சுக்குயோமி
சுக்குயோமி என்பவர் ஷிண்டோ மதம் மற்றும் சப்பானிய தொன்மவியலில் கூறப்படும் நிலா கடவுள் ஆவார். சப்பானிய மொழியில் சுக்கு என்றால் நிலா என்றும் யோமி என்றால் பாதாளம் என்றும் பொருள். உணவுக் கடவுள் உகே மோச்சியைக் கொன்றதால் சுக்குயோமி பாதாளத்திற்கு சென்றார். இதுவே அவர் பெயரில் யோமி தோன்றக் காரணமானது.
நிலா கடவுளான சுக்குயோமி இசநாகியின் சுத்தப்படுத்தும் சடங்கின் மூலம் பிறந்தார். இசநாகி தன் வலது கண்ணை கழுவிய போது சுக்குயோமியும் இடது கண்ணைக் கழுவிய போது அமதெரசுவும், மூக்கைக் கழுவிய போது சுசானவோவும் பிறந்தனர்.
ஆரம்பத்தில் சுக்குயோமி தன் உடன்பிறந்தவரான கதிரவ கடவுள் அமதெரசுவுடன் சேரந்து வானத்தை சரிநிகராக ஆண்டு வந்தார். ஒருநாள் அமாதெரசு தன் உயிர்த் தோழியான உணவு கடவுள் உகே மோச்சி அழைத்த விருந்திற்கு தனக்கு பதிலாக சுக்குயோமியை சென்று வருமாறு அனுப்பினார். அங்கு சென்ற சுக்குயோமிக்கு உகே மோச்சியின் உணவு பரிமாறிய விதம் சற்றும் பிடிக்கவில்லை. இதனால் சுக்குயோமி அவரைக் கொன்றார். இதையறிந்து கோபமுற்ற அமாதெரசு இனி சுக்குயோமியின் முகத்தில் விழிக்கவே மாட்டேன் என்று கூறி அவரை விட்டு நிரந்தமாகப் பிரிந்தார். பிறகு சுகுயோமி பாதாளத்திற்குச் சென்றதால் அவரது ஒளி குன்றியது. அமதெரசு காலை நேரத்திலும் சுக்குயோமி இரவு நேரத்திலும் வானத்தை ஆட்சி செய்தனர். இதுவே காலையும் மாலையும் தோன்றக் காரணமானது.