பரமகுரு சுவாமிகள்

பரமகுரு சுவாமிகள் ஈழத்துச் சித்தர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார். இவர் நிரஞ்சனானந்தர் என்ற பெயராலும் அறியப்படுகிறார். தமிழ்நாட்டின் பிரபல துறவியாக இருந்த பிரேமானந்தா தன்னுடைய பாட்டியாரின் குருவாக இவரைக் குறிப்பிடுவதோடு தனது பிறப்பு குறித்து பரமகுரு தனது பாட்டிக்கு அக்காலத்திலேயே சொல்லிவிட்டதாகவும் குறிப்பிடுகிறார்.

பரமகுரு - 1885 இல்

வாழ்க்கைக் குறிப்பு

இவர் இலங்கையின் நடு மலைநாட்டுப் பகுதியிலுள்ள ஒரு தோட்டத் தொழிலாளியின் மகனாகப் பிறந்தார். இளமையிலேயே துறவு மனப்பான்மை கொண்ட இவர், சிறுவயது முதலே தனிமையில் நாட்டம் கொண்டவர். மாத்தளையிலிருந்து திருக்கோணமலைக்குச் செல்லும் வீதியில் உள்ள காட்டுப்பகுதிகளில் மூன்றாண்டு காலம் வாழ்ந்திருப்பதாக அறியக்கிடைக்கிறது. கோவணமும் பச்சை நிறப்போர்வையும் அணிந்தவராக இவர் காணப்பட்டார் என்று கூறப்படுகிறது.

இந்தியாவிற்கு அடிக்கடிச் சென்று வந்த இவர் இந்தியாவின் கிடாரிப்பட்டி என்ற இடத்தில் சிலகாலம் தவம் செய்துள்ளார் என்பதற்கு சான்றுகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. சுவாமி நிரஞ்சனானந்தர் என்ற பெயரும் இவருக்கு இந்தியாவிலேயே இடப்பட்டது. குழந்தைவேற் சுவாமிகளுக்கு அறிவுரை தருவதற்காக கடையிற் சுவாமிகள் இவரை கீரிமலைக்கு வரப்பண்ணியதாக கூறுவர். குழந்தைவேற் சுவாமிகள், பரமகுரு சுவாமிகளுக்கும் கடையிற் சுவாமிகளுக்கும் பணிவிடை செய்துவந்துள்ளார்.

மருதனார்மடம் பகுதியிலுள்ள பனங்காட்டில் இவர் தனியாக வசித்து வந்துள்ளார். அக்காலங்களில் பாசிப்பயற்றினை அவித்துக் கஞ்சியாகக் குடித்து வந்தார் என்று கூறப்படுகிறது. பரமகுரு சுவாமிகளின் பெயரால் காங்கேசன்துறையிலும் கீரிமலையிலும் மடங்கள் கட்டப்பட்டன. சேணிய தெருவில் இருந்த சின்னத்தம்பி என்பவரே இவ்விரு மடங்களையும் கட்டுவித்தவராவார்.

பரமகுரு சுவாமிகளின் சமாதி விழா 1904ம் ஆண்டில் மாத்தளையில் நடைபெற்றது. இவரது சமாதி அமைக்கும் பணிகளை சேர். அருணாசலம் முன்னின்று நிறைவேற்றியிருக்கிறார்.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.