தமிழ்த்தாய் கோயில்

தமிழ்த்தாய் கோயில் தமிழ்நாடு, சிவகங்கை மாவட்டம், காரைக்குடி கம்பன் மணி மண்டப வளாகத்தின் தென்பால் அமைந்துள்ளது. இக்கோயிலின் கிழக்கே சுமார் ஒரு கி.மீ. தொலைவில் அழகப்பா பல்கலைக்கழகம் உள்ளது.

தமிழ்த்தாய் திருக்கோயில்

தமிழ்த்தாய்க் கோயிலின் தோற்றம்

தமிழ்த்தாய்க்குக் கோயில் எழுப்பவேண்டும் என்பது சா. கணேசனின் நெடுநாள் கனவாகும். அவர் கனவை நனவாக்கும் வகையில் தமிழக அரசின் முதல்வர் மு. கருணாநிதி தலைமையில் 1975, ஏப்ரல் 23 அன்று தமிழ்த்தாய்க் கோயிலுக்குக் கால்கோள் விழா நடந்து, பணிகள் தொடங்கப்பெற்றன. இதற்காகத் தமிழக அரசின் சார்பில் ரூபாய் ஐந்து இலட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. கம்பன் அடிப்பொடி சா. கணேசனும், சிற்ப கலாசாகரம் ம. வைத்தியநாத ஸ்தபதியின் மகனும், மாமல்லபுரம் சிற்பக்கல்லூரியின் முன்னாள் முதல்வருமான வை. கணபதி ஸ்தபதியும் இணைந்து தமிழ்த்தாய்க்கு வடிவம் கொடுத்தனர். கோயிலின் இறுதிக் கட்டப்பணிக்கு தமிழக அரசு மீண்டும் ஐந்து லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியது. பிறகு மு. கருணாநிதி அவர்களால் தமிழ்த்தாய்க் கோயில் 1993, ஏப்ரல் 16 அன்று திறக்கப்பட்டு, தொடர்ந்து தமிழ்த்தாய்க்கு வழிபாடு நிகழ்ந்து வருகிறது.[1]

திருக்கோயில் அமைப்பு

தமிழ்த்தாய்க் கோயில் வடக்கு நோக்கியவாறு கம்பன் மணி மண்டபத்தின் வலப்புறம் அமைந்துள்ளது. மும்முனை நிலத்தில் ஆறு பட்டை, ஆறு நிலை, ஆறு விமானங்கள் கொண்ட கோயிலாக அமைந்து காணப்படுகிறது. தமிழ்த்தாய்க் கோயிலின் பரிவார தெய்வங்களாக, வடகீழ்க் கோடியில் வள்ளுவரும், தென்கோடியில் இளங்கோவடிகளும், வடமேல்கோடியில் கம்பரும் தனி விமானம் கொண்டு காட்சி தருகின்றனர். தமிழ்த்தாய்க் கோயிலின் நுழைவாயிலின் முன் ஒலித்தாய், வரித்தாய் ஆகியோர் துவார பாலகிகளாக நிறுவப் பெற்றிருக்கின்றனர். கருவறையில் தமிழ்த்தாயின் வலப்புறம் அகத்தியரும், இடப்புறம் தொல்காப்பியரும் நின்ற நிலையில் விளங்குகின்றனர்.

தமிழ்த்தாய் திருவுருவச் சிலை

தமிழ்த்தாயின் திருவுருவ அமைதி

கருவறையில் தமிழ்த்தாய் நான்கு கைகளுடன் தாமரைப் பீடத்தில் அமர்ந்தவாறு காட்சியளிக்கின்றாள். வல முன் கையில் சுடர் உள்ளது. இடக்கையில் யாழ் உள்ளது. கீழ் வலக்கையில் உருத்திராட்ச மாலையும், கீழ் இடக்கையில் சுவடியும் இடம் பெற்றுள்ளன. சேர, சோழ, பாண்டியர்களான மூவேந்தர்களும் தமிழைப் போற்றி வளர்த்தனர் என்பதை உணர்த்தும் வகையில் அவர்களின் சின்னங்களான வில், புலி, மீன் ஆகியவை தமிழ்த்தாயின் பின்புறம் உள்ள திருவாச்சியில் பொறிக்கப்பட்டுள்ளன. தமிழ்த்தாயின் வலக்கால் கீழே தொங்கியவாறும், இடக்கால் மடித்த நிலையிலும் தமிழன்னை சுகாசனமாக வீற்றிருக்கிறாள். தமிழ்த்தாயின் கால்களைச் சிலம்பும், தண்டையும் அணி செய்கின்றன. "நடராச மூர்த்திக்குப் பிறகு இம்மூர்த்தியே பல்லாற்றானும் கலை, தத்துவம், விஞ்ஞானம் ஆகிய மூன்றின் கருத்துச் செறிவும் உடையது. எங்களைப் போன்ற ஸ்தபதிகளுக்கு இந்த இரு மூர்த்திகளுந்தான் அற்புதப் பொருளாக உள்ளன என்றும் வைத்தியநாத ஸ்தபதி அவர்கள் வியந்து குறிப்பிடுகிறார்.

வழிபாட்டு நெறிமுறைகள்

  • மலர், மாலை, நறும்புகை முதலியவை திருமுற்றத்தில் அதற்கென உள்ள தாம்பாளம் முதலியவற்றிலேயே படைக்கப்பெறும். ஒவ்வொரு மாதமும் முதல் நாள் திருவுருவங்கட்கு எண்ணெய் சார்த்தித் திருநீராட்டுச் செய்யப்பெறும். மூர்த்திகட்குத் திருநீராட்டுச் செய்யும் போது அதற்கென அன்று ஆக்கிய தொன்னை போன்றவற்றாலேயே நீராட்ட வேண்டும். உலோகம், மரம், மண்கலன்கள் போன்றவற்றைப் பயன்படுத்தக்கூடாது. (திருக்குட நீராட்டு விழாப் போன்ற பெருஞ்சாந்திக் காலங்களில் மட்டும் இவ்விதி தளர்த்தப் பெறும்.)
  • தமிழ்த்தாய் முதலிய வழிபாட்டுத் திருவுருவங்கட்கு ஆடை, அணி, மாலை முதலியவை அணிதல் கூடாது. ஆனால் மூர்த்திகளை எவ்வகையானும் ஒட்டாமல் அணி செய்யப்படும்.
  • மா, வாழை, பலா, இளநீர், தேங்காய், தேன், பால், சர்க்கரை போன்ற பொருட்கள் படைக்கப்படுகின்றன.
  • கோயிற் பொது வழிபாடு நிறைவேறியதும் தேங்காய், பழம், மலர் முதலியன நிறைந்த படையல் தாம்பாளத்தை வந்திருக்கும் பெருமக்களில் வயது, அனுபவம் முதலியவற்றால் மூத்த ஒருவருக்கு ( சாதி-மத பேதமின்றி ) வழங்கிய பின் யாவர்க்கும் சந்தனம், மலர், சர்க்கரை ஆகியவை அருட்பொருளாய் (பிரசாதம்) வழங்கப்பெறும்.
  • மூர்த்திகட்கு திருக்கலய நீராட்டுவதும், ஆண்டு பன்னிரண்டுக்குமேல் போகாமல் வரையறை செய்துவிட வேண்டும். எண்ணெய், பால், தயிர், இளநீர், பழச்சாறுகள், நறுமணநீர், கங்கை, மந்திரக் கலயநீர், பன்னீர் போன்றவை திருநீராட்டுக் காலத்தில் பயன்படுத்தப்பெறும்.
  • மந்திரக் கலயநீரை புனிதநீராக ஆக்குவதற்கு மூன்று, ஆறு, பன்னிருவர் இருந்து தமிழ்ப் பாசுரங்கள் பாடிப் பாராயணம் செய்யவேண்டும். 16, 24, 32, 64, 96, 108 முறை மாறி மாறிப் பாசுரங்கள் ஓதப்படும். அத்துடன் போற்றி வணக்கம் ஓதி மலரும் பச்சிலையும் தூவப்படும். இந்த மந்திரக் கலயநீரை மேளவாத்தியம், தீவட்டி முதலிய மரியாதையுடன் எடுத்துச்சென்று திருநீராட்டுச் செய்யப்படும்.

தமிழ்த்தாய் மீது மரபுக்கேற்றவாறு புலவர் பெருமக்களைக் கொண்டு பாடல்கள் யாத்துத் "தமிழ்த்தாய்ப் பிரபந்தம்' எனத் தமிழ்த்தாய்க் கோயில் திறப்புவிழாவின் போது போற்றி நூல் வெளியிடப்பெற்றது. அப்பிரபந்தப் பாடல்களை நாள்தோறும் கோயிலில் ஓதுவார் இசைக்க, வழிபாடு நடைபெறுகிறது.

தமிழ்நாட்டில் எங்குமில்லாத தமிழ்த்தாய்க் கோயிலை, "கம்பன் அறநிலை' செவ்வனே நிருவாகம் செய்து வருகிறது. இந்தக்கோயில் தமிழுக்கும், தமிழகத்துக்கும் என்றும் சீரும் சிறப்பும் தருவதாக அமைந்துள்ளது.

மேற்கோள்கள்

  1. பேசும் மொழிக்கு " ஒரு கோயில்'
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.