நாராயணன்ஹிட்டி அரண்மனை

நாராயணன்ஹிட்டி அரண்மனை (Narayanhiti Palace or Narayanhiti Durbar) (நேபாளி: नारायणहिटी दरवार), காத்மாண்டில் உள்ள நேபாள மன்னர்களின் வாழிடமாகும். [1][2][3]தற்போதைய நாராயணன்ஹிட்டி அரண்மனை, மன்னர் மகேந்திரன் 1963ல் புதிதாக நிறுவினார்.[4]

நாராயணன்ஹிட்டி அரண்மனை
பொதுவான தகவல்கள்
நகர்காட்மாண்டு
நாடுநேபாளம்
கட்டுமான ஆரம்பம்கிபி 1963
கட்டுவித்தவர்தோகல் சிங் பஸ்யந்த், மகேந்திரா, ஜங் பகதூர் ராணா
உரிமையாளர்நேபாள அரசு
நுட்ப விபரங்கள்
அமைப்பு முறைசெங்கல் மற்றும் சுண்ணாம்புச் சாந்து
அளவு38 ஏக்கர்
வடிவமைப்பும் கட்டுமானமும்
கட்டிடக்கலைஞர்பென்சமின் போல்க்

பெயர்க் காரணம்

நாராயணன்ஹிட்டி அரண்மனை வளாகத்தில் உள்ள நாராயணன் கோயில்

நாராயணன் என்பதற்கு திருமாலையும், நேவாரி மொழியில் ஹிட்டி என்பதற்கு நீர்த் தாரையையும் குறிக்கும். இந்நீர்த் தாரை, கோயிலின் கிழக்கு நுழைவு வாயிலில் உள்ளது.

வரலாறு

முதல் அரண்மனை

நேபாள இராச்சியத்தின் ஷா வம்சக் காலத்திற்கு முன்னர், நாராயணன்ஹிட்டி அரண்மனை அமைந்த பகுதியை, தற்கால இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தின் குமாவுன் மற்றும் கார்வால் நாட்டின் படைத்தலைவரின் இளையமகன் சிவராம் சிங் பஸ்யந்த் என்பவர் நாராயணன்ஹிட்டி அரண்மனையை நிறுவினார்.[5] பின்னர் நேபாள இராச்சியத்தின் ஆறாவது தலைமை அமைச்சரான பதே ஜங் ஷா, காட்மாண்டுப் போரில் நாராயணன்ஹிட்டி அரண்மனையை, மல்லர் வம்ச மன்னர் ஜெயப்பிரகாஷ் மல்லாவிடமிருந்து கைப்பற்றினார். [4] 19 செப்டம்பர் 1846ல் தலைமை அமைச்சர் பதே ஜங் ஷா நாடு கடத்தப்பட்ட பின்னர், புதிய தலைமை அமைச்சர் ஜங் பகதூர் ராணாவின் தம்பி ரணதீப் சிங் குன்வர், நாராயணன்ஹிட்டி அரண்மனையின் பழுதுகளை நீக்கி தனது குடியிருப்பாகக் கொண்டார்.[4]

நேபாள மன்னர்களின் அரண்மனையாக

1958ல் இடிக்கப்பட்ட பழைய நாராயணன்ஹிட்டி அரண்மனை, ஆண்டு 1920

நேபாள தலைமை அமைச்சர் ரண தீப் சிங் குன்வரின் மறைவிற்குப் பிறகு, பட்டத்திற்கு வந்த தலைமை அமைச்சர் வீர சூம்செர் ஜங் பகதூர் ராணா என்பவர் 22 நவம்பர் 1885ல் நாராயணன்ஹிட்டி அரண்மனையை தனது மாளிகையாகக் கொண்டார். 1886ல் வீர சூம்செர் ஜங் பகதூர் ராணா, நாராயணன்ஹிட்டி அரண்மனையை இடித்து விட்டு, நேபாள கட்டிடக் கலைஞர் ஜோக்வீர் ஸ்தபதியில் தலைமையில், புதிய நாராயணன்ஹிட்டி அரண்மனையைக் கட்டினார். புதிய அரண்மனை நேபாள மன்னர் பிரிதிவி வீர விக்கிரம ஷாவின் குடியிருப்பானது. [4]

நிலநடுக்கம், 1934

1934ல் நேபாள நிலநடுக்கத்தில் நாராயணன்ஹிட்டி அரண்மனையின் சில பகுதிகள் சேதமடைந்தததுடன், மன்னர் திரிபுவனின் இரண்டு இளவரசிகளும் மாண்டனர். நிலநடுக்கத்தில் சேதமுற்ற அரண்மனையைக் கட்டிடப் பொறியாளர் சூரிய ஜங் தாபா சீர் செய்து, அரண்மனைக்கு முன் முகப்பு மண்டபமும், மாடிகளுக்குச் செல்ல அகலமான மாடிப்படிகளும் கட்டினார்.[4]

தற்போதைய அரண்மனை

நேபாள மன்னர் மகேந்திரா காலத்தில், 1963ல் அரண்மனையை முழுமையாக இடித்து விட்டு, அதே இடத்தில் நேபாளக் கட்டிடக் கலைநயத்தில், புதிய அரண்மனையை, கலிபோர்னியாவின் கட்டிடக் கலைஞர் பெஞ்சமின் போல்க் என்பவரால் 1969ல் கட்டி முடிக்கப்பட்டது. [6][7] புதிய அரண்மனையின் புதுமனை புகு விழா நிகழ்வின் போது, நேபாள இளவரசர் பிரேந்திராவின் திருமணம் நடைபெற்றது.

உட்புற வடிவமைப்பு

இந்த அரண்மனையின் தரைத் தளம் 3,794 சதுர மீட்டர் (40,838 சதுர அடி) பரப்பளவுடன் கூடியது. விருந்தினர் மாளிகை, அரசவை மற்றும் அந்தப்புரம் என மூன்று பகுதிகளைக் கொண்டது. இவ்வரண்மனையில் 52 அறைகள் கொண்டது. நேபாளத்தின் மாவட்டங்களின் பெயர்களை, 52 அறைகளுக்கு சூட்டப்பட்டுள்ளது. அரண்மனையின் உட்புறங்களில் விக்டோரியன் அழகுக் கலையில், ஓவியங்களால் மெருகேற்றப்பட்டுள்ளது. [8]

உரிமையாளர்

1972ல் நாராயணன்ஹிட்டி அரண்மனையை மன்னர் மகேந்திரா, 7 கோடி நேபாள ரூபாய்க்கு நேபாள அரசிடம் விற்றுவிட்டார். இவ்வரண்மனை தனது தந்தை வழி பாட்டனார் பிரிதிவி வீர விக்கிரம ஷா, ராணி திவ்யேஷ்வரியை மணந்த வகையில் கிடைத்த சீர் வரிசை என்பதால், இவ்வரண்மனை தனது தனிப்பட்ட சொத்து என உரிமை கோரினார். [4]

நேபாள அரச குடும்ப படுகொலைகள்

1 சூன் 2001 அன்று 2001இல் நாராயணன்ஹிட்டி அரண்மனையில் அரச குடும்ப விருந்து நடக்கும்பொழுது நேபாள மன்னர் பிரேந்திராவின் மகன் இளவரசர் திபேந்திரா துப்பாக்கியால் விருந்தில் கலந்து கொண்டவர்களை நோக்கிச் சுட்டார். இந்நிகழ்வில் திபேந்திராவின் தந்தையாரும், நேபாள மன்னருமான பிரேந்திரா, அரசி ஐஸ்வரியா உட்பட 10 பேர் உயிரிழந்தனர். பின்னர் திபேந்திரா தன்னைத் தானே சுட்டுக் கொண்டு, நான்கு நாட்களுக்கு பிறகு இறந்தார். [9] [10]

அரண்மனையின் தற்போதைய நிலை

2006ல் நேபாளத்தில் நடைபெற்ற தொடர் ஜனநாயக புரட்சியின் காரணமாக, மன்னர் ஞானேந்திரா பதவி பறிக்கப்பட்டதுடன், நேபாளத்தின் புதிய நாடாளுமன்றம், ஞானேந்திராவை நாராயணன்ஹிட்டி அரண்மனையிலிருந்து 15 நாட்களுக்குள் வெளியேற கட்டளையிட்டது. [11] தற்போது நாராயணன்ஹிட்டி அரண்மனை பொது அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது. இவ்வருங்காட்சியகத்தில் நேபாள அரண்மனைவாசிகளின் நகைகள் மற்றும் அரிய பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.