சுலைமான் நபி

சுலைமான் ‏நபி அல்லது (விவிலியத்தின் பார்வையில், சாலொமோன் அரசர்) (ஆங்கிலம்:Solomon, எபிரேயம்: שְׁלֹמֹה (Shlomo), அரபு மொழி: سليمان (Sulaymān), கிரேக்க மொழி: Σολομών (Solomōn))பண்டைய இஸ்ரேல் இராச்சியத்தின் அரசர். இறையருள் பெற்ற ஒரு புனிதர்; இஸ்லாமியர்கள் சுலைமான் நபி கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்றும் விலங்குகளுடன் பேசுதல், ஜின்களைக் கட்டுப்படுத்துதல் முதலிய ஆற்றல்களை இறைவனின் கொடையாகப் பெற்றவர் எனவும் கருதுகின்றனர்.[1] இஸ்ரேலில் உள்ள இவரது வழிபாட்டுத்தலம் மிகவும் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. இவருக்குப் பின் வந்த அரசர்களுள் இவரைப்போன்று வழிபாட்டுக்குரிய நிலைபேறு அடைந்தவர்கள் யாரும் இல்லை.[2] இறைவன் சுலைமான் நபியுடைய வாழ்நாளில் அவரின் கோரிக்கைகளை எல்லாம் நிறைவேற்றி யாரும் அடைய முடியாத நிலைபேற்றை அளித்தான் என்பர்.[3][4] இன்றும் இஸ்லாமியர்கள் இவரை ஒரு புகழ்பெற்ற புனிதராக, இறையருள் பெற்றவராக நினைவுகூறுவர். இவர் தாவூது நபியின் மகனாவார்.[5]

அரசர் சுலைமான் நபி
சாலமோன் அரசர் தாம் கட்டவிருந்த எருசலேம் கோவிலின் முன்வரைபடத்தைப் பார்வையிடுகிறார். விவிலிய ஓவியம். காலம்: 1896.
தெய்வீகமான அரசர், நபி, ஞானமுள்ள சாலமோன்', கோவில் கட்டமைப்பாளர்.
பிறப்பு1154 BC
இறப்புஅல் அக்சா பள்ளிவாசல், எருசலேம்
பெற்றோர்தந்தை: தாவூது நபி
வாழ்க்கைத் துணைவர்சீபா நாடுட்டு அரசி பல்கிஸ்
ஏற்கும் சபை/சமயம்யூதேயம்
கிறித்தவம்
இஸ்லாமியம்
செல்வாக்குச் செலுத்தியோர்தாவீது
செல்வாக்குக்கு உட்பட்டோர்பல யூதர்கள், கிறித்தவர்கள் மற்றும் முஸ்லிம் அரசர்கள்

வரலாறு

தாவூது நபியின் மகனாகப் பிறந்த இவர்கள் தனது பதின்மூன்றாவது வயதில் அரியைண ஏறும் பேறு பெற்றவர்கள். அவருக்கு 'ஜம்ஷீதூன்' என்னும் பெயரும் உண்டு. இளவயதிலேயே முதிர்ந்த அறிவு அவர்களுக்கிருந்தது. அவர்கள் எப்போதும் மூஸா நபியின் (மோஸஸ்) கைத்தடியை தம்முடன் வைத்திருந்தார்கள். தனது வெண்ணிற மேனிக்கு ஏற்றாற்போல எப்போதும் வெள்ளை நிற ஆடையையே அணிந்திருப்பார்கள். இறைவன் இவர்களுக்கு காற்று, ஜின்கள், விலங்குகள், பறவைகள் அனைத்தையும் வசப்படுத்திக் கொடுத்திருந்தான்.[6]

சுலைமான் நபியவர்கள் தமது மக்களுக்கு மிகவும் பயனுள்ள அறிவுரைகளை வழங்கினார்கள். "பெற்றோர் தமது மக்களுக்காகச் செய்யும் பிரார்த்தனைகளை இறைவன் ஏற்று அருள் புரிகின்றான். எனவே நீங்களும் உங்களின் பெற்றோர் மனம் மகிழ அவர்களுக்கு ஊழியம் செய்யுங்கள். அவர்களின் மனதை நோக வைப்பதையிட்டும் பயந்து கொள்ளுங்கள்." என்ற அறிவுரை பிரசித்தி பெற்றதாக இருக்கிறது.[7]

அரியணை ஏறி நான்காண்டுகள் கழித்து, தமது தந்தை தாவூது நபி அவர்கள் ஆரம்பித்து வைத்த பைத்துல் முகத்தஸ் (எருசலேம் கோயில்) பள்ளிவாசலை நிர்மாணிக்கத் தொடங்கினார்கள். மனிதர்களையும், ஜின்களையும் குழுக்களாகப் பிரித்து, அவர்கள் செய்ய வேண்டிய வேலைகளையும் ஒழுங்கு படுத்திக் கொடுத்தார்கள். எருசலேம் நகரம் நிர்மாணிக்கப்பட்டு முடிந்ததும், அதை பன்னிரெண்டு பகுதிகளாகப் பிரித்து, ஒவ்வொரு இஸ்ரேலியர்களின் ஒவ்வொரு பிரிவினரையும் தனித்தனியாகக் குடியேற்றினார்கள். சுலைமான் நபி தங்களின் ஐம்பத்து மூன்றாவது வயதில் இறைவனிடம் " இறைவா! எனது இறப்பை ஜின்களோ, சாத்தான்களோ அறியா வண்ணம் செய்வாயாக" என்று பிரார்த்தித்தார்கள். அதேபோல் அவர்களின் இறப்பு நிகழ்ந்தது. அன்னாரின் சமாதி இருக்கும் இடம் பற்றி அறிஞர்களுக்கிடையில் கருத்து வேறுபாடுகள் உள்ளன. ஆனால் பெரும்பான்மையோர் பைத்துல் முகத்தஸ் பள்ளிவாசலிலுள்ள 'குப்பதுஸ் ஸஹ்றா' என்னுமிடத்தில் உள்ளது என்று கூறியிருக்கின்றனர்.[8]

34:12 மேலும், நாம் ஸுலைமானுக்குக் காற்றை வசப்படுத்திக் கொடுத்தோம். அதனுடைய காலைப் புறப்பாடு ஒரு மாத தூரம் வரையிலாகும்; மாலைப் புறப்பாடும் ஒரு மாத தூரம் வரையிலாகும். நாம் அவருக்காக உருகிய செம்பின் ஊற்றை ஓடச் செய்தோம். மேலும், ஜின்களையும் அவருக்கு வசப்படுத்திக் கொடுத்தோம். அவைகளோ தம் இறைவனின் கட்டளைப்படி பணிபுரிந்து கொண்டிருந்தன. அவற்றில் எது நம்முடைய கட்டளையை விட்டும் பிறழ்கின்றதோ அதனைக் கொழுந்துவிட்டெரியும் நெருப்பின் வேதனையைச் சுவைக்கும்படிச் செய்வோம். 34:13 அந்த ஜின்கள் ஸுலைமானுக்காக அவர் விரும்பியவை அனைத்தையும் உயர்ந்த மாளிகைகளையும், சிற்பங்களையும், தடாகத்தையொத்த பெரிய தட்டுகளையும், இருப்பிடத்தை விட்டகலாத பெரும் அண்டாக்களையும் உருவாக்கிக் கொடுத்துக் கொண்டிருந்தன தாவூதுடைய வழித்தோன்றல்களே! நன்றி செலுத்தும் வகையில் செயலாற்றுங்கள். என்னுடைய அடிமைகளில் மிகச் சிலர்தான் நன்றி செலுத்துவோராயிருக்கின்றனர். 34:14 பிறகு நாம் ஸுலைமான் மீது மரணத்தை விதித்தபோது, அவருடைய கைத்தடியைத் தின்றுகொண்டிருந்த கரையான்களைத் தவிர வேறெதுவும் அவருடைய மரணத்தைப் பற்றி அந்த ஜின்களுக்கு அறிவித்துக்கொடுக்கவில்லை. இவ்வாறு ஸுலைமான் கீழே சாய்ந்ததும் ஜின்களுக்குப் புலப்பட்டது. மறைவானவற்றை அவர்கள் அறிபவர்களாய் இருந்திருந்தால் இழிவுதரும் இவ்வேதனையில் அவர்கள் சிக்கியிருந்திருக்க மாட்டார்களே!

ஆதாரங்கள்

  1. Qur'an 34: 12
  2. Qur'an 38: 35
  3. Qur'an 27: 15
  4. Qur'an 38: 40
  5. Encyclopedia of Islam, Solomon, Online web.
  6. நபிமார் வரலாறு, அறிஞர் அப்துற் றஹீம், யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ், சென்னை. ஆறாம் பதிப்பு, பக்.449
  7. நபிமார் வரலாறு, அறிஞர் அப்துற் றஹீம், யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ், சென்னை. ஆறாம் பதிப்பு, பக்.457
  8. நபிமார் வரலாறு, அறிஞர் அப்துற் றஹீம், யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ், சென்னை. ஆறாம் பதிப்பு, பக்.555,556
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.