சுக்ச்சி கடல்

சுக்ச்சி கடல் (Chukchi Sea) ஆர்க்டிக் பெருங்கடலின் கரையோரக் கடலாகும். இதன் மேற்கெல்லையாக டி லாங் நீரிணையும் கிழக்கில் அலாஸ்காவின் பரோ முனையும் அதையும் கடந்து பியூபோர்ட் கடலும் உள்ளன. பெரிங் நீரிணை தெற்கெல்லையாக பெரிங் கடலுடனும் அதன்வழியே அமைதிப் பெருங்கடலுடனும் இணைக்கிறது. சுக்ச்சி கடலின் முதன்மையானத் துறைமுகமாக உருசியாவின் யூலென் உள்ளது. பன்னாட்டு நாள் கோடு சுக்ச்சி கடலைக் கடக்கிறது. இந்த நாள்கோடு உருசிய நிலப்பகுதி சுகோத்கா தன்னாட்சி வட்டாரம் மற்றும் ராங்கல் தீவை தவிர்க்க கிழக்குமுகமாக வளைக்கப்பட்டுள்ளது.

சுக்ச்சி கடல்
சுக்ச்சி கடலின் நிலப்படம்
ஆள்கூறுகள்69°N 172°W
வகைகடல்
நீர்வள நாடுகள்உருசியா, அமெரிக்க ஐக்கிய நாடு
மேற்பரப்பு பரப்பளவு620,000 km2 (240,000 sq mi)
சராசரி ஆழம்80 m (260 ft)
நீர் கொள்ளளவு50,000 km3 (4.1×1010 acre⋅ft)
உசாத்துணைகள்[1][2][3]
சுக்ச்சி கடலில் இளவேனிற் கால கடற்பனி உடைதல்.

இந்தக் கடலின் பரப்பளவு ஏறத்தாழ 595,000 கிமீ² (230,000 மை²). ஆண்டில் நான்கு மாதங்கள் மட்டுமே இதில் பயணிக்க முடியும்.

புவியியல்

இக்கடலின் பரப்பளவு ஏறத்தாழ 595,000 km2 (230,000 sq mi). நான்கு மாதங்களே பயணிக்கக் கூடிய இந்தக் கடலின் முதன்மை புவியியல் கூறாக இதனடியில் 700-கிலோமீட்டர்-நீளம் (430 mi) ஹோப் வடிநிலம் உள்ளது; இது வடகிழக்கில் எரால்டு வில்வளைவுடன் பிணைக்கப்பட்டுள்ளது. மொத்த பரப்பளவில் 56% பகுதியிலும் கடலின் ஆழம் 50 மீட்டர்கள் (160 ft)க்கும் குறைவாக உள்ளது.

ஆர்க்டிக் பெருங்கடலின் மற்ற கடல்களைப் போலன்றி சுகுச்சி கடலில் வெகு சிலத் தீவுகளே உள்ளன. ராங்கெல் தீவு (Wrangel Island) வடமேற்கு எல்லையில் உள்ளது. எரால்டு தீவு இக்கடலின் வடக்கெல்லை அருகே உள்ளது. தவிர வெகுசில தீவுகள் சைபீரியா, அலாஸ்கா கடலோரங்களில் உள்ளன. இந்தக் கடல் சுகோத்கா மூவலந்தீவிலும் இந்தக் கடலின் கரையோரங்களிலும் வசிக்கும் சுக்ச்சி மக்களைக் கொண்டு பெயரிடப்பட்டுள்ளது. கடலோர சுக்ச்சி மக்கள் வழமையாக மீன் பிடித்தல், திமிங்கில வேட்டை, மற்றும் பனிக்கடல் யானை வேட்டையில் ஈடுபடுகின்றனர்.

கடலோரத்தில் அமைந்துள்ள சில சைபீரிய இடங்கள்: பில்லிங்சு முனை, இசுமிட்டு முனை, அம்குயெமா ஆறு, வங்காரெம் முனை, பெரும் கொல்யூசின்சுகாயா விரிகுடா, நெசுகின்பில்கைன் லகூன், செர்ட்சே காமென் முனை, எனுர்மினோ, செகிதுன் ஆறு, இஞ்சௌன், யூலென் மற்றும் தேசுனெவ் முனை.

வரலாறு

சுக்ச்சி கடலின் கடற்பனிப்பாறைகளை ஆராயும் அறிவியலார்.

1648இல் செய்மோன் செம்யோன் கொலிமா ஆற்றிலிருந்து ஆர்க்டிக்கில் கடற்பயணம் மேற்கொண்டு அமைதிப் பெருங்கடலில் உள்ள அனாடைர் ஆற்றை வந்தடைந்தார். ஆனால் அவரது கடல்வழி நடைமுறைக்கு ஒத்துவராததால் அடுத்த 200 ஆண்டுகளுக்கு இந்த வழி பயன்படுத்தப்படவில்லை. 1728இல் விட்டஸ் பெரிங்கும் 1779இல் கேப்டன் ஜேம்ஸ் குக்கும் அமைதிப் பெருங்கடலிலிருந்து இக்கடலுக்கு வந்தனர்.

செப்டம்பர் 28, 1878இல் அடோல்்ப் எரிக் நோர்டென்சுகோல்டு வரலாற்றில் முதன்முறையாக முழுமையான வடகிழக்குப் பாதையில் பயணித்தார். இந்தப் பயணத்தின்போது அவரது நீராவிக் கப்பல் வேகா கரையோரத்துடன் பிணைத்த கடற்பனிப்பாறைகளில் சிக்கியது. இதனால் அந்தாண்டு குளிர்காலத்தில் கப்பலை மீட்புப்பணிகள் நிறுத்தப்பட்டு பாதுகாப்பு செய்யப்பட்டது. தெளிவான நீருக்கு சில கிமீ தொலைவே என அறிந்திருந்தாலும் கப்பல் மாலுமிகளால் எதுவும் செய்ய இயலவில்லை. அடுத்த ஆண்டு வேனில் காலத்தில் பனிப்பாறைகள் உருகியபின்னரே கப்பல் நகரத் தொடங்கியது; இது பெரிங் நீரிணை வழியாக அமைதிப்பெருங்கடலை எட்டியது.

1913இல் இவ்வாறு கைவிடப்பட்ட கப்பல் கார்லுக் சுக்ச்சி கடலின் வடக்குப் பனிப்பாறைகளில் நகர்ந்து சென்று எரால்டு தீவு அருகே பனிப்பாறைகளால் நொறுங்கியது. இதில் உயிர் தப்பியவர்கள் ராங்கெல் தீவை அடைந்தனர். அங்கிருந்து சுக்ச்சி கடலின் கடற்பனிப்பாறைகளின் மீது கப்பல் தலைவர் ராபர்ட் பார்லெட் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்கள் நடந்து சென்று உதவி நாடினார். சுகோத்சா கடலோர வாங்கரம் முனையை ஏப்ரல் 15, 1914இல் அடைந்தார். ஒன்பது மாதங்களுக்குப் பிறகு ராங்கெல் தீவில் தப்பியவர்களில் 12 பேர் உயிருடன் இருந்தனர். இவர்களை ஆர்க்டிக் கடல் கப்பல் கிங் & விங் காப்பாற்றியது.

933இல் நீராவிக் கப்பல் செல்யுஸ்கின் முர்மன்ஸ்க்கிலிருந்து புறப்பட்டு வடக்குக் கடல் வழி மூலம் அமைதிப் பெருங்கடலை அடைய முற்பட்டது. இதனை ஒரே பருவத்தில் நடத்திக்காட்ட முயன்றது. ஆனால் சக்ச்சி கடலில் பனிப்பாறைகளில் மாட்டிக் கொண்டது. இரண்டு மாதங்களுக்கு பனிப்பாறைகளுடன் நகர்ந்த இக்கப்பல் பின்னர் நசுங்கி பெப்ரவரி 13, 1934இல் மூழ்கியது. ஒருவரது உயிரிழப்புத் தவிர கப்பலில் பயணித்த 104 பேரும் கடற்பனிப்பாறையில் முகாம் அமைத்தனர். சோவியத் அரசு இவர்களை விடுவிக்க பெரும் வானூர்தி வெளியேற்றத்தை ஒருங்கிணைத்தது. அனைவரையும் காப்பாற்றியது.

அக்டோபர் 15, 2010இல் உருசிய அறிவியலாளர்கள் மிதக்கும் முனைய ஆய்வு நிலையத்தை சுக்ச்சி கடலும் ஆர்க்டிக் பெருங்கடலும் இணையும் இடத்தில் அமைத்தனர். செவர்னி போல்யுசு-38 என அழைக்கப்பட்டிந்த நிலையத்தில் ஓராண்டுக்கு 15 ஆராய்ச்சியாளர்கள் தங்கி ஆய்வுகள் மேற்கொண்டனர். இது ஆர்க்டிக்கின் மீது உருசியர்களின் உரிமையை நிலைநாட்டியது. [4]

எரியெண்ணெய் எரிவாயு மூலங்கள்

சுக்ச்சி அடிமட்டத்தில் 30 billion barrels (4.8×109 m3) திறனுள்ள எண்ணெயும் இயற்கை எரிவாயுவும் உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு ஏலம் விட ஐக்கிய அமெரிக்க அரசு முயன்றபோது சூழலியலாளர்களிடமிருந்து பெரும் எதிர்ப்பு எழுந்தது.[5] 2015இல் ஒபாமா ஆட்சியில் ராயல் டச்சு ஷெல் நிறுவனத்திற்கு ஆழமற்ற (140 ft [43 m] ஆழம்) சுக்ச்சி கடல் நீரில் துளையிட அனுமதித்தது.[6] செப்டம்பர் 2015இல் ஏராளமான பொருட்செலவையும் குறைந்து வரும் எண்ணெய் விலையையும் காரணம் காட்டி இந்த துளையிடலை நிறுத்திக் கொண்டது.[7]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.