செங்குந்தர் துகில்விடு தூது

தமிழகத்தில் பல சாதிகளைப் பற்றிப் புலவர் பலர் சாதி நூல்கள் பலவற்றைப் பாடி உள்ளனர். அவற்றில் உயர்வு நவிற்சியான போலிக் கதைகள் இருந்தாலும் கூட, சில சாதியருடைய பண்டைக் கால வழக்க ஒழுக்கங்களும் வேறு சில செய்திகளும் கிடைக்கின்றன. செங்குந்தர் துகில்விடு தூது என்னும் இந்நூல் செங்குந்தர் மரபினரைப் பற்றிக் கூறுகின்றது.

நூல் விபரம்

இந்நூலில், காப்புச் செய்யுள் ஒன்றும், இடையில் 271 கண்ணிகளையும், இறுதியில் வாழ்த்துச் செய்யுளோடு, நேரிசை வெண்பா ஒன்றையும் பெற்றுள்ளது. இது, ஆண் பெண்மீது விடுத்த தூது.

ஆசிரியர் வரலாறு

சேலம் மாவட்டம், வெண்ணந்தூர் என்னும் ஊரில் செங்குந்தர் குலத்தில் பிறந்த பரமானந்த நாவலர் என்பார் இதன் ஆசிரியர் ஆவர். இவர் தன்னுடைய இளமைப் பருவம் முதல் முருகக் கடவுளின் கருணை நோக்கம் பெற்று, இலக்கண இலக்கியங்களை நன்றாக பயின்று, விருதுகவி பாடும் திறமை பெற்று விளங்கினார் என்ற கருத்து பின்வரும் அடிகளால் அறியப்படுகின்றது.

சேர்கொங்கில்
சேலம் வெண் ணந்தூர்தல மாம்பொனலை யாகிரியில்
வேலரரு ளாலே விருதுகவி-நாலுதிக்கும்
நாட்டுப்பர மானந்த நாவலனென் பேராகும்
பூட்டுமன்பா லிட்டலிங்கப் பூசைசெய்து-கூட்டருள்சேர்
வீரசைவா சாரம் விளங்கியசெங் குந்தர்குல
தீரனென்று சேதியெல்லாஞ் செப்பினேன்

பெரிய திறம் படைத்த அரசர்களாலும், சிறிய அரசர்களாலும், கொடைத்தன்மை வாய்ந்த வள்ளல் பெருமக்களாலும் தம்முடைய செங்குந்தர் குல அதிபர்களாலும் நன்கு ஆதரிக்கப்பெற்றுப் புகழ் பெற்றவர். முருகன் உள்ள சைவத் தலங்களில் எல்லாம் சென்று அவரைப் புகழ்ந்து பாடி தரிசித்தவர் என்பது இந்நூலின் வாயிலாக அறியப்படுகிறது.

இந்நூலில் செங்குந்தர் குல மரபினருடைய

  • பிறப்பு,
  • தொழில்,
  • கடவுள் பற்று
  • குணங்கள்
  • ஊராளும் நாட்டாண்மை சபை மற்றும் அதன் இயல்புகள் முதலியனவற்றை குறிப்பாகவும், தெளிவுபடவும் இந்நூல் விளக்ககிறது.

நூலின் போக்கு

1-8 கண்ணிகளில், திருமால், பிரமர், முனிவர், இந்திரர் முதலியோர்களின் துயரத்திற்குச் சிவபெருமான் இரங்குதலும், உமையைச் சிவன் மணத்தலும், கந்தப் பெருமான் திருவவதார நிகழ்ச்சியும் கூறப்பட்டுள்ளன.

9-13 கண்ணிகளில், உமையின் பாதச் சிலம்பின் நவரத்தினங்களிலிருந்து நவசத்திகளுண்டாய், அவர்களனைவரும் நவ வீரர்களைப் பெற்ற வரலாற்றுக் குறிப்பும் அவர்களிடத்திலிருந்து தோன்றிய வியர்வையிலிருந்து நூறாயிரவர் தோன்றிய குறிப்பும் கூறப்பட்டுள்ளன.

14-15 கண்ணிகளில், முருகன் பிரமனின் செருக்கை யடக்கிய வரலாறும், தான் சிருஷ்டித் தொழில் செய்ததும் கூறப்பட்டுள்ளன.

16-17 கண்ணிகளில், சிவனால் பிரமன் சிறை மீண்டது, முருகன் சிவனுக்கு பிரணவப் பொருளை குருமூர்த்தமாக நின்று உபதேசித்தது ஆகிய வரலாறுகள் கூறப்பட்டுள்ளன.

18-வது கண்ணியில், முருகன் சக்திவேல் பெற்றதையும்,

19-22 கண்ணிகளில், முருகன் தன் தந்தையின் ஆணைப்படி சூரபதுமன் முதலானோரை வென்ற செய்தியும்,

23-வது கண்ணியில், முருகன், இந்திரன்மகள் தெய்வயானையை மணந்தக் குறிப்பும்,

24-25 கண்ணிகளில், செங்குந்தர் வீரவாகுதேவரின் பரம்பரையினர் என்பதும்,

26-28 கண்ணிகளில், செங்குந்தரின் கடவுள்பற்றும், அவர் செய்யும் திருவிழாவின் குறிப்பும் அவரது பண்பாடு ஆகியவைகளைப் பற்றியும்,

29-வது கண்ணியில், செங்குந்தர் ஆண்ட மண்டலங்களின் பெயர்களையும்,

30-44 கண்ணிகளில், செங்குந்தரின் குணாதிசயங்கள், அவரது தொழில் நுட்பங்கள், தமது குலப் புலவரான ஒட்டக் கூத்தரைப் புரந்து தாம் பெற்ற பேறுகள், அவர்கள் பெற்ற வரிசைகள், பல கொடைவள்ளல்களால் புகழப்பெற்றவை ஆகிய செய்திகளையும் கூறப்பட்டிருக்கின்றன.

45-46 கண்ணிகளில், புலவர் தாம் சென்று போற்றி வந்த முருகன் ஊர்களைப் பற்றிக் கூறுகின்றார்.

47-53 கண்ணிகளில், திருவேரகத்தில் புலவர் தாம் தரிசித்த முருகன் கோலத்தைப் பற்றியும், அச்சந்நிதியில் முனிவர்கள் வணங்கும் காட்சி, நடனமாது ஆடும் காட்சி முதலியவைகளைப் பற்றியும்,

54-வது கண்ணியில், புலவர் முருகனைப்பற்றிப் பாடிப் பணிந்து பாமாலை செய்ததையும்,

55-57 கண்ணிகளில், முருகன் சந்நிதியில் வணங்குவோரின் மெய்ப்பாட்டின் தன்மையையும்,

58-80 கண்ணிகளில், புலவர், முருகன் புகழினைச் சொல்மலர்களால் அருணகிரியார் திருப்புகழ் முதலியன கொண்டு போற்றிப்பாடுகின்றார்.

81-82 கண்ணிகளில், புலவர், திருவேரக முருகனைப் போற்றி செய்து, "தன்னைக் காத்தல் நின்கடன்" எனக்கூறி, தலவாசம் செய்ததாகக் கூறுகின்றார்.

83-89 கண்ணிகளில், முருகன் புலவர் கனவில் தேசிகராய்த் தோன்றி, "யாது வேண்டும் உமக்கு" என வினவினதையும், அதற்குப் புலவர், "கனவினும் உன் புகழைப் பாட, வுனையே வணங்க, பொன் பொலியும் வாழ்வு புகழீகை இன்பம் தவிரா திகபரமும் தந்தருள் ஐயா", எனக் கூறி வேண்டினதையும், முருகன், "பாளைய சீமைக்குள் வளர் செங்குந்த சபையோரின் மூலமாக நீ நினைத்த செல்வமெல்லாம் தந்தருள்வோம்" என்று கூறி மறைந்த செய்தியும் கூறப்பட்டுள்ளன.

90-100 கண்ணிகளில், புலவர் கும்பகோணம், திருநாகேஸ்வரம் முதலிய சிவத் தலங்களைத் தரிசித்துப், பின்னர், பெரிய தம்பி மன்னன் அன்பினால் ஆதரிக்கப்பட்டிருந்த செய்தி கூறுகின்றார்.

101-134 கண்ணிகளில், பாளையஞ் சீமைக்குள் இருக்கும் பல நாட்டு செங்குந்தர்களும் கூடி, பலப்பல தீர்ப்பு வழங்குதலின் நேர்மையும், அந்நாட்டாண்மை சபையின் இலக்கணமும் நேர்மையும் பொதுவாகவும் சிறப்பாகவும் கூறப்பட்டிருக்கின்றன.

135-144 கண்ணிகளில், புலவர் செங்குந்த சபையினிடத்துச் சென்றதும், அச்சபையோர் தன்னை வரவேற்று வினாவியதையும், அதற்குத் தான் பதிலளித்ததையும் கூறுகின்றார்.

145-வது கண்ணியில், அச்சபையோர் தனக்கு ஈந்த வரிசையின் சிறப்பினைக் கூறுகின்றார்.

146-249 கண்ணிகளில், துகிலின் பரியாயப் பெயர்களைக் கொண்டும், அது பயன்படும் இடத்தின் தன்மையைக் கொண்டும், அது இல்லாததால் ஏற்படும் தன்மையும் இருந்தால் ஏற்படும் பெருமையைக் கொண்டும் துகிலின் பெருமையை உயர்வு நவிற்சி படப் புகழ்ந்து கூறுகின்றார்.

250-253 கண்ணிகளில், தன்னை வருத்திய பரத நாட்டியம் கற்றாடிய பெண்ணின் தன்மையையும், தன்னை யவள் வருத்திய விதத்தையும் கூறுகின்றார்,

254-258 கண்ணிகளில், புலவர் பரதவிதத்தாலாடிய பெண்ணைப் புகழ்ந்து கூறுகின்றார்,

259-261 கண்ணிகளில், புலவர் தன் ஊழ்வினையின் வலியை எடுத்துரைக்கின்றார்.

262-வது கண்ணியில், இவையிவை பொல்லாதது ‍என்று கூறுகின்றார்.

263-271 கண்ணிகளில், புலவர், தான் அவளை நினைத்து வருந்தி வாடிய தன்மையையும், அவளையடைய அவளிடத்துத் தூது சென்று அவளை யழைத்துவா, என்று துகிலைத் தூது விடுத்தலோடும் முடிகிறது இந்நூல்.

இந்நூலின் காணும் சிறப்புகள்

முதல் இருபத்தைந்து கண்ணிகளில், கந்த புராண வரலாற்றைத் தொகுக்கப்பட்டுள்ளது. இந்நூலின் வாயிலாக, செங்குந்த மரபினர் பண்டு தமிழகம் முழுவதும் வாழ்ந்து வந்தனர் என்பதும், அந்த காலத்து அரசர்களாலும் வள்ளல்களாலும் அறிஞர் பெருமக்களாலும் சிறப்புப் பட்டங்கள் பெற்றும், அரச காரியங்கள் செய்வோர் என்பதும், தங்களுக்குள் நாட்டாண்மை பொதுச் சபை ஏற்படுத்திக்கொண்டு, வழக்குகளை எவ்வாறு தீர்த்து வைத்தது போன்று சாதுரியம் பெற்று இருந்தனர் என்றும், முருகர் கோயிலில் ஆண்டாண்டுதோறும், "சூரசம்ஹாரத் திருவிழா" செய்பவர் என்றும், முதலாய செய்திகள் அறியக் கிடக்கின்றன. மேலும், ஆசிரியர், தன்னுடைய புலமையை திறம்பட உபயோகப்படுத்தியிருப்பது இவ்வடிகளால் அறியலாம்.

"கற்பிருக்கு மங்கையர்க்குக் காவல் நீ! கற்பில்லா துர்ப்புணர்ச்சி கன்னியர்க்குந் தோழமை நீ !"

"-செங்குந்தர் வாசலெங்கும் ரூபாய் வராகன் விளையாடப் பூசலிட்டு மேன்மேலும் போட்டுவைத்து-"

இக்காலத்து, நெசவுத் தொழில் செய்வோர் இல்லங்களில், நெசவுத் தொழிலை ஆணும் பெண்ணும் ஒன்று சேர்ந்து ஒருவருக்கொருவர் உதவியுடன் செய்வர் என்பது கண்கூடாகப் பார்ப்பவருக்கு விளங்கும். இம்முறை அக்காலத்தும் உண்டு என்பதனை,

“வையகத்தில் சீரிகையாற் பண்சேர்த்து நன்னூல் பாவாக்கிக் காரிகையார் தாரால் கலைசெய்யும்”

என்று எடுத்துக் கூறுகிறார்.

இந்நூலில் காணும் கதைக்குறிப்புக்கள்

  • தாருகாவனத்து ரிஷிகள்,
  • மரியாதை ராமன் கதை,
  • திருவண்ணாமலையில் அரன் முடியை மால்பிரமன் தேடியது,
  • தில்லை நடராசன் அம்பலத்தாடுவது,
  • அதுபொழுது பதஞ்சலி வியாக்கிரபாதர் அருகே நின்றிலங்குவது,
  • அருணகிரிநாதரின் வாக்கின் திறம்,
  • சோழர்கள் கலிங்க நாட்டை வென்றது முதலாய கதைக் குறிப்புக்கள் அறியப்படுகின்றன.

நூல் குறிப்பு

இந்நூல் நிலையத் தமிழ் ஓலைச் சுவடி R. 1756-ஆம் எண்ணிலிருந்து எடுத்து ஒல்லும் வகையான் திருத்திச் செப்பம் செய்து அச்சிடப்பட்டிருக்கிறது. இந்நூலை, சென்னை, திருவல்லிக்கேணி, சிங்காரத்தெரு, 35-ஆம், எண்ணுள்ள வீட்டிலிருக்கும் திருவாளர். எஸ்.வி. துரைராசன் என்பாரிடமிருந்து அரசியலாரால் 1948-ம் ஆண்டு, இந்நூல்நிலையச் சார்பாக விலைக்கு வாங்கப் பட்டதாகும்.

குறிப்புகள்

மேலும் பார்க்க

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.