பரமேசுவரா
பரமேசுவரா (Parameswara, 1344-1414) மலாக்கா பேரரசை உருவாக்கியவர். 1389 இல் இருந்து 1398 வரை சிங்கப்பூரை ஆட்சி செய்தவர். இவருடைய மற்ற பெயர் ஸ்ரீ மகாராஜா பரமேசுவரா. இவர் துமாசிக் எனும் இடத்தில் இருந்து வந்து மலாக்காவை 1402-இல் உருவாக்கினார். துமாசிக்கின் புதிய பெயர் சிங்கப்பூர்.
பரமேசுவரா | |||||
---|---|---|---|---|---|
மலாக்காவின் முதலாவது பேரரசர் | |||||
![]() | |||||
ஆட்சி | மலாக்கா சுல்தானகம்: கிபி 1400-1414 | ||||
முன்னிருந்தவர் | ஸ்ரீ ராணா வீர கர்மா, துமாசிக் அரசர் | ||||
ஸ்ரீ ராம விக்ரமா | |||||
வாரிசு(கள்) | ஸ்ரீ ராம விக்ரமா | ||||
| |||||
மரபு | ஸ்ரீ விஜயா பேரரசு | ||||
தந்தை | ஸ்ரீ ராணா வீர கர்மா, துமாசிக் அரசர் | ||||
அடக்கம் | புக்கிட் லாராங்கான், கென்னிங் ஹில், சிங்கப்பூர் அல்லது தஞ்சோங் துவான், போர்டிக்சன் |
சொல் இலக்கணம்
பரமேஸ்வரன் (परमेश्वर) எனும் சொல் சமஸ்கிருத மொழியில் இருந்து தருவிக்கப் பட்ட ஒரு தமிழ்ச் சொல். பரமா எனும் சொல்லும் ஈசுவரன் எனும் சொல்லும் இணைந்து பெற்றதே பரமேசுவரன் எனும் சொல் ஆகும். இந்துக் கடவுளான சிவனுக்கு மற்றொரு பெயர் ஈசுவரன்.
சான்றுகள்
மலாக்கா வரலாற்றைப் பற்றி இதுவரையிலும் மூன்று பதிவுகள் மட்டுமே சான்றுகளாகக் கிடைத்து உள்ளன.[1] முதலாவது பதிவு கோர்டின்கோ டி எரேடியா (Gordinho D'Eredia) எனும் போர்த்துகீசிய மாலுமியின் பதிவு. 1600 ஆம் ஆண்டு வாக்கில் பதியப் பட்டது. அதில் பரமேஸ்வரா எனும் பெயர் பெர்மிச்சுரி (Permisuri) என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.[1]
அடுத்தப் பதிவு செஜாரா மெலாயு (Sejarah Melayu - Malay Annals). மலாக்கா பேரரசு உச்சத்தில் இருந்த போது மலாக்காவில் என்ன நடந்தது என்பதை அந்த மலாய் வரலாற்றுப் பதிவேடுகளில் காண முடிகிறது. இருப்பினும் அந்த மலாய் வரலாற்றுப் பதிவேடுகளை 1612 ஆம் ஆண்டு ஜொகூர் சுல்தானகம் மறுதொகுப்புச் செய்தது.
செஜாரா மெலாயு மறுதொகுப்பு
மலாக்கா எவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டது; மலாக்காவை ஆட்சி செய்தவர்களின் வரலாறு; மலாக்கா எவ்வாறு வீழ்ச்சி அடைந்தது போன்ற விவரங்கள் அந்தப் பதிவேடுகளில் பதிவு செய்யப்பட்டு உள்ளன. ஆனால், பரமேஸ்வரா எனும் பெயர் செஜாரா மெலாயுவின் எந்த ஓர் இடத்திலும் இடம் பெறவில்லை.[1] ஆகவே, செஜாரா மெலாயு மறுதொகுப்புச் செய்யப்பட்டதால் வலுவான சான்றுகள் தேக்க நிலையை அடைகின்றன.
அடுத்தப் பதிவு சுமா ஓரியண்டல் (Suma Oriental) எனும் பதிவு. 1513 ஆம் ஆண்டு பதியப்பட்டது. இதை எழுதியவர் தோம் பைரஸ் (Tom Pires). இவர் ஒரு போர்த்துக்கீசியர். மலாக்காவைப் போர்த்துகீசியர்கள் கைப்பற்றிய பின்னர் எழுதப்பட்டது. பரமேஸ்வரா சிங்கப்பூரில் இருந்து வெளியேறிய வரலாற்றை இந்தப் பதிவு எடுத்துரைக்கின்றது.[1]
பரமேஸ்வரா என்பவர் ஸ்ரீ விஜயா பேரரசின் இளவரசர்; சிங்கப்பூரின் கடைசியான அரசர்; மலாயா தீபகற்பத்தின் மேற்கு கரை வழியாகப் பயணித்து மலாக்காவைத் தோற்றுவித்தார் என அந்தப் பதிவு சொல்கின்றது. மலாக்காவை செக்குயிம் டார்க்சா (Xaquem Darxa) என்றும் மொடவார்க்சா (Modafarxa) என்றும் தோம் பைரஸ் பதிவு செய்துள்ளார்.[1]
வாழ்க்கை வரலாறு
- 1344 - ஸ்ரீ ராணா வீரா கர்மா எனும் சிங்கப்பூர் ராஜாவுக்கு மகனாகப் பிறந்தார்.
- 1399 - தந்தையின் இறப்பிற்குப் பின் ஸ்ரீ மகாராஜா பரமேசுவரா எனும் பெயரில் சிங்கப்பூர் அரியணை ஏறினார்.
- 1401 - சிங்கப்பூரில் இருந்து வெளியேற்றப் பட்டார்.
- 1402 - மலாக்காவைத் தோற்றுவித்தார்.
- 1405 - சீனாவிற்குச் சென்று மிங் அரசரின் ஆதரவைப் பெற்றார்.
- 1409 - பாசாய் நாட்டின் இளவரசி மாலிக் உல் சாலி (Malik ul Salih) என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.[2]
- 1411 - சீனாவிற்கு மறுபடியும் சென்று மிங் அரசரிடம் பாதுகாப்பு நாடினார்.
- 1414 - தன்னுடைய 69 அல்லது 70 ஆவது வயதில் காலமானார்.
மலாக்காவைக் கண்டுபிடித்தல்
ஜாவாவை ஆண்டு வந்த ஸ்ரீ விஜயா பேரரசின் செல்வாக்கு, 14-ஆம் நூற்றாண்டில் படிப்படியாகக் குறையத் தொடங்கியது. மலாய்த் தீவுக் கூட்டங்களில் இருந்த சிற்றரசர்களின் அச்சுறுத்தல்களும் அதிகரித்து வந்தன. ஸ்ரீ விஜயா எனும் பேரரசு ஜாவாத் தீவின் வரலாற்றில் மங்காதப் புகழைப் பெற்ற ஒரு மாபெரும் பேரரசு. சுற்று வட்ட அரசுகள் அனைத்தும் ஸ்ரீ விஜயா பேரரசிடம் திறை செலுத்தி வந்தன.[3]
திறை என்றால் கப்பம். ஒரு பேரரசுக்கு மற்றொரு சிற்றரசு செலுத்தும் வரியைத் தான் கப்பம் என்பார்கள். அப்படி மற்ற சிற்றரசுகளிடமிருந்து திறைகள் வாங்கிய ஸ்ரீ விஜயா பேரரசு, 1290 ஆம் ஆண்டில் ஜாவாவிலிருந்து விரட்டப் பட்டது. ஜாவாவில் சிங்கசாரி[4] எனும் ஓர் அரசு உருவானதும் ஸ்ரீ விஜயா பேரரசுவின் செல்வாக்கு சன்னம் சன்னமாகக் குறையத் தொடங்கியது. சிங்கசாரி வலிமை வாய்ந்த பெரும் அரசாகவும் மாறியது.
இந்தோனேசியாவில் இந்தியப் பேரரசுகள்
இந்தோனேசியாவைப் பல இந்தியப் பேரரசுகளும் சிற்றரசுகளும் 1000 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்து உள்ளன. அந்தப் பேரரசுகளைத் தோற்றுவித்தவர்கள்; எந்த ஆண்டில் எங்கே தோற்றுவித்தார்கள் எனும் சுருக்கமான விவரங்கள்:
- 1. பூரணவர்மன் - தர்மநகரப் பேரரசு (Tarumanagara) (கி.பி. 358 - 669 ஜாகர்த்தா)[5][6]
- 2. ஸ்ரீ ஜெயாசேனா - ஸ்ரீ விஜய பேரரசு (Srivijaya) (கி.பி. 650 - 1377 சுமத்திரா)[7]
- 3. கலிங்கர்கள் - சைலேந்திரப் பேரரசு (Shailendra) (கி.பி. 650 - 1025 மத்திய ஜாவா)[8][9][10]
- 4. ஸ்ரீ கேசரி வர்மதேவா - வர்மதேவா பேரரசு (Warmadewa) (கி.பி. 914 - 1181 பாலி)
- 5. சஞ்சாயா (Sanjaya Rakai) - மத்தாராம் பேரரசு (Medang Mataram Kingdom) (கி.பி. 732 - 1006 கிழக்கு ஜாவா)[11]
- 6. ராடன் விஜயா (Raden Wijaya) - மஜபாகித் பேரரசு (கி.பி. 1293 - 1527 ஜாவா)[12]
- 7. ராஜாசா (Rajasa) - சிங்காசாரி (Singasari) பேரரசு; (கி.பி 1222 - 1292 கிழக்கு ஜாவா)
ஸ்ரீ விஜயா பேரரசு
இந்தச் சிங்கசாரி அரசு, மஜாபாகிட் பேரரசின் வழித் தோன்றல் ஆகும். மலாயு எனும் இடத்தில் ஸ்ரீ விஜயா பேரரசின் அரண்மனை இருந்தது. அந்த அரண்மனையைச் சிங்கசாரி அரசு தாக்கிய சம்பவங்கள் நிறைய நடந்து உள்ளன. மலாயு எனும் இடம் இப்போது ஜாம்பி[13] என்று அழைக்கப் படுகின்றது. பின்னர், ஸ்ரீ விஜயா பேரரசு தன்னுடைய தலைநகரத்தைப் பலேம்பாங்கிலிருந்து மலாயுவிற்கு மாற்றியது.[14]
இருப்பினும் பலேம்பாங் முக்கியமான அரச நகராகவே விளங்கி வந்தது. 14 ஆம் நூற்றாண்டில் பலேம்பாங் அரச நகரமும், மஜாபாகிட் பேரரசின் கரங்களில் வீழ்ந்தது. அத்துடன் மாபெரும் ஸ்ரீ விஜயா பேரரசின் 1000 ஆண்டுகள் ஆளுமைக்கு ஒரு முற்றுப் புள்ளியும் வைக்கப் பட்டது.
பலேம்பாங் தோற்கடிக்கப் பின்னர், ஸ்ரீ விஜயா அரசக் குடும்பத்தினர், பிந்தான் தீவில் அடைக்கலம் அடைந்தனர். ஸ்ரீ விஜயா அரச குடும்பத்தினருடன், பல ஆயிரம் மக்களும் அந்தத் தீவில் தஞ்சம் அடைந்தனர். அடுத்தக் கட்டமாகப் பிந்தான் தீவில் தற்காலிகமாக ஸ்ரீ விஜயா ஓர் அரசாட்சியை உருவாக்கிக் கொண்டது. அதற்குச் சாங் நீல உத்தமன் என்பவர் அரசர் ஆனார்.[15][16] இந்தக் கால கட்டத்தில் துமாசிக் எனும் சிங்கப்பூரை தெமாகி எனும் ஒரு சிற்றரசர் ஆண்டு வந்தார்.
சாங் நீல உத்தமன்
இவரைச் சியாம் நாட்டு அரசு ஒரு சிற்றரசராக நியமனம் செய்து வைத்தது. 1324-இல் பிந்தான் தீவிலிருந்து வந்த நீல உத்தமன் திடீரென்று துமாசிக்கின் மீது தாக்குதல் நடத்தினார். அந்தத் தாக்குதலில் தெமாகி சிற்றரசர் கொல்லப் பட்டார். இதனால் நீல உத்தமன் சியாம் அரசின் கோபத்திற்கும் உள்ளானார். பின்னர் சிங்கப்பூர் எனும் பெயரில் ஓர் ஊர் உருவாக்கப் பட்டது. உருவாக்கியவர் நீல உத்தமன். அடுத்து வந்த 48 ஆண்டுகளுக்குச் சிங்கப்பூர் எனும் ஊராட்சி நீல உத்தமனின் கட்டுப்பாட்டில் இருந்தது.
ஸ்ரீ மகாராஜா சாங் உத்தாமா பரமேஸ்வரா
1403-இல் சீனாவில் இருந்து ஒரு சீனத் தூதர் சிங்கப்பூருக்கு வந்தார். அவர் சீன அரசரின் பிரதிநிதியாகும். அவர் நீல உத்தமனைச் சிங்கப்பூரின் அதிகாரப் பூர்வமான ஆட்சியாளராக நியமனம் செய்தார். அதைச் சீனா ஏற்றுக் கொண்டது. நீல உத்தமனுக்கு ஸ்ரீ மகாராஜா சாங் உத்தாமா பரமேஸ்வரா பத்தாரா ஸ்ரீ திரி புவானா (Sri Maharaja Sang Utama Parameswara Batara Sri Tri Buana) எனும் சிறப்புப் பெயரும் வழங்கப் பட்டது.
நீல உத்தமனுக்குப் பிறகு அவருடைய மகன் ஸ்ரீ பராக்கிரம வீர ராஜா என்பவர் சிங்கப்பூரின் ராஜாவாகப் பதவி ஏற்றார். இவர் 1372 லிருந்து 1386 வரை சிங்கப்பூரை ஆட்சி செய்தார். அந்தச சமயத்தில் சிங்கப்பூர் ஆட்சியில் சில திருப்பங்கள் ஏற்பட்டன. அதனால் நீல உத்தமனின் பேரனாகிய ஸ்ரீ ராணா வீரா கர்மா பதவி ஏற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
பரமேஸ்வராவின் வரலாற்றுப் பயணம்
இவர் சிங்கப்பூரை 13 ஆண்டுகள் ஆட்சி செய்தார். இந்தக் கால கட்டத்தில் மஜாபாகித் அரசு திடீரென்று சிங்கப்பூரின் மீது தாக்குதல் நடத்தியது. புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட சிங்கப்பூர் அரசு ஏற்கனவே மஜாபாகித்தின் மீது சில தாக்குதல்களையும் நடத்தியுள்ளது. அந்தத் தாக்குதல்களுக்குப் பழி வாங்கும் படலமாக மஜாபாகித் அரசின் திடீர் தாக்குதல் அமைந்தது.
ஸ்ரீ மகாராஜா பரமேஸ்வரா என்பவர் சாங் நீல உத்தமனின் கொள்ளுப் பேரன் ஆகும். இவர் மஜாபாகித்தின் தாக்குதலிலிருந்து தப்பிக்க நினைத்தார். அதனால் சிங்கப்பூரிலிருந்து வெளியேறினார். ஸ்ரீ மகாராஜா பரமேஸ்வரா தன்னுடன் சில நேர்மையான விசுவாசிகளையும் அழைத்துக் கொண்டு மலாயாவின் பெருநிலப் பகுதிக்குள் நுழைந்தார். மலேசியாவின் பழைய பெயர் மலாயா. மலாயாவின் வடக்குப் பக்கமாக முன்னேறி வரும் போது மூவார்[17]:245–246 எனும் இடத்தை அடைந்தார்.
மூவார் பகுதியில் பியாவாக் பூசோக் (அழுகிப் போன உடும்பு) எனும் ஓர் இடம் இருக்கிறது. அதற்கு அருகாமையில் கோத்தா பூரோக் எனும் மற்றோர் இடமும் இருக்கிறது. இந்த இரு இடங்களில் ஏதாவது ஓர் இடத்தில் தன்னுடைய புதிய அரசை உருவாக்கலாம் என்று பரமேஸ்வரா தீர்மானித்தார். நன்கு ஆராய்ந்து பார்த்ததில் அந்த இடங்கள் இரண்டுமே பரமேஸ்வராவுக்குப் பிடிக்கவில்லை. ஒரு புதிய அரசு அமைக்கப் பொருத்தமாகவும் அமையவில்லை. ஆகவே அவர் தொடர்ந்து வட திசையை நோக்கிப் பயணத்தை மேற்கொண்டார்.
மீன்பிடி கிராமம்
அப்படி போய்க் கொண்டு இருக்கும் போது செனிங் ஊஜோங் எனும் இடத்தை அடைந்தார். இந்தச் செனிங் ஊஜோங் இப்போது சுங்கை ஊஜோங் என்று அழைக்கப் படுகிறது. இந்த இடத்திலிருந்து சற்று தள்ளி ஒரு மீன்பிடி கிராமம் தென்பட்டது. அந்தக் கிராமம் பெர்த்தாம் ஆற்றின் துறைமுகத்தில் இருந்தது. பெர்த்தாம் ஆறு இப்போது மலாக்கா ஆறு என்று அழைக்கப் படுகின்றது.
அந்த மீன்பிடி கிராமம்தான் இப்போதைய மலாக்கா மாநகரம் உருவான இடம். இந்த இடத்தில் தான் ஒரு சருகுமான் ஒரு நாயை எட்டி உதைத்து ஆற்றில் தள்ளியது. நாய் மல்லாக்காக விழுந்ததாலும் பரமேஸ்வரா சாய்ந்து ஓய்வு எடுத்த மரத்தின் பெயர் மலாக்கா எனும் பெயர் கொண்டதாலும் அந்த இடத்திற்கு மலாக்கா என்று பெயர் வந்தது.[18]
பரமேஸ்வராவின் திருமணம்
இந்தக் கால கட்டத்தில் வட சுமத்திராவில் பாசாய் எனும் ஓர் சிற்றரசு இருந்தது. இது கடல் கரையோரமாக இருந்தச் சிற்றரசு. சுமத்திரா எனும் சொல் சமுத்திரம் எனும் சமஸ்கிருதச் சொல்லிலிருந்து வந்தது. இந்தப் பாசாய் சிற்றரசின் இளவரசி மாலிக் உல் சாலி (Malik ul Salih)என்பவரைப் பரமேஸ்வரா 1409 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். தன் பெயரை இஸ்கந்தார் ஷா என்றும் மாற்றிக் கொண்டார். ஷா என்பது ஓர் அரசரைக் குறிக்கும் பாரசீகச் சொல். பரமேஸ்வரா இறக்கும் வரையில் ஓர் இந்துவாக வாழ்ந்தார். மறைந்தும் போனார். ஆனால், தன்னுடைய குடிமக்களை மற்ற சமயங்களில் சேர்வதற்கு ஆதரவு வழங்கினார்.[19]
மலாக்கா சுல்தான்கள் | ஆட்சி காலம் |
---|---|
பரமேஸ்வரா எனும் இஸ்கந்தார் ஷா | |
சுல்தான் மேகாட் இஸ்கந்தார் ஷா | |
சுல்தான் முகமது ஷா | |
சுல்தான் அபு ஷாகித் | |
சுல்தான் முஷபர் ஷா | |
சுல்தான் மன்சூர் ஷா | |
சுல்தான் அலாவுடின் ரியாட் ஷா | |
சுல்தான் முகமது ஷா |
சமய மாற்றம்
பரமேஸ்வராவின் சமய மாற்றம் தெளிவற்ற நிலையில் உள்ளது. அவர் சமய மாற்றம் செய்து கொண்டார் என்பதற்குச் சரியான ஆதாரங்கள் இன்னும் கிடைக்கவில்லை. சீனாவில் கிடைத்த காலக் கணிப்புக் குறிப்புகளின் படி பரமேஸ்வராவின் மகன் 1414 இல் சீனாவிற்கு விஜயம் செய்து இருக்கிறார். தன்னுடைய தந்தையார் பரமேஸ்வரா இறந்து விட்டதாகச் சொல்லியும் இருக்கிறார்.[20]
சீனாவின் மிங் பேரரசர் பரமேஸ்வராவின் மகனை மலாக்காவின் இரண்டாவது ஆளுநராக அதிகாரப்பூர்வமாக ஏற்றுக் கொண்டுள்ளார். அந்தப் பரமேஸ்வராவின் மகன்தான் ஸ்ரீ ராம விக்ரமா என்று அழைக்கப் பட்டார். அவரைப் பரமேஸ்வர ராஜா என்று மலாக்காவில் அழைக்கப் பட்டு இருக்கிறார். அவருடைய குடி மக்கள் அவரைச் சுல்தான் ஸ்ரீ இஸ்கந்தர் சுல்கார்னாயின் ஷா என்றும் சுல்தான் மேகாட் இஸ்கந்தர் ஷா என்றும் அழைத்து உள்ளனர். இவர் மலாக்காவை 1414 லிருந்து 1424 வரை ஆட்சி செய்து உள்ளார்.
இறப்பு
1414 ஆம் ஆண்டு பரமேஸ்வரா தன்னுடைய 70 ஆவது வயதில் காலமானார். அவருடய உடல் போர்டிக்சனுக்கு அருகில் இருக்கும் தஞ்சோங் துவான் எனும் இடத்தில் புதைக்கப் பட்டு இருக்கலாம் அல்லது சிங்கப்பூரில் உள்ள கென்னிங் கோட்டையில் புதைக்கப் பட்டு இருக்கலாம் என்று நம்பப் படுகிறது. கென்னிங் கோட்டைக்கு அருகில் ஓர் இஸ்லாமிய இடுகாடு இன்னும் இருக்கிறது. பரமேஸ்வராவுக்குப் பின் அவருடைய மகன் மேகாட் இஸ்கந்தர் ஷா மலாக்காவை 1424 ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்தார்.
தொடர்ந்து வந்த ஆட்சியாளர்கள்
மலாக்காவின் மூன்றாவது ஆட்சியாளர் ராஜா தெங்ஙா என்பவர். இவரை ராடின் தெங்ஙா என்றும் அழைத்தனர். இவருக்கு ஸ்ரீ மகாராஜா எனும் விருது வழங்கப் பட்டது. இவர் இஸ்லாமிய சமயத்தைத் தழுவி முகமது ஷா எனும் விருதைப் பெற்றார். இவர் இந்திய முஸ்லிம் பெண்ணை மணந்து கொண்டதால் பெயர் மாற்றம் கண்டிருக்கலாம் என்று கல்வியாளகள் நம்புகின்றனர். அவர் இறந்த பிறகு அவருடைய மகனான ரோக்கான் இளவரசர் ராஜா இப்ராகிம் அரியணை ஏறினார்.
சமூகச் சச்சரவுகள்
ராஜா இப்ராகிம் ஆட்சி காலத்தில் நெருக்கடி நிலைமை ஏற்பட்டது. மலாக்காவில் வாழ்ந்த இந்திய முஸ்லீம் சமூகத்தினருக்கும் பாரம்பரிய இந்து மலாய்க்காரர்களுக்கும் இடையே சச்சரவு உண்டாகியது. ராஜா இப்ராகிமிற்கு இஸ்லாமியப் பெயர் இருந்தும் அவர் புதிய சமயத்தைத் தழுவவில்லை என்பது ஒரு குறைகூறல். அவர் ஸ்ரீ பரமேஸ்வரா தேவா ஷா பெயரில் ஆட்சி செய்தார் என்பது மற்றொரு குறைகூறல்.
அந்தச் சச்சரவுகளினால் அவரால் நல்ல முறையில் ஆட்சி செய்ய முடியவில்லை. பதினேழு மாதங்கள் தான் ஆட்சி செய்ய முடிந்தது. 1446ல் அவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப் பட்டார். அதன் பின்னர் ராஜா இப்ராகிமின் ஒன்று விட்டச் சகோதரர் ராஜா காசிம் பதவிக்கு வந்தார். ராஜா காசிமின் தாயார் ஒரு தமிழ் முஸ்லிம் ஆவார். ராஜா காசிமின் பெயர் சுல்தான் முசபர் ஷா என்று மாற்றம் கண்டது. மலாக்கா சுல்தான்களின் ஆட்சியில் புதிய சகாப்தம் மலர்ந்தது. இந்துக்களும் இந்து சமயமும் அதிகாரம் இல்லாமல் போயினர்.
பரமேஸ்வராவின் வெளியுறவுக் கொள்கை
சீனாவின் மிங் பேரரசுடன் சுமுகமான உறவுகள் 15 ஆம் நூற்றாண்டின் தொடக்கக் காலத்திலேயே ஆரம்பித்தன.[21] பரமேஸ்வரா சில முறைகள் சீனாவிற்குச் சென்று யோங்லே (r. 1402–1424)(சீன மொழியில்: 永樂) எனும் சீன மன்னரைச் சந்தித்து உறவாடி இருக்கிறார். பரமேஸ்வரா மலாக்காவிற்குத் திரும்பி வரும் போது அவருக்குத் துணையாகச் சீனக் கடல் பகுதித் தலைவர்கள் செங் ஹோ என்பவரும் இங் சிங் என்பவரும் மலாக்கா வந்துள்ளனர். சீனா-மலாக்கா தூதரக உறவுகளினால் மலாக்காப் பேரரசிற்குச் சீனா பாதுகாவலராக விளங்கியது.
அதனால் சியாம் நாடும் மஜாபாகித் அரசும் மலாக்காவின் விவகாரங்களில் தலையிடவில்லை. இந்தக் காரணத்தினால் மலாக்காவின் கடல் வழி வாணிகம் பெருகத் தொடங்கியது. சீனா, இந்தியா, மத்திய கிழக்கு, ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே மலாக்கா ஒரு முக்கிய வாணிகத் தளமாகவும் புகழ் பெற்று விளங்கியது.
பரமேஸ்வராவும் அவருடைய மனைவியும்
1411 ஆம் ஆண்டு பரமேஸ்வராவும் அவருடைய மனைவியும் 540 அரசாங்க அதிகாரிகளுடன் சீனாவிற்குச் சென்று யோங்லே மன்னரை மரியாதை நிமித்தம் கண்டு நட்புறவு பாராட்டினார்கள். பரமேஸ்வரா சீனாவிற்கு வந்து அடைந்ததும் அவருக்கு மாபெரும் வரவேற்பு நல்கப் பட்டது. அந்த வரலாற்றுச் சிறப்பு மிக்கச் சந்திப்பைப் பற்றிய குறிப்பு ஏடுகள் மிங் பேரரசின் வரலாற்றுக் குறிப்புகளில் காணப் பெறலாம்.[22] சீன மொழியில் எழுதப் பட்டிருப்பதின் ஆங்கில மொழியாக்கம்:
“ | You, king (refer to Parameswara), travelled tens of thousands of miles across the ocean to the capital, confidently and without anxiety, as your loyalty and sincerity assured you of the protection of the spirits. I (emperor Yongle) have been glad to meet with you, king, and feel that you should stay. However, your people are longing for you and it is appropriate that you return to soothe them. The weather is getting colder and the winds are suited for sailing South. It is the right time. You should eat well on your journey and look after yourself, so as to reflect my feelings of concern for you. Now I am conferring upon you, king, a gold and jade belt, ceremonial insignia, two "saddled horses", 100 liang of gold, 500 liang of silver, 400,000 guan of paper money, 2,600 guan of copper cash, 300 bolts of embroidered fine silks and silk gauzes, 1,000 bolts of thin silks...... | ” |
மேலே காணப்படுவதின் தமிழாக்கம்
“ | அரசராகிய நீங்கள் (பரமேஸ்வராவைக் குறிப்பிடுகிறது) பல பத்தாயிரம் மைல்கள் விரிந்து கிடக்கும் மாக்கடலைத் தாண்டி நம்பிக்கையுடன் கவலை இல்லாமல் வந்திருக்கிறீர்கள். அந்த விசுவாசத்திற்கும் நேர்மை குணத்திற்கும் நல்லாவிகளின் பாதுகாப்புகளைப் பெறுவீர்களாக. நான் (யோங்லே மன்னரைக் குறிப்பிடுகிறது) உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். தாங்கள் இங்கே தங்க வேண்டும் என்றும் ஆசைப் படுகிறேன். இருப்பினும் உங்களுடைய மக்கள் உங்களுக்காகப் பேராவலுடன் காத்துள்ளனர். ஆதலால் நீங்கள் திரும்பிச் சென்று அவர்களுக்கு ஆறுதல் அளிப்பதே பொருத்தமாக அமையும். வானிலை குளிராகி வருகிறது. தெற்கை நோக்கிக் கடல் பயணம் செய்வதற்கு காற்று சரியாகவும் இருக்கின்றது. இது தான் மிகச் சரியான நேரம். பயணத்தின் போது நீங்கள் நன்றாகச் சாப்பிட்டு உடல் நலத்தைக் கவனித்துக் கொள்ள வேண்டும். அதுவே நான் உங்கள் மீது காட்டும் அக்கறைக்கு பிரதிபலனாக அமையும். மன்னனாகிய உங்களுக்குத் தங்கத்திலும் கரும்பச்சை மணிக் கல்லால் ஆன அரைக்கச்சை, சடங்குகளுக்கான அதிகாரச் சின்னம், சேணம் பூட்டிய இரண்டு குதிரைகள், 100 லியாங் தங்கம், 500 லியாங் வெள்ளி, 400,000 குவான் காகிதப் பணம், 2,600 செப்புக் காசுகள், 300 பட்டுச் சேலைகள், 1000 மென் பட்டுத் துணிகள்...... | ” |
மிங் அரசருக்கு மலாக்கா வழங்கிய அன்பளிப்புகள்: மாணிக்கக் கற்கள், முத்து, கழுகின் அலகுகள், நாரையின் அலகுகள், தங்க நாரையின் அலகுகள், வெள்ளைத் துணிகள், மேற்கத்திய நூலிழைகள், காண்டாமிருகத்தின் கொம்புகள், யானைத் தந்தங்கள், கறுப்புக் கரடி, கருங்குரங்கு, வான்கோழி, கிளிகள், வாசனைப் பொருட்கள், தங்க வெள்ளிக் குச்சிகள்.
பரமேஸ்வராவின் வாணிக மையங்கள்

பரமேஸ்வராவின் ஆட்சி காலத்தில் மலாக்கா மிகவும் புகழ் பெற்ற வாணிகத் துறைமுகமாக விளங்கியது. அங்கே 80 மொழிகள் பேசப் பட்டன. உலகின் பல்வேறு இடங்களிலிருந்து வணிகர்கள் மலாக்காவிற்கு வந்தனர். அந்த இடங்களின் விவரம் வருமாறு:
தமிழ்நாடு, கெய்ரோ, ஏடன், ஓர்முஸ். ரோமாபுரி, துருக்கி, குஜாராத், கோவா, மலபார், ஒரிசா, ஸ்ரீ லங்கா, வங்காளம், சயாம், கெடா, பகாங், பட்டானி, கம்போடியா, சம்பா, கொச்சின், புருணை, லிங்கா, மினாங்கபாவ், பாசாய், மாலைத்தீவுகள்.
16 ஆம் நூற்றாண்டில் கீழைத் தேச நாடுகளில் மலாக்கா மிகவும் முக்கியமான துறைமுகமாக விளங்கியது. அதன் செல்வ வளப்பத்தைக் கண்டு தோம் பைரஸ் (Tom Pires) என்பவர் “யார் ஒருவர் மலாக்காவின் பிரபுவாக இருக்கின்றாரோ அவர் வெனிஸ் நகரின் கழுத்தின் மீது கை வைத்தது போல் ஆகும்” என்று சொன்னார். தோம் பைரஸ் ஒரு போர்த்துகீசிய வணிகர், எழுத்தாளர் ஆகும்.
பரமேஸ்வராவுக்குப் பின்
பரமேஸ்வரா எனும் ஒரு சாதாரண மனிதன் பகைவர்களிடமிருந்து தப்பித்து ஓடி வந்தான். எங்கே போவது என்று தெரியாமல் புகலிடம் தேடி அலைந்தான். வலிமையற்றது வலிமையானதைத் தோல்வி அடையச் செய்ய முடியும் என்பதைக் கண்டறிந்தான். அதையே ஒரு நல்ல சகுனமானக் கருதி ஓர் இருப்பிடத்தை உருவாக்கினான். அந்தச் சாதாரண இருப்பிடமே பின் நாளில் ஆசிய வரலாற்றில் மகத்துவம் வாய்ந்த தனிப் பெரும் வரலாறாக மாறியது. செல்வாக்கு மிக்க சக்தியாகவும் மாறியது.
மலாக்காப் பேரரசு தென்கிழக்காசியத் தீவுக் கூட்டத்தின் தலைவிதியையே மாற்றி அமைத்தது. உலக மன்னர்கள் வியந்து மனப்பூர்வமாகப் பாராட்டினார்கள். அண்டை நாட்டு மன்னர்கள் ஆழ்ந்த மரியாதை கொடுத்தனர். மலாக்காவின் செல்வாக்கு அதிகாரமும் ஆதிக்க நிலைப்பாடும் தென்கிழக்காசியத் தீவுக் கூட்டத்தில் இஸ்லாமிய சமயம் பரவுவதற்குச் சாதகமாக அமைந்தன.
கர்த்தாவிஜயா
1447 இல் கர்த்தாவிஜயா என்பவர் மஜாபாகித்தின் அரசரானார். இந்தோசீனாவில் இருந்த சம்பா நாட்டின் இளவரசியான தாராவதியை மணந்தார். மனைவியின் அறிவுரையின் படி இஸ்லாமியச் சமயத்தில் இணைந்தார். கர்த்தாவிஜயாவின் சகோதரர்களில் ஒருவரான சுனான் அம்பேல் என்பவர் ஜாவா சுராபாயாவில் இஸ்லாமியச் சமயம் பரவுவதற்கு மிகுந்த முயற்சிகளை எடுத்துக் கொண்டார்.
அந்தக் கால கட்டத்தில் பலேம்பாங் இஸ்லாத்திற்கு மாறியது. 1459 இல் சுல்தான் மன்சூர் ஷா கெடா, பகாங் மீது தாக்குதல்கள் நடத்தினார். வெற்றியும் பெற்றார். பகாங் நிலப் பகுதி மலாக்காவின் ஆளுமையின் கீழ் வந்தது. 1470 இல் சம்பாவில் ஏற்பட்ட படுகொலைகளிலிருந்து தப்பித்த 60,000 பேர் மலாக்காவில் தஞ்சம் அடைந்தனர்.
சான்றுகள்
- Sejarah Melayu - மலாய் இலக்கியம் - எழுதியவர் Tun Sri Lanang 1621.
- Suma Oriental - எழுதியவர் - Tom Pires
- The Ming Shi-lu (Chinese: 明實錄) மிங் பேரரசு வரலாறு. மலாக்கா பரமேஸ்வராவின் 150 சாதனைகள். Dr.Geoff Wade, மூத்த ஆய்வாளர், Asia Research Institute, National University of Singapore.
மிங் ஷி லூ (Ming Shi-lu)
- (திகதி: 28 அக்டோபர் 1403) -- இன் கிங் (Yin Qing) எனும் அரவாணி மலாக்காவிற்கு அனுப்பப் பட்டார்
- (திகதி: 3 அக்டோபர் 1405) -- பாய்-லி-மி-சு-லா, எனும் மலாக்கா நாட்டின் ஆளுநர் சீனாவின் மிங் மன்னரைச் சென்று கண்டார்.
- (திகதி: 16 பிப்ரவரி 1409) -- அபு லா ஜியா சின் என்பவர் மிங் அரண்மனைக்குச் சென்றார்.
- (திகதி: 4 ஆகஸ்டு 1411) -- பாய்-லி-மி-சு-லாவிற்கு மிங் அரண்மனையில் சிறப்பு விருந்து வழங்கப் பட்டது.
- (திகதி: 14 ஆகஸ்டு 1411) -- பாய்-லி-மி-சு-லா, அவருடைய மனைவி, அவருடைய பிள்ளைகள், அமைச்சர்கள், 540 உதவியாளர்கள் மிங் அரண்மனைகுச் சென்றனர்.
- (திகதி: 17 ஆகஸ்டு 1411) -- பாய்-லி-மி-சு-லாவிற்கு அரசு விருந்து வழங்கப் பட்டது.
- (திகதி: 5 அக்டோபர் 1414) -- பரமேஸ்வராவின் மகன் ராஜா ஸ்ரீ ராமா விக்ரமா சீன அரண்மனைக்குச் சென்று தன் தந்தையார் இறந்த செய்தியைச் சொன்னார்.[23]
உறுதியற்ற சான்றுகள்
பதிப்பிக்காமல் விட்டுச் செல்லப் பட்ட பலேம்பாங் அரச வரலாற்றுப் பதிவேடுகளிலிருந்து கிடைத்த ஆவணங்கள்.
- பரமேஸ்வராவின் உண்மையான பெயர் பாதுக்கா ஸ்ரீ மகாராஜா
- மற்றொரு பெயர் துமாசிக்கின் ராஜா பரமேஸ்வரா
- பிறந்த போது வைக்கப் பட்ட பெயர் தேசா ராஜா
- துமாசிக்கின் ராஜாவாக இருந்த பாதுக்கா ஸ்ரீ மகாராஜா விக்ரம வீராவின் மகன் பரமேஸ்வரா
மேலும் படிக்க
- மலாக்கா நீரிணை
- கடல் மனிதர்கள் Orang Laut
- மூக்கன்
- ஹங் துவா
சான்றுகள்
- கிறிஸ்தபர் பையர்ஸ். "The Ruling House of Malacca - Johor". http://www.royalark.net/Malaysia/malacca5.htm. எடுக்கப் பட்ட திகதி. 13 ஜூன் 2009.
- The history of spices is the history of trade
- ஜேம்ஸ் அலெக்ஸாண்டரல். (செப்டம்பர் 2006). Malaysia Brunei & Singapore. New Holland Publishers. பக்கம். 8. ISBN 1860113095, 9781860113093.
- "South and Southeast Asia, 500 - 1500". The Encyclopedia of World History. 1. Houghton Mifflin Harcourt. 2001. பக்கம். 138.
- Zain, Sabri. "A History of the Malay Peninsula." Parameswara. எடுக்கப் பட்ட திகதி. 2 ஆகஸ்டு 2007.
- மலேசியாவின் வரலாற்றுச் சுவடுகள்.
- மலாக்கா முத்துக்கிருஷ்ணன் aka Muthukrishnan K.S.|“Shadows of the Moon" எடுக்கப் பட்ட திகதி. 23 மார்ச் 2010.
- Parameswara at Sejarah Melayu
- Malacca Genealogy by Christopher Buyers
- Beyond the Monsoon
- Genealogy of Malacca Sultanate
- The Travels Of Marco Polo
- The Golden Chersonese and The Way Thither. Isabella L. Bird
- Parameswara at National Library of Malaysia
- Article by Muzaffar Tate in Star Online 1999
மேற்கோள்கள்
- The Encyclopedia of Malaysia: Languages & Literature, பதிப்பாசிரியர் Prof. Dato' Dr Asmah Haji Omar (2004) ISBN 981-3018-52-6
- Malay Annals - a Malay literature compiled by Tun Sri Lanang in 1612.
- Suma Oriental - written by Tom Pires after the Portuguese conquest of Malacca in the early 16th century.
- Ming Shilu (Chinese: 明實錄)[24] - also known as the Veritable Records of the Ming dynasty, has a comprehensive 150 records or more on Parameswara (Bai-li-mi-su-la 拜里迷蘇剌) and Malacca. The massive translation work was contributed by Dr.Geoff Wade, a senior researcher in the Asia Research Institute, National University of Singapore.[21]
வெளிப்புற இணைப்புகள்
- வாசனைத் திரவியங்களின் வரலாறு வர்த்தகத்தின் வரலாறு-The history of spices is the history of trade
- செஜாரா மலாயுவில் பரமேஸ்வரா-Parameswara at Sejarah Melayu
- மலாக்கா பரம்பரயியல்-Malacca Genealogy by Christopher Buyers
- பருவக் காற்றிற்கும் அப்பால்-Beyond the Monsoon
- மலாக்கா சுல்தான்களின் பரம்பரயியல்-Genealogy of Malacca Sultanate
- மார்க்கோ போலோவின் பயணங்கள்-The Travels Of Marco Polo
- தங்க வயல் காடுகள்-The Golden Chersonese and The Way Thither - by Isabella L. Bird
- தேசிய நூலக ஆவணம்-Parameswara at National Library of Malaysia
- ஸ்டார் நாளிதழ் செய்தி-Article by Muzaffar Tate in Star Online 1999
மேற்கோள்கள்
- Historical records referring to Parameswara are attributable to 3 sources
- Parameswara married Malik ul Salih, a princess of Pasai, adopted the Persian title Shah, and styled himself as "Sultan Iskandar Shah.
- Srivijaya (Sri Vijaya) as a kingdom developed around 500 CE, although it possibly had roots going back as far as 200 CE.
- The kingdom of Singosari was founded in 1222 by a commoner by the name of Ken Arok, who managed to marry the beautiful princess Ken Dedes of Janggala after murdering her husband.
- Munoz. Early Kingdoms. பக். 122.
- Zain, Sabri. "Sejarah Melayu, Buddhist Empires".
- Munoz, Paul Michel (2006). Early Kingdoms of the Indonesian Archipelago and the Malay Peninsula. Singapore: Editions Didier Millet. பக். 171. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:981-4155-67-5.
- "Borobudur Temple Compounds". UNESCO World Heritage Centre. UNESCO. பார்த்த நாள் 2006-12-05.
- "Patrons of Buddhism, the Śailēndras during the height of their power in central Java constructed impressive monuments and temple complexes, the best known of which is the Borobudur on the Kedu Plain" (quoted from Hall 1985:109).
- "Shailendra dynasty". பார்த்த நாள் 11 September 2015.
- Slamet Muljana (in Indonesian). Menuju Puncak Kemegahan. LKiS. பக். 84. https://books.google.com/books?id=XPLpH5LOZLsC&pg=PA84&lpg=PA84&dq=Medang+Anjukladang&source=bl&ots=nzJn86am-q&sig=e9e1IXE_WkR_Tq6FGLy9Crjyjfs&hl=id&sa=X&ei=o5YUU6jBOobyrQfen4HYAg&ved=0CEwQ6AEwBg#v=onepage&q=Medang%20Anjukladang&f=false. பார்த்த நாள்: 3 March 2014.
- Mahandis Y. Thamrin (September 2012). "10 November, Hari Berdirinya Majapahit" (Indonesian). National Geographic Indonesia. பார்த்த நாள் 10 May 2016.
- It was once the center of Melayu ancient kingdom.
- The kingdom of Srivijaya is first mentioned in the writings of the Chinese Buddhist pilgrim I-ching, who visited it in 671 after a voyage of less than 20 days from Canton
- Sang Nila Utama, (a.k.a. Prince Nilatanam or Sri Tri Buana), legendary founder of Singapura, one-time ruler of the Srivijaya Empire based in Palembang, Sumatra.
- Sang Nila Utama was a prince of Sumatra. Wanting to find a suitable place for a new city, he decided to visit the islands off the coast of Sumatra.
- Cœdès, George (1968). The Indianized states of Southeast Asia. University of Hawaii Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8248-0368-1. https://books.google.com/books?id=iDyJBFTdiwoC.
- Origin of Malacca
- Although he did not convert to Islam, his marriage to the Muslim princess encouraged a number of his subjects to embrace Islam.
- Wade 2005, p. 776
- Wade 2005, p. Search - Malacca
- Wade 2005, p. 786
- Wade 2005, p. Home