குத்துக்கல்
குத்துக்கல் (menhir) அல்லது நெடுங்கல் என்பது பெரிய நிலைக்குத்தாக நாட்டப்படுகின்ற தனிக் கல்லாகும். இது வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதலாகவே இறந்தோருக்காக அமைக்கப்படும் நினைவுச் சின்னமாகும்.
முக்கிய குத்துக்கற்கள்
தற்போது இருப்பவற்றுள் மிகப்பெரிய குத்துக்கல், பிரான்ஸ் நாட்டின் பிரிட்டனியில் உள்ள லோக்காமரியாக்கர் (Locmariaquer) என்னுமிடத்தில் அமைந்துள்ளது. அமைக்கப்பட்டபோது 20 மீட்டர்கள் உயரமாக இருந்திருக்கக்கூடிய இது இன்று நான்கு துண்டுகளாக உடைந்து விழுந்து கிடக்கின்றது. இதனால் இது பெரிய உடைந்த குத்துக்கல் எனப்படுகின்றது. முழுக்கல்லாக இருந்தபோது சுமார் 330 தொன்கள் நிறை கொண்டதாக இருந்திருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ள இது, இயந்திர வலுவின் உதவியின்றி மனிதனால் நகர்த்தப்பட்ட, உலகிலேயே இரண்டாவது அதிக பாரமான பொருள் என்று கூறப்படுகின்றது.
பிரிட்டனியில் உள்ள கர்னாக் கற்கள் (Carnac stones) எனப்படும் குத்துக்கல் தொகுதி மிகவும் பிரபலமானது. இங்கே 3000 க்கு மேற்பட்ட குத்துக்கற்கள் மூன்று பிரிவுகளாக ஒழுங்கு படுத்தப்பட்டுப் பல கிலோமீட்டர் தூரத்துக்கு வரிசையாக அடுக்கப்பட்டுள்ளன.
குத்துகல் வழிபாடு
குத்துக்கல்லைத் தமிழகத்தில் முன்னோர்களாக நினைத்து வணங்கி வழிபட்டு வந்துள்ளனர். சேலம் நகரின் அம்மாப்பேட்டை எனுமிடத்தில் குத்துக்கல்லை கூச்சிக்கல் முனியப்பன் என்ற பெயரில் வழிபடுகின்றனர். நெல்லை மாவட்டம் சமூகரெங்கபுரம் எனும் ஊரில் உள்ள குத்துகல்லை குத்துக்கல் மாடசுவாமி என்று வழிபடுகின்றனர்.
இவற்றையும் பார்க்கவும்
- கல்திட்டை
- கல்பதுக்கை
- நடுகல்
- குடைகல்
- கல்குவை