நிலைக்குத்து
நிலைக்குத்து (vertical) என்பது மேல், கீழ் இரண்டுடனும் பொருந்தி வருகின்ற ஒரு திசை சார்ந்த கருத்துருவாகும். அறிவியல் அடிப்படையில் நோக்கும்போது, ஒரு புள்ளியூடாகச் செல்லுகின்ற திசை, அவ்விடத்தில் உள்ள புவியீர்ப்பின் திசையின் போக்கில் இருக்குமானால் அது நிலைக்குத்துத் திசை ஆகும்.

ஏறத்தாழ செங்குத்தாக நிற்கும் எஃவ் 15 வகை போர் விமானம்
நிலைக்குத்து தொடர்பான சில உண்மை நிலைகள்
நிலைக்குத்து என்ற சொல், அன்றாட நடவடிக்கைகளோடு ஒட்டியும், சாதாரணமாக நாங்கள் காணும் பொருட்கள், நிகழ்வுகள் தொடர்பிலும் மிகப் பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஒரு கருத்துருவோடு ஒத்ததாக இருப்பினும், இதற்கான சரியான வரைவிலக்கணம் கூற முற்படுவது எளிமையானது அல்ல. நிலைக்குத்து என்பது தொடர்பான பின்வரும் குறிப்புக்கள் இதற்கான சரியான விளக்கத்தைப் பெறுவதற்கு உதவும்.
- நிலைக்குத்து என்ற கருத்துரு, பூமி, வேறு கோள்கள், நட்சத்திரங்கள் போன்றவற்றுக்கு அருகில் இருப்பதுபோலத் தெளிவாக உணரக்கூடிய ஈர்ப்புச் சக்தி இருக்கும்போதே பொருள் உடையதாகின்றது. இத்தகைய இடங்களுக்கு வெளியே, ஈர்ப்புச்சக்தி வலிமை குறைவாக இருக்கின்றபோது, நிலைக்குத்து என்பதற்கு எவ்வித பொருளும் கிடையாது.
- பூமியைப் போன்ற கோள் ஒன்றைக் கருத்தில் எடுக்கும்போது, அதன் ஈர்ப்புச் சக்தி அதன் மையத்தை நோக்கிய திசையிலேயே எபொழுதும் உள்ளது. இதனால், அக் கோளின் மேற்பரப்பின் வெவ்வேறு இடங்களில் ஈர்ப்பின் திசை மாறுபடுகின்றது. ஆகவே, நிலைக்குத்து என்பதனால் குறிக்கப்படும் திசையும் இடத்திற்கு இடம் மாறுபடுகின்றது. எனவே அச்சொட்டாக அளக்க முற்படும்போது, வெவ்வேறு இரண்டு புள்ளிகளில் நிலைக்குத்து என்பது ஒன்றுக்கு ஒன்று இணையாக (சமாந்தரமாக) இருக்காது.
- பொதுவாக நிலைக்குத்து, கிடைத் தளம் (horizontal) என்பதற்குச் செங்குத்தானது எனப்படுகின்றது. இதுவும், மேற்குறிப்பிட்ட கிடைத் தளமும், நிலைக்குத்தும் ஒரே புள்ளியைக் குறித்ததாக இருக்கும்போதே பொருள் உடையதாகும். ஏனெனில், கிடை என்பதும் ஒரு குறிப்பிட்ட புள்ளியில் மட்டுமே கிடையாக இருக்கும். உண்மையில் கிடை, நிலைக்குத்து என்பன ஒரு குறிப்பிட்ட புள்ளி அல்லது இடம் சார்ந்த கருத்துருக்கள் ஆகும். இதனால், நிலைக்குத்து, கிடைத்தளம் என்பன பற்றிப் பேசும்போது, அவை எப் புள்ளியைக் குறித்துப் பேசப்படுகின்றன என்பதைக் குறித்தல் அவசியம் ஆகின்றது.
- உண்மையில், பூமியைப் போன்ற சீரற்ற தன்மை கொண்ட கோளொன்றில், அக் கோள்கள் ஆக்கப்பட்ட பல்வேறு அடர்த்திகளைக் கொண்ட பொருட்களின் பரவுகை ஒரே தன்மைத்தாக இல்லாதிருப்பதன் காரணமாக, அவற்றின் ஈர்ப்பு வலயம் (gravity field), சீரானதாக அமைவதில்லை. இதனால் உண்மையான நிலைக்குத்துத் திசைகள் நேர்கோட்டுத் திசையில் அமையாதது மட்டுமன்றி, ஒரே புள்ளியில் சந்திப்பதும் கிடையாது.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.