திருச்செல்வம் நிகால் ஜிம் பிறவுண்
அருட்தந்தை திருச்செல்வம் நிகால் ஜிம் பிறவுண் (Fr. Thiruchchelvam Nihal Jim Brown, 1972 - 2006) என்பவர் ஈழப்போரின் போது காணாமல் போன ரோமன் கத்தோலிக்க இலங்கைத் தமிழர். இலங்கையின் வட மாகாணத்தில் 2006 ஆகத்து 13 ஆம் நாளில் புனித பிலிப் நேரி தேவாலயத்தின் மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் பாதிப்படைந்தோருக்கு இவர் பெரிதும் உதவினார். இவரும் இவரது உதவியாளரான வென்செசுலாசு வின்சசு விமலதாஸ் என்பவரும் 2006, ஆகத்து 20 ஆம் நாள் காணாமல் போனார்கள்.[1] இவர்கள் இறந்து விட்டதாகக் கருதப்படுகிறது.
திருச்செல்வம் நிகால் ஜிம் பிறவுண் | |
---|---|
![]() அருட்தந்தை திருச்செல்வம் நிகால் ஜிம் பிறவுண் | |
பிறப்பு | 1972 யாழ்ப்பாணம், இலங்கை |
பணி | புனித பிலிப் நேரி தேவாலய பங்குத்தந்தை, இலங்கை |
பின்னணி
இலங்கையின் வட மாகாணத்தில் இலங்கை இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் அமைந்துள்ள கிராமம் அல்லைப்பிட்டி. இங்கு வாழும் அனைவரும் இலங்கையின் சிறுபான்மையின இலங்கைத் தமிழர் ஆவர். இவர்களுள் பெரும்பான்மையானோர் ரோமன் கத்தோலிக்கர். அல்லைப்பிட்டிப் பங்குத்தந்தையாக 2004 இல் நியமிக்கப்பட்ட அருட்திரு அந்தோனி அமலதாஸ் அடிகள் அல்லைப்பிட்டியில் 4 மாதக்குழந்தை, 4 வயதுச் சிறுவன் உட்பட 9 பேர் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை வெளியுலகுக்கு கொண்டு வந்தவர். அல்லைப்பிட்டியில் நிலை கொண்டிருந்த இலங்கைக் கடற்படையின் அச்சுறுத்தலால் அவரால் அங்கு தொடர்ந்து பணியாற்ற முடியவில்லை[2][3]. இதனால் அவர் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டு அவரது இடத்திற்கு அருட்திரு ஜிம் பிரவுண் நியமிக்கப்பட்டார். தொடர்ந்த இராணுவத் தாக்குதல்களின் போது புனித பிலிப் நேரி தேவாலயம் மீது இலங்கை இராணுவம் 2006, ஆகத்து 13 ஆம் நாள் எறிகணை வீச்சுத் தாக்குதலை மேற்கொண்டதில் அங்கு தஞ்சம் புகுந்திருந்த 15 தமிழர்கள் உயிரிழந்தனர்[4].
இராணுவத் தாக்குதல்களின் போது அல்லைப்பிட்டியில் குடியிருந்த அனைத்து 300 பொது மக்களையும் பாதுகாப்புக் காரணங்களுக்காக 8 மைல் தொலைவில் உள்ள ஊர்காவற்துறை கத்தோலிக்கத் தேவாலயத்துக்கு அழைத்துக் கொண்டு சென்றார் என அருட்தந்தை பிறவுண் மீது இலங்கைக் கடற்படையினர் பலத்த கண்டனம் தெரிவித்திருந்தனர்[5]. அத்துடன் விடுதலைப் புலிகளுக்கு உதவி செய்ததாகவும் அவர் மீது கடற்படையினர் குற்றம் சாட்டி வந்துள்ளார்[6][7].
காணாமல் போனமை
பன்னாட்டு மன்னிப்பு அவையின் அறிக்கையின் படி, பிறவுண் அடிகளும், உதவியாளர் விமலதாஸ் என்பவரும் விசையுந்து ஒன்றில் அல்லைப்பிட்டி நோக்கிப் பயணிக்கும் போது அவர்களின் நண்பர் ஒருவரை வழியில் சந்தித்து அவருடன் அல்லைப்பிட்டி கடற்படை சோதனைச் சாவடிக்குச் சென்றிருக்கின்றனர். பிற்பகல் 2.00 மணிக்கு அவர்கள் இருவரையும் சோதனைச் சாவடியில் விட்டு விட்டு நண்பர் சென்று விட்டார். சோதனைச் சாவடியில் இருந்து அருட்தந்தைகள் இருவரும் விசையுந்தில் அல்லைப்பிட்டி நோக்கி சென்றதை சிலர் நேரில் கண்டுள்ளனர். அவர்களின் விசையுந்தின் பின்னால் சோதனைச் சாவடியில் இருந்து வேறு இரண்டு விசையுந்துகளில் ஒவ்வொன்றிலும் மூன்று ஆயுதம் தரித்தவர்கள் சென்றதையும் அவர்கள் கண்டுள்ளனர். இந்த ஆறு ஆயுததாரிகளும் அல்லைப்பிட்டியின் புனித மேரி தேவாலயத்தின் முன்னால் சிறிது நேரம் உரையாடி விட்டு மூவர் சோதனைச்சாவடியை நோக்கித் திரும்பி வந்துள்ளனர். நேரில் கண்ட சாட்சியாளர் மிண்டும் அல்லைப்பிட்டி சோதனைச் சாவடிக்குத் திரும்பியபோது அந்த மூன்று ஆயுததாரிகளும் இலங்கைக் கடற்படையினருடன் உரையாடிக் கொண்டிருந்ததை அவர் கவனித்தார்.
இந்நிகழ்வுக்குப் பின்னர் ஜிம் பிறவுண் அடிகளும் அமலதாசும் எங்கும் காணப்படவில்லை. யாழ்ப்பாணக் குடாநாடு எங்கணும் உள்ள தேவாலயங்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டு தேடப்பட்டபோதும் எவ்விதத் தகவலும் கிடைக்கவில்லை. இருவரும் கைது செய்யப்பட்டதை இலங்கைக் கடற்படையின் அதிகாரி அட்மிரல் உப்பாலி ரணவீர மறுத்துள்ளார். ஜிம் பிறவுணும் உதவியாளரும் மீண்டும் சோதனை சாவடிக்கு வந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்றதாக சோதனைச் சாவடியில் இருந்த கடற்படையினர் தெரிவித்தனர். ஆனாலும், யாழ் நகருக்குள் இவரக்ள் இருவரும் வந்திருந்ததை யாப்பாணக் காவல்துறையினரால் உறுதிப் படுத்த முடியவில்லை[8]. இறுதியில் இவர்கள் இருவரும் காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு ஒன்று உள்ளூர் காவல் நிலையத்திலும், மனித உரிமைகள் ஆணையத்திலும் பதிவு செய்யப்பட்டது[6][7].
உடல் கண்டுபிடிப்பு குறித்த சர்ச்சை
புங்குடுதீவுக் கடற்கரையில் மிகவும் அழுகிய நிலையில் மனித உடல் ஒன்றிருந்த மணற்பை ஒன்று 2007, மார்ச் 14 ஆம் நாளன்று கண்டெடுக்கப்பட்டதாக உள்ளூர்ப் பத்திரிகை தகவல் வெளியிட்டிருந்தது. இவ்வுடல் ஜிம் பிறவுணுடையதென அடையாளம் காணப்பட்டதாகவும் அப்பத்திரிகை தெரிவித்திருந்தது[9]. ஆனாலும், இவ்வுடலின் மீது மேற்கொள்ளப்பட்ட மரபணுச் சோதனைகள் இந்த உடல் ஜிம் பிறவுணுடையதோ அல்லது விமலதாசின் உடையதோ அல்ல என இலங்கை அரசு அறிவித்தது[10][11].
இவற்றையும் பார்க்க
மேற்கோள்கள்
- "When a Tamil Catholic Priest went Missing in Jaffna Ten years Ago". டி. பி. எஸ். ஜெயராஜ். பார்த்த நாள் 20 ஆகத்து 2016.
- "Sri Lankan priest disappears as civilian toll mounts". பார்த்த நாள் 2007-07-22.
- "Disappearance of Fr. Jim Brown and Abrupt Transfer of the Magistrate". பார்த்த நாள் 2007-07-22.
- UCAN: Sri Lanka church shelled in gov’t attack on rebels by Catholic online news
- Peace deferred by Council for World Mission
- "Thiruchchelvan Nihal Jim Brown". AHRC. பார்த்த நாள் 2006-01-04.
- "Amnesty International Report". Amnesty International. மூல முகவரியிலிருந்து 2006-09-20 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2006-01-04.
- "Killing Match - Winter 2006". Amnesty Magazine. பார்த்த நாள் 2006-01-05.
- Father Jim Nihal Brown's body found
- Investigations continue into the disappearance of Fr. Brown
- Clarifications on DNA test