சுப்பிரமணியம் சுகிர்தராஜன்

சுப்பிரமணியம் சுகிர்தராஜன் (டிசம்பர் 12, 1969 - சனவரி 24, 2006) இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர். எஸ்.எஸ்.ஆர் என அழைக்கப்பட்டவர். சுடர் ஒளி பத்திரிகையில் ஊடகவியலாளராகப் பணியாற்றி வந்தவர். ஈழப் போர்க் காலத்தில் இவர் திருக்கோணமலையில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்.

சுப்பிரமணியம் சுகிர்தராஜன்
பிறப்புதிசம்பர் 12, 1969(1969-12-12)
இலங்கை
இறப்பு24 சனவரி 2006(2006-01-24) (அகவை 36)
திருக்கோணமலை, இலங்கை
இறப்பிற்கான
காரணம்
படுகொலை
இனம்இலங்கைத் தமிழர்
பணிஊடகவியலாளர்

ஊடகவியலாளராக வாழ்க்கை

திருகோணமலை நகரின் போர்ச் சூழலில் இருந்து பல செய்தி நிறுவனங்களுக்கு செய்திகளை வழங்கி வந்தார். சுடரொளி, உதயன் ஆகிய பத்திரிகைகளின் திருகோணமலை நிருபராகக் கடமையாற்றிய சுகிர்தராஜன் வீரகேசரி, மெற்றா நியூஸ் ஆகியவற்றில் அரசியல் கட்டுரைகள் எழுதிவந்தார். வீரகேசரியில் எஸ்.எஸ்.ஆர், மனோ, ரஹ்மான் ஆகிய பெயர்களிலும் மெற்றா நியூசில் ஈழவன் என்ற பெயரிலும் துணிச்சலுடன் அரசியல் விடயங்களை வெளிச்சப்படுத்தி எழுதி வந்தார்.

வாழ்க்கைக் குறிப்பு

சுகிர்தராஜன் மட்டக்களப்புக் குருமண்வெளியில் பிறந்தார். தந்தையார் சுப்பிரமணியம். தாயார் அருள் ஞானம்மா. இவர் தனது ஆரம்பக் கல்வியை மட்டக்களப்பு குருமண்வெளி சிவசக்தி வித்தியாலயத்திலும் உயர்கல்வியை மட்டக்களப்பு இந்துக் கல்லூரி மற்றும் மட்டக்களப்பு மத்திய கல்லூரி என்பவற்றிலும் பயின்றார்.

பாண்டிருப்பு கதிர்ப்பு கலை இலக்கிய வட்டத்தின் தாபகத் தலைவரான இவர் 1997 இல் இலங்கைத் துறைமுக அதிகார சபையில் எழுத்தராகப் பணியில் சேர்ந்தார்.

படுகொலை

2006 சனவரி 24 இல் சுகிர்தராஜன் திருகோணமலையில் ஆளுநர் செயலகத்திற்கு அருகாமையில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்.[1] ஐந்து மாணவர்கள் படுகொலை தொடர்பிலான ஆதாரங்களை நிழல்படங்களாக இவர் முன்னர் வெளியிட்டிருந்தார்.[2][3][4] கொலை செய்யப்படுவதற்கு முதல் நாள் அரசு சார்பு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினர் திருகோணமலையில் மேற்கொண்ட நடவடிக்கைகள் அடங்கிய தகவல்களை இவர் சுடரொளியில் வெளியிட்டிருந்தார்.[5] இப்படுகொலை குறித்து எவ்வித விசாரணைகளும் இடம்பெறவில்லை[6].

திருமணமான இவருக்கு இரண்டு பிள்ளைகள் இருந்தனர்.[7]

மேற்கோள்கள்

  • சுப்பிரமணியம் சுகிர்தராஜனின் 31 ஆம் நாள் நினைவுமலர்.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.