தடா பெரியசாமி
தடா பெரியசாமி (பிறப்பு: 5 செப்டம்பர், 1962) தமிழக அரசியல்வாதி மற்றும் பட்டியலின மக்கள் செயற்பாட்டாளர் ஆவார். பஞ்சமி நிலம் மீட்புப்பணிக்காக மண்ணுரிமை மீட்பு இயக்கம் என்ற அமைப்பையும், நந்தனார் சேவாசிரம அறக்கட்டளையை நடத்தி வருகிறார். தற்போது பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினராகவும் உள்ளார்.[1]
தடா பெரியசாமி | |
---|---|
![]() தடா பெரியசாமி | |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | 5 செப்டம்பர் 1962 |
தேசியம் | இந்தியன் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி |
வாழ்க்கை துணைவர்(கள்) | பெ ராணி |
பிள்ளைகள் | பெ பிரபாகரன்,பெ தமிழினி |
இருப்பிடம் | பெரம்பலூர், தமிழ்நாடு, இந்தியா |
இணையம் | http://www.tadaperiyasamy.com/ |
அரசியல்
பட்டியலின மக்கள் மீதான கொடுமைகளுக்கு எதிராகச் செயல்பட 1983 ஆம் ஆண்டு நக்சல்பாரி அமைப்பில் சேர்ந்தார். அரியலூர் மருதையாற்றுப் பாலம் குண்டுவெடிப்பு வழக்கில் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, தூக்குத் தண்டனை பெற்றார்.[2] பின்னர் விடுதலை பெற்று 1990 ஆம் ஆண்டு தொல். திருமாவளவனுடன் இணைந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைத் தொடங்கினார்.[3] 2001 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் கூட்டணிக் கட்சியான திமுக சின்னத்தில் போட்டியிட்டுத் தேல்வியடைந்தார்.[4] பின்னர் கருத்து வேறுபாட்டால் அக்கட்சியிலிருந்து நீங்கி 2004 இல் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்து அதே ஆண்டு சிதம்பரம் மக்களவைத் தொகுதியிலும், 2006 இல் சட்டமன்றத் தேர்தலில் வரகூர் தொகுதியிலும் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.
சிறை வாழ்க்கை
அரியலூர் மருதையாற்றுப் பாலம் குண்டுவெடிப்பு வழக்கில் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, தூக்குத் தண்டனை பெற்றார். பின்னர் 3 ஆண்டு சிறைக்கு பிறகு சென்னை உயர் நீதி மன்றம் நிரபராதி என்று தீர்ப்பளித்து விடுதலையானார்.
1992ஆம் ஆண்டு அக்டோபர் 24ஆம் தேதி திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த கல்லக்குடி பழங்கானத்தம் - கல்லகம் ரெயில் நிலையங்களுக்கு இடையே ரெயில் தண்டவாளம் குண்டு வைத்து தகர்க்கப்பட்டது.இது தொடர்பாக தமிழ்நாடு விடுதலைப்படை மற்றும் தமிழக மக்கள் விடுதலை படை ஆகிய இயக்கங்களை சேர்ந்த கடலூர் செந்தில்குமார், தடா பெரியசாமி, லெனின், காராளன் என்கிற நாகராஜன், சீலியம்பட்டி ராஜாராம் ஆகியோரை கைது செய்த கியூ பிரிவு போலீசார், திருச்சி தடா சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்நிலையில், லெனின் குண்டுவெடிப்பிலும், ராஜாராமும், நாகராஜனும் சென்னையில் நடந்த போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதனால் மற்ற இருவர் மீது மட்டும் வழக்கு விசாரணை திருச்சி நீதிமன்றத்தில் நடந்து வந்தது. 20 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கல் தீர்ப்பு அளிக்கப்பட்டது. நீதிபதி பி.வேல்முருகன் அளித்த தீர்ப்பில், குற்றம்சாற்றப்பட்ட செந்தில்குமாருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.7 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனையும், தடா பெரியசாமிக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், 4 ஆயிரம் ரூபாய் அபராதமும் அபராதம் கட்டத்தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். பின்னர் 2014 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற மேல் முறையீட்டில் நிரபராதி என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் அவர்கள் தீர்ப்பு வழங்கினார். தடா வழக்கில் ஏறக்குறைய 3 ஆண்டுகள் சிறையில் இருந்தார். எனவே தன் வாழ்நாளில் 6 ஆண்டுகள் சிறையில் இருந்துள்ளார்
தேர்தல் முடிவு
பொது தேர்தல், 2004: சிதம்பரம் | ||||||
---|---|---|---|---|---|---|
கட்சி | சின்னம் | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
பாமக | இ .பொன்னுசாமி | 343,424 | 46.17 | -0.95 | ||
விசிக | தொல். திருமாவளவன் | 255,773 | 34.41 | n/a | ||
பா.ஜ.க | தடா து. பெரியசாமி | 113,974 | 15.32 | n/a | ||
வாக்கு வித்தியாசம் | 87,651 | 11.78 | -4.53 | |||
பதிவான வாக்குகள் | 643,871 | 66.09 | +0.07 | |||
பாமக கைப்பற்றியது | மாற்றம் | -0.95 |
நந்தனார் சேவாசிரம அறக்கட்டளை
நந்தனார் சேவாசிரம டிரஸ்ட் என்ற தொண்டு நிறுவனத்தைத் தொடங்கி தியானம், யோகா, நீதி போதனை, விளையாட்டு, வேலைவாய்ப்புப் பயிற்சி என சமூகப் பணி செய்து வருகிறார். மற்றும் சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்களின் சேவை அமைப்பான AIM For Seva வின் மாணவர்கள் விடுதி ஒன்றும் பெரம்பலூர் மாவட்டம் ரஞ்சன்குடி கிராமத்தில் நடத்தி வருகிறார்.[5]
பஞ்சமி நிலம் மீட்பு
2010 இல் மண்ணுரிமை மீட்பு இயக்கம் தொடங்கி தமிழகம் முழுவதும் உள்ள பஞ்சமி நிலப் பட்டியலைத் தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ், வாங்கி வெளிக்கொண்டு வந்துள்ளார். இதில் தமிழகம் முழுக்க உள்ள நிலத்தைக் கணக்கெடுத்து அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பெறப்பட்ட தகவலின் கீழ், பெரம்பலூர் மாவட்டத்தில் மூன்று வட்டங்களில் 134 கிராமங்கள் உள்ளன. அதிகாரப்பூர்வ தகவல்கள் படி, 4442 ஏக்கர் நிலங்கள் பஞ்சமி நிலங்களாக உள்ளன. அதில் 1263 ஏக்கர் நிலங்கள் 948 பேருக்கு பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள 3180 ஏக்கர் நிலங்கள் 3148 நபர்களின் பெயரில் உள்ளன. இந்த நிலங்கள் ஆதி திராவிட மக்கள் பெயரில் இருந்தாலும், சுமார் 25 சதவிகிதம் நிலங்கள் மற்ற வகுப்பினரால் அனுபவிக்கப்படுகிறது. மொத்தம் சுமார் 2000 ஏக்கர் நிலங்கள், அதாவது, 50 சதவிகித பஞ்சமி நிலங்கள், பிறரால் அனுபவிக்கப்படுகின்றன என்று தடா பெரியசாமி கூறுகிறார்.[6]
விருதுகள்
21 செப்டம்பர் 2017 ஆம் ஆண்டு தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பனின் 90வது பிறந்தநாள் விழாவில் அமிழ்தத்தமிழ் ஆய்வரங்கம் சார்பில் தடா பெரியசாமி அவர்களுக்கு தினமணி ஆசிரியர் வைத்தியநாதன் கல்வி வள்ளல் விருது வழங்கினார். 14 ஏப்ரல் 2017 ஆம் ஆண்டு RSS சார்பில் சமூக நல்லிணக்க விருது வழங்கப்பட்டது. எண்ணங்களின் சங்கமம் சார்பில் சிறந்த சமூக சேவைக்கான விருது வழங்கப்பட்டது .
மேற்கோள்கள்
- "பெரம்பலூர் மாவட்ட பாஜக செயற்குழு கூட்டம்". தினகரன். http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=856899. பார்த்த நாள்: 26 December 2018.
- "தட.. தட.. தடா பெரியசாமி!". விகடன். https://www.vikatan.com/anandavikatan/2011-dec-14/en-vikatan---trichy-edition/13672.html. பார்த்த நாள்: 26 December 2018.
- "Once a Naxalite, now a teacher for dalit kids Read more at: http://timesofindia.indiatimes.com/articleshow/49528412.cms?utm_source=contentofinterest&utm_medium=text&utm_campaign=cppst". timesofindia. https://timesofindia.indiatimes.com/city/chennai/Once-a-Naxalite-now-a-teacher-for-dalit-kids/articleshow/49528412.cms. பார்த்த நாள்: 26 December 2018.
- Wyatt, Andrew. Party System Change in South India. Routledge. https://books.google.co.in/books?id=u82MAgAAQBAJ&pg=PT195. பார்த்த நாள்: 26 December 2018.
- "போயஸ் இல்லத்தில் நடந்த சோதனை குறித்து கேள்வி: சங்கர மடத்துக்குள் பூட்ஸ் காலுடன் போலீஸை அனுப்பியவர்தானே ஜெயலலிதா - தடா பெரியசாமி ஆவேச பதில்". இந்து தமிழ். https://tamil.thehindu.com/tamilnadu/article20559982.ece. பார்த்த நாள்: 26 December 2018.
- "பஞ்சமி நிலம் - பூர்வ குடிமக்களிடமிருந்து பறிக்கப்பட்ட நிலத்தைத் தேடி". பார்த்த நாள் 26 December 2018.