தமிழகத்தில் பெருங்கற்கால கட்டிடக்கலை

தமிழர் பெருங்கற்காலக் கட்டிடக்கலை என்பது, தமிழ் நாட்டில் பெருங்கற்காலப் பண்பாடு நிலவிய காலத்தில் புழக்கத்திலிருந்த தமிழர் கட்டிடக்கலை பற்றியதாகும். இயற்கையாகக் கிடைக்கும், அளவிற் பெரிய கற்களை அடுக்கி அமைப்புக்களை உருவாக்குவது பெருங்கற்காலத்துக்குரிய சிறப்பியல்பாகும். இந்த இயல்பே இக்காலப் பகுதிக்கு இப் பெயரை வாங்கிக் கொடுத்துள்ளது. தமிழ் நாட்டில் அமைக்கப்பட்ட பெருங்கற்கால அமைப்புக்கள் பெரும்பாலும் இறந்தவர்களுக்காக அமைக்கப்படும் ஈமச்சின்னங்கள் ஆகும்.

தமிழ் நாட்டில் பெருங்கற்காலப் பண்பாட்டின் காலம்

தமிழ் நாட்டில் பெருங்கற்காலப் பண்பாடு புதிய கற்காலப் பண்பாட்டைத் தொடர்ந்து நிலவியது. தமிழரின் புதிய கற்காலத்துக்குரிய பண்பாடு கி.மு. 2800 தொடக்கம் கி.மு. 500 வரை நிலவியதாகவும், பெருங்கற்காலப் பண்பாட்டின் காலம் கி.மு 500 தொடக்கம் கி.பி. 100 வரை என்றும் கருதப்படுகிறது. சங்ககால நூல்களில் பெருங்கற்காலப் பண்பாட்டுக்குரிய கல்பதுக்கை, கல்திட்டை முதலிய ஈமச்சின்னங்கள் பற்றிப் பரவலாக எடுத்தாளப்பட்டுள்ளதால், தமிழகத்தின் பெருங் கற்காலப் பண்பாடு, சங்ககாலப் பண்பாட்டின் ஒரு கூறாக இருக்கலாம் எனவும் கருதப்படுகின்றது.

பெருங் கற்கால அமைப்புக்கள்

என்பன தமிழ் நாட்டில் காணப்படும் பெருங் கற்கால அமைப்புக்களாகும் [1].

கட்டிடக்கலை வளர்ச்சியில் பெருங் கற்காலப் பண்பாட்டின் பங்கு

பொதுவாகப் பெருங் கற்காலப் பண்பாடு, கட்டிடங்கள் அமைப்பதற்கான தொழில்நுட்பத்தின் வளர்ச்சியில் முக்கியமானதொரு மைல்கல் எனலாம். தமிழ் நாட்டில் இக் காலத்தில் பெரிய கற்களைப் பயன்படுத்தி நினைவுச் சின்னங்கள் அமைக்கப்பட்டன. இவற்றை நோக்குவதன் மூலம் இக்காலக் கட்டிடக் கலையில் ஏற்பட்ட சில வளர்ச்சிப் போக்குகளை அறிந்துகொள்ள முடியும்.

  • இயற்கையில் காணப்படும் கற்களைத் தேவைக்கு ஏற்றாற்போல் தெரிந்தெடுக்க அறிந்து கொண்டமை;
  • இலகுவில் வெட்டியெடுக்கப்படக்கூடிய கல் வகைகளைப் பற்றித் தெரிந்து கொண்டமையும், அவற்றை ஓரளவு தேவையான அளவில் வெட்டக் கூடிய அறிவைப் பெற்றுக் கொண்டமையும்;
  • இத்தகைய கற்களின் அமைப்பியல் இயல்புகளைத் தெரிந்து கொண்டமை;
  • பெரிய கற்களைக் கையாளவும், அவற்றை இடம்விட்டு இடம் நகர்த்திச் செல்லவும் உதவும் தொழில் நுட்பத்தைப் பெற்றுக் கொண்டமை;
  • கற்களைத் தூக்கித் தேவையான இடத்தில் நிறுத்தக் கற்றுக் கொண்டமை;
  • கற்களை நிலத்திலிருந்து உயரத்தில் தாங்குவதற்கான அடிப்படை அமைப்பியல் அறிவைக் கொண்டிருந்தமையும், அவ்வாறு செய்வதற்குரிய தொழில்நுட்பத் திறன் பெற்றிருந்தமையும்;

போன்ற அம்சங்கள் பெருங்கற்காலப் பண்பாட்டு வளர்ச்சியின் முக்கியமான அடிப்படைகளாகத் திகழ்ந்தன எனலாம். இது போன்ற தொழில்நுட்ப அம்சங்கள் ஒருபுறமிருக்க, வடிவமைப்பிலும், இத்தகைய அமைப்புக்களின் பயன்பாடு தொடர்பான தமிழர்களில் உலக நோக்கிலும் முன்னேற்றங்கள் அல்லது மாற்றங்கள் ஏற்பட்டன.

குழிகளை வெட்டுவதன்மூலமோ, சுற்றிலும் சுவர்களை அல்லது வேலிகளை அமைப்பதன் மூலமோ பரந்த வெளியிலிருந்து தனிப்பட்ட தேவைக்கான இடத்தைப் பிரித்தெடுத்துக் கொள்வதற்கான அறிவு இருந்தது. இது, இக் காலத்துக்கு முற்பட்ட புதிய கற்காலப் பண்பாட்டின் தொடர்ச்சியாக இருக்கலாம். எனினும், மேற்குறிப்பிட்ட கருத்துருக்களுக்கு இலகுவாகக் கையாளக்கூடிய மண், மரக்கிளைகள், இலை, குழை போன்ற கட்டிடப் பொருட்களாலேயே புதிய கற்காலத்தில் வடிவம் கொடுத்தனர். பழங் கற்காலத்தில், நிலைத்திருக்கக்கூடிய ஆனால், கையாளுவதற்குக் கடினமான பெரிய கற்கள் இக் கருத்துருக்களுக்கு வடிவம் கொடுப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டன. இவ்வாறு ஒதுக்கப்பட்ட இடத்தைத் தேவைகளுக்கேற்ப அறைகளாகப் பிரித்துக்கொள்வதற்கான வடிவமைப்பு உத்திகளைத் தெரிந்து வைத்திருந்ததற்கான சான்றுகள், தமிழ் நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் தொல்லியல் ஆய்வுகள் மூலம் கிடைத்துள்ளன. கொடுமணல் அகழாய்வுகளின் போது அறியப்பட்ட பெருங் கற்காலக் கட்டுமானங்கள் சிறந்த எடுத்துக்காட்டுகள் ஆகும்.

குறிப்புக்கள்

  1. பவுன்துரை, இராசு., டிசம்பர் 2004, ப. 74.

உசாத்துணைகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.