளும் உள்ளன. இதன் இழைமணிகளில் உள்ள இரும்பே (iron) இதன் பழுப்பு நிறத்திற்குக் காரணமாகும்[2]. பழுப்புக் கொழுப்பு இழையத்திற்கு அதிக ஆக்சிசன் தேவையிருப்பதால், வெள்ளைக் கொழுப்பு இழையத்தை விட பழுப்புக் கொழுப்பு இழையத்தில், அதிகளவிலான குருதி மயிர்க்குழாய்கள் (capillaries) இருக்கின்றன.

உயிர்வேதியியல்

இழைமணிகளில் நடக்கும் இலத்திரன் கடத்தல் சங்கிலி (electron transport chain) மூலமாக ஏ.டி.பி (ATP) உற்பத்தி ஆகிறது. இலத்திரன் கடத்தல் சங்கிலி இரண்டு கூறுகளை உடையது. அவை, ஆக்சிசனேற்றம் மற்றும் பாஸ்ஃபோ ஏற்றம் (phosphorylation) ஆகும். ஆக்சிசனேற்றத்தால் உண்டாகும் ஆற்றலைக் கொண்டே பாஸ்ஃபோ ஏற்றம் நடைபெறுகிறது. இவ்விரு கூறுகளையும் பிரிக்கும் போது (uncoupling) ஆக்சிசனேற்றத்தினால் உண்டாகும் ஆற்றலால் வெப்பம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தப் பிரிக்கும் வேலையைத் தான் பழுப்புக் கொழுப்பு இழையத்திலுள்ள தெர்மோஜெனின் (thermogenin) (வெப்ப உருவாக்கி) எனும் புரதம் செய்கிறது.

பிறந்த குழந்தைக்குப் பாதுகாப்பு

புதிதாகப் பிறந்த குழந்தைகள் வெப்பத்தை வெகுவில் இழக்கக் கூடியவை.

இதற்கான காரணங்களாவன:

ஆகவே, வெப்ப உற்பத்திக்கான ஒரு வழியாக இயற்கை அளித்ததே பழுப்புக் கொழுப்புத் திசுவாகும். பிறந்த குழந்தையின் உடலளவில் ஐந்து விழுக்காடு பழுப்புக் கொழுப்பு இழையமே. இது குழந்தையின் பின் பகுதி, தோள்ப்பட்டைகள் ஆகியவற்றில் அதிகம் காணப்படும்.

பெரியவர்களில் காணப்படுதல்

பழுப்புக் கொழுப்பில் இருந்து உருவாகும் ஹைபர்னோமா கட்டியின் நுண்ணோக்கிப் படம்

குழந்தை வளர்ந்ததும் பழுப்பு நிறத்தை அளிக்கும் இழைமணிகள் மறைந்து அது வெள்ளைக் கொழுப்பு போல் மாறி விடுவதாக நம்பப்பட்டது. ஆனால் புதிய ஆராய்ச்சிகளின் முடிவுகள் இதை மறுக்கின்றன. பாசிட்ரான் வெளிவிடும் வெட்டுவரைவியன் (positron emission tomography) மூலம் ஆராய்ந்ததில் பெரியவர்களிலும் மேல் மார்பு மற்றும் கழுத்துப் பகுதியில் பழுப்புக் கொழுப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. வெகு அபூர்வமாக இந்த பழுப்புக் கொழுப்பு ஹைபர்னோமா (hybernoma) எனும் கட்டியாக மாறலாம்.

கருவியல்

பழுப்புக் கொழுப்புத் திசுவும் தசைத் திசுவும் ஒரே குருத்து திசுவில் (stem cell) இருந்து வளர்வதாகத் தெரிகிறது.

மேற்கோள்கள்

  1. Gesta S, Tseng YH, Kahn CR (October 2007). "Developmental origin of fat: tracking obesity to its source". Cell 131 (2): 242–56. doi:10.1016/j.cell.2007.10.004. பப்மெட்:17956727.
  2. Enerbäck S (2009). "The origins of brown adipose tissue". N Engl J Med 360 (19): 2021–2023. doi:10.1056/NEJMcibr0809610. பப்மெட்:19420373. http://content.nejm.org/cgi/content/full/360/19/2021.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.