தொழுகை

தொழுகை என்பது முஸ்லிம்களின் மதக் கடமைகளுள் ஒன்றாகும். வயதுவந்த எல்லா முஸ்லிம்களும் தினமும் ஐந்து வேளை அல்லாவைத் தொழ வேண்டும். இஸ்லாத்தின் முக்கிய கடமைகளுள் தொழுகை ஒன்றென்பதால் மிகச் சில சந்தர்ப்பங்களிலேயே இதற்கு விலக்களிக்கப்படுகிறது.

தொழுகை

தொழுகையின் போது அணியும் ஆடைகளும் தொழுகை செய்யும் இடமும் சுத்தமாக இருக்க வேண்டும். ஆண்களும் பெண்களும் தொய்வான ஆடைகளால் தங்கள் உடல்முழுதும் மூடியிருக்க வேண்டும். பெண்கள் தலையை மறைக்க வேண்டும். ஆண்கள் குல்லா அணிவதும் வழக்கமாகும்.

எந்த எந்தத் தொழுகையை எந்த எந்த நபி முதலில் தொழுதார்கள்:

  1. பஜ்ர் - ஆதம் (அலை)
  2. ளுஹர் - இப்ராஹீம் (அலை)
  3. அஸர் - யாகூப் (அலை)
  4. மஃரிப் - தாவூது (அலை)
  5. இஷா - யூனுஸ் (அலை)

தொழுகையில் பஜ்ர் அதிகாலை சூரியன் உதிப்பதற்கு முன்னும், ளுஹர் என்பது மதியம் சூரியன் உச்சி சாய்ந்ததும், அஸர் என்பது மாலை நிழல் இரு மடங்காக உயரும் போதும், மஃரிப் என்பது சூரியன் அஸ்தமனம் ஆன உடனும், இஷா என்பது இரவு ஆரம்பமானதும் நடைபெறுவதாகும்.

பாங்கின் பொருள்

அல்லாஹு அக்பர் :அல்லாஹ் மிகப்பெரியவன் அல்லாஹு அக்பர் :அல்லாஹ் மிகப்பெரியவன் அல்லாஹு அக்பர் :அல்லாஹ் மிகப்பெரியவன் அல்லாஹு அக்பர் :அல்லாஹ் மிகப்பெரியவன் அஷ்ஹது அல்(ன்)லாயிலாஹ இல்லல்லாஹ் :அல்லாஹ்வைத்தவிர வேறு இறைவன் இல்லை என்று உறுதி கூறுகிறேன். அஷ்ஹது அல்(ன்)லாயிலாஹ இல்லல்லாஹ் :அல்லாஹ்வைத்தவிர வேறு இறைவன் இல்லை என்று உறுதி கூறுகிறேன். அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ் :முஹம்மது(ஸல்) அவர்கள் இறைவனின் தூதர் ஆவார்கள் என்று நான் உறுதி கூறுகிறேன். அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ் :முஹம்மது(ஸல்) அவர்கள் இறைவனின் தூதர் ஆவார்கள் என்று நான் உறுதி கூறுகிறேன். ஹய்ய அலஸ் ஸலா(த்), ஹய்ய அலஸ் ஸலா(த்) : தொழுகையின் பக்கம் வாருங்கள், தொழுகையின் பக்கம் வாருங்கள் ஹய்ய அலல் ஃபலாஹ், ஹய்ய அலல் ஃபலாஹ் : வெற்றியின் பக்கம், வாருங்கள், வெற்றியின் பக்கம் வாருங்கள் அல்லாஹு அக்பர் : அல்லாஹ் மிகப்பெரியவன் அல்லாஹு அக்பர் : அல்லாஹ் மிகப்பெரியவன் லா இலாஹ இல்லல்லாஹ் : அல்லாஹ்வைத்தவிர வேறு இறைவனில்லை

அறிவிப்பவர் : அபூமஹ்தூரா(ரழி) நூல் : முஸ்லிம் அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு ஜைத்(ரழி) நூல் : இப்னுமாஜா,அபூதாவூத்

ஈமான் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்று விட்டனர். அவர்கள் எத்தகையோரென்றால், தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு இருப்பார்கள். மேலும் அவர்கள் தம் தொழுகைகளை(க் குறித்த காலத்தில் முறையோடு) பேணுவார்கள். அல்குர்ஆன் 23:1,2,9

இன்னும் நீங்கள் தொழுகைக்கு அழைத்தால், - அதனை அவர்கள் பரிகாசமாகவும், விளையாட்டாகவும் எடுத்துக் கொள்கிறார்கள் இதற்கு காரணம் அவர்கள் அறிவில்லாத மக்களாக இருப்பதேயாம். அல்குர்ஆன் 5:58

தொழுகையை நீங்கள் நிலைநாட்டுங்கள் அவனுக்கே அஞ்சி நடங்கள் அவனிடம் தான் நீங்கள் ஒன்று சேர்க்கப்படுவீர்கள். அல்குர்ஆன் 6:72

எவர்கள் வேதத்தை உறுதியாகப் பற்றிப்பிடித்துக் கொண்டு, தொழுகையையும் நிலைநிறுத்துகிறார்களோ (அத்தகைய) நல்லோர்களின் கூலியை நாம் நிச்சயமாக வீணாக்க மாட்டோம். அல்குர்ஆன் 7:170

“நிச்சயமாக நாம் தான் அல்லாஹ்! என்னைத் தவிர வேறு நாயன் இல்லை ஆகவே, என்னையே நீர் வணங்கும், என்னை தியானிக்கும் பொருட்டு தொழுகையை நிலைநிறுத்துவீராக. அல்குர்ஆன் 20:14

“உங்களை ஸகர் (நரகத்தில்) நுழைய வைத்தது எது?” (என்று கேட்பார்கள்.). அவர்கள் (பதில்) கூறுவார்கள்: “தொழுபவர்களில் நின்றும் நாங்கள் இருக்கவில்லை”. அல்குர்ஆன் 74:42,43

உங்கள் குழந்தைகள் ஏழுவயதை எய்திவிட்டால் அவர்களைத் தொழும்படி ஏவுங்கள் பத்து வயதை அடைந்த(தும் தொழமலிருந்தால்) அதற்காக அவர்களை அடியுங்கள். என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பாளர்: அம்ரு இப்னு ஷூஜபு. நூல்கள்: அஹ்மத், அபூதாவூத்.

யார் தொழுகையைப் பேணிக் கொள்கிறாரோ அவருக்கு அத்தொழுகை பிரகாசமாகவும், அத்தாட்சியாகவும், மறுமை நாளில் ஈடேற்றமாகவும் ஆகிவிடும். மேலும் எவன் அதை பேணிக் கொள்ளவில்லையோ அவனுக்கு அத்தொழுகை பிரகாசமாகவோ, சாட்சியாகவோ, ஈடேற்றமாகவோ இருக்காது. (மாறாக) அவன் மறுமை நாளில் காரூன், பிர்அவ்ன், காமான், உபைபின் கஃப் ஆகியோருடன் இருப்பான் என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு, அம்ருஇப்னு ஆஸ் (ரழி) நூல் : அஹ்மத்

சிறந்த அமல்: அமல்களில் சிறந்தது எது என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டபோது தொழுகையை அதன் ஆரம்ப நேரத்தில் தொழுவது என்றார்கள். அறிவிப்பாளர்: உம்முஃபர்வா (ரழி) நூல்கள் : திர்மிதி, ஹாகிம், அபூதாவூத்.

பஜ்ரு, அஸர் தொழுகையின் சிறப்புகள்: (பஜ்ரு தொழுகையை) சூரியன் உதிப்பதற்கு முன்பும் (அஸர் தொழுகையை) சூரியன் மறைவதற்கு முன்பும் தொழுதவர் நிச்சயம் நரகில் நுழையமாட்டார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

கூட்டுத் தொழுகையின் சிறப்பு: ஒரு மனிதர் தனித்து தொழுவதை விட கூட்டாகத் தொழுவது 27 மடங்கு சிறந்ததாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: இப்னு உமார்(ரழி) நூல்: புகாரி, முஸ்லிம், திர்மிதி

தொழுகையை விட்டவனின் நிலை: நமக்கும் அவர்களுக்குமிடையே (காஃபிர்களுக்குமிடையே) இறைவன் ஏற்படுத்திய வித்தியாசம் தொழுகையேயாகும். யார் அதனை விட்டுவிட்டாரோ அவர் காஃபிராகி விட்டார். என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: புரைதா (ரழி) நூல்கள்: திர்மிதி,அபுதாவுத்,அஹமத்,இப்னுமாஜா

(நபியே!) சூரியன் (உச்சியில்) சாய்ந்ததிலிருந்து இரவின் இருள் சூழும் வரை (ளுஹ்ரு, அஸ்ரு, மஃரிப், இஷா) தொழுகையை நிலை நிறுத்துவீராக. இன்னும் ஃபஜ்ருடைய தொழுகையையும் (நிலைநிறுத்துவீராக) நிச்சயமாக ஃபஜ்ரு தொழுகை சான்று கூறுவதாகயிருக்கிறது. அல்குர்ஆன் 17:78

இரண்டு தொழுகைகள் முனாஃபிக்கீன் மீது பாரமாக இருக்கிறது. ஃபஜ்ருடைய ஜமாஅத்தும், இஷாவுடைய ஜமாஅத்தும், இந்த இரண்டிலும் உள்ள நன்மைகளை அவர்கள் அறிவார்களேயானால், பள்ளிக்கு தவழ்ந்து வந்தாயினும் தொழுகையில் கலந்து விடுவர் என நபி(ஸல்) அவர்கள் நவின்றனர். அறிவிப்பாளர்:அபூஹுரைரா (ரழி) நூல்கள்:புகாரி, முஅத்தா, அபூதாவூத், திர்மித், நஸயீ

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். ஒருவர் படுக்கைக்குச் சென்று தூங்கியப் பின், ஷைத்தான் அவர் தலைமாட்டில் 3 முடிச்சுகள் போட்டு, ஒவ்வொரு முடிச்சிலும் நீர் உம்மிடத்தில் தூங்கிக் கொண்டிரும்,உமக்கு இன்னும் இரவு இருக்கிறது, நன்றாகத் தூங்கும் என்று உளறுகிறான். அந்த அடியார் தூக்கத்திலிருந்து எழுந்து அல்லாஹ்வை நினைவு கூர்ந்தால், முதல் முடிச்சு அவிழ்ந்து விடுகிறது. பிறகு படுக்கையிலிருந்து உளு செய்தபின், இரண்டாவது முடிச்சு அவிழ்ந்து விடுகிறது. தொழுது விடுவாரேயானால், மூன்றாவது முடிச்சு அவிழ்ந்து விடுகிறது. எனவே அவர் அதிகாலையில் நல்ல மனத்துடன் சுறுசுறுப்போடு இருக்கிறார். இல்லை என்றால் கெட்ட எண்ணங்களோடு சோம்பல் கொண்டவராக இருக்கிறார். அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழி) நூல்கள் : புகாரி, முஸ்லிம், முஅத்தா, அபூதாவூத், நஸயீ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.