குபேரன் (பௌத்தம்)
குபேரன் அல்லது வைஷ்ரவணன்(वैश्रवण) சதுர்மகாராஜாக்களில் ஒருவர் ஆவார். இவர் வட திசையின் பாதுகாவலராக கருதப்படுகிறார். லோகபாலராக மட்டும் அல்லாது இவர் எட்டு தர்மபாலர்களில் ஒருவரும் ஆவார். பாளி மொழியின் இவரது பெயர் வேஸ்ஸவண(वेस्सवण) என அழைக்கப்படுகிறது.

பெயர்
வைஷ்ரவணன் என்ற பெயர் விஷ்ரவண என்ற வடமொழி சொல்லில் இருந்து பிறந்தது. விஷ்ரவண என்றால் பெரும் புகழுடைய என்று பொருள்.
பிற மொழிகளில் பெயர்கள்:
- சீன மொழி - டுவோ வென் டியான், பிஷாமென் டியான்
- கொரிய மொழி - டாமுன் சீயோன்வாங்
- ஜப்பானிய மொழி - டாமோன்டென், பிஷமொன்டென்
- திபெத்திய மொழி - நாம்தோசே
பௌத்தத்தில் வைஷ்ரவணன் என்றே பெயரே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.
குணவியல்புகள்
பௌத்த குபேரனும் இந்து மத குபேரனும் ஒருவராகவே இருப்பினும், காலப்போக்கில் பௌத்தத்தில் உள்ள குபேரனுக்கு வெவ்வேறு குணங்கள், செயல்கள், கடமைகள், எனப் புராணக்கதைகளில் பல வேறுபாடுகள் ஏற்பட்டுவிட்டன. கிழக்காசியாவில் பௌத்தத்தின் காரணமாகவே குபேரனின் வழிபாடு பரவினாலும், மரபுகதைகளில்(Folk Stories) இவர் ஓர் அங்கமாகவே ஆகி விட்டார். மேலும் இவர் பௌத்தத்துக்கு அப்பாற்பட்ட நிலையிலும் அறியப்படுகிறார்.
குபேரன் வடக்கு திசையின் காவலர் ஆவார். இவருடைய உலகம் சுமேரு மலையின் கீழ் பாதியில் உள்ள மேல் வரிசையின் வடக்கு கால்வட்டமாகும். குபேரன் அனைது யக்ஷர்களின் தலைவராக கருதப்படுகிறார்.
இவர் மஞ்சள் முகமும் உடையவராக காட்சியளிக்கிறார். இவர் ஓர் அரசர் என்பதை குறிக்கும் வகையில், தன்னுடன் குடையை ஏந்தியுள்ளார். மேலும் இரத்தினங்களை வாயிலிருந்து உதிரும் கீரிப்பிள்ளையை வைத்திருப்பவராகவும் அவ்வப்போது சித்தரிக்கப்படுகிறார். கீர்ப்பிள்ளை பேராசை மற்றும் பகைமையின் சின்னமான பாம்பின் எதி்ரியாகும். மேலும் இரத்தினங்கள் உதிரும் செயல் தானத்தை குறிக்கிறது.
தேரவாதத்தில் குபேரன்
பாளி சூத்திரங்களில் குபேரன் வேஸ்ஸவணன் என அழைக்கப்படுகிறார். இவர் நான்கு திசைகளையும் காக்கும் சதுர்மகாராஜாக்களில் ஒருவர் ஆவார். இவருடைய உலகம் உத்தரகுரு (उत्तरकुरु) என அழைக்கப்படுகிறது. அவருடைய உலகத்தில் ஆலகமந்தம் என்ற செல்வத்தின் நகரம் உள்ளது. மேலும் வேஸ்ஸவணன் யக்ஷர்களின் அரசர் ஆவார்.
வேஸ்ஸவணனின் மனைவியின் பெயர் புஞ்சதி (भुञ्जती). இவர்களுக்கு லதா (लता),சஜ்ஜா (सज्जा), பவரா (पवरा),அச்சிமதி (अच्चिमती) மற்றும் சுதா( सुता) என்ற ஐந்து மகள்கள் உள்ளனர். இவருடைய சகோதரி (உடன்பிற்றந்தாள்) மகன் நாக கன்னிகையான இரந்தாதியின் (इरन्दाती) கணவன் புண்ணகன் (पुण्णक). இவருக்கு நாரிவாகனம் என்னும் தேர் உண்டு. இவருடைய ஆயுதம் கதாயுதம் ஆகும். எனினும் இந்த ஆயுதத்தை புத்தரை பின்பற்றுவதற்கு முன்பு வரை மட்டுமே பயன்படுத்தினார்.
குபேரன் என்ற பெயர் வேஸ்ஸவனின் முற்பிறவி பெயராகும். முற்பிறவியில் செல்வ செழிப்பான அரைப்பு ஆலைகளின் அதிபதியாக இருந்தான். தன்னுடைய ஏழு அரைவு ஆலையில் இருந்து ஒரு அரைவு ஆலையின் உற்பத்தி முழுவதையும் தானமாக 20,000 ஆண்டுகளுக்கு கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த நற்செயலில் (நற்கர்மத்தின்) காரணமாக அடுத்த பிறவியில் சதுர்மகாராஜாவாக பிறந்ததாக கருதப்படுகிறார்.
மற்ற பௌத்த தேவதாமூர்த்திகளைப் போல் குபேரன் என்பது ஒரு பதவியாக கருதப்படுகிறது. இவரது இறப்புக்கு பிறகு இன்னொரு குபேரன் இவரது பதவிக்கு வருவார். இவருடையா ஆயுள் 90 லட்சம் ஆண்டுகளாகும். குபேரன் யக்ஷர்களை ஒரு குறிப்பிட்ட இடத்தை பாதுகாக்க ஏவும் அதிகாரம் உள்ளது. யக்ஷர்கள் பாதுகாக்க வேண்டிய இடங்கள் குபேரனின் ஆட்சியின் ஆரம்ப காலத்தின் நிர்ணயிக்கப்படுகிறது.
கௌதம புத்தர் பிறந்தவுடன். குபேரன் அவருடைய ஆதரவாளர் ஆகிவிட்டார். மேலும் புத்தரிடத்தும் அவரின் சீடர்களிடத்து மற்ற தேவர்களிடம் இருந்து மனிதர்களிடமிருந்தும் செய்திகளை கொண்டு வரும் செயலை புரிந்தார். இவர் புத்தர் மற்றும் அவரை பின் தொடர்பவர்களின் பாதுகாவலராகவும் செயல்பட்டார். இவர் புத்தரிடம் ஆடனாடா (आटानाटा) என்ற செய்யுளை அளித்தார். இதை உச்சாடனம் செய்தால் காட்டில் உள்ள புத்தரை நம்பாதை தீய யக்ஷர்களிடமிருந்தும் மற்ற தீய மாய உயிர்களிடமிருந்தும் காக்கப்படுவதாக நம்பப்படுகிறது.
பௌத்த புராணங்களின் படி, மகத அரசன் பிம்பிசாரன் இறப்புக்கு பின்னர் குபேரனின் உலகில் ஜனவாசபன் என்ற யக்ஷனாக மறு பிறவி எய்தினார்.
பௌத்தத்தின் ஆரம்ப காலத்தின், மரங்களையே கோவில்களாக கொண்டு மக்கள் குபேரனை வணங்கினார். சிலர் மக்கட்பேறு வேண்டியும் இவரை வழிபட்டனர்.
ஜப்பானில் குபேரன்
ஜப்பானில் குபேரன் போர்க்கடவுளாக பாவிக்கப்படுகிறார். மேலும் தவறு செய்பவர்களை தண்டிப்பவராகவும் கருதப்படுகிறார். ஒரு கையில் வேலும் இன்னொரு கையில் புத்த பகோடாவும்(Pakoda) வைத்திருக்கிறார். பின்னது செல்வத்தை குறிக்கிறது. பகோடாக்கள் செல்வத்தின் இருப்பிடமாக கருதப்படுவதால் இவர் பகோடாக்களை காவல் காத்து பிறருக்கு அதை அளிப்பதாக நம்பப்படுகிறது. ஷின்டோ மதத்தின் ஏழு அதிர்ஷ்ட தேவதைகளில் ஒருவர்..
இவர் புத்தர் போதனைசெய்த அனைத்து இடங்களை காப்பவராகவும் கருதப்படுகிறார்.
திபெத்தில் குபேரன்
திபெத்தில் குபேரன் ஒரு தர்மபாலராக கருதப்படுகிறார். மேலும் இவர் வடதிசையின் அதிபதியாகவும் செல்வத்தின் அதிபதியாகவும் இருக்கின்றார். வடதிசையின் காவலராக பௌத்த ஆலயங்களின் பிராதன வாசலுக்கு வெளியே உள்ள சுவரோவியங்களில் வரையப்படுகிறார். அவ்வப்போது நாரத்தை பழத்தை கையில் ஏந்தியவராகவும் சித்தரிக்கப்படுகிறார். மேலும் இவர் பருத்த தேகத்துடனும் உடல் முழுதும் அணிகலன்கள் அணிந்தவராகவும் காணப்படுவதுண்டு. அமர்ந்த நிலையில், தன்னுடைய வலது கால் தொங்கும் நிலையில் தாமரை மலரின் மீது ஊன்றிய வண்ணம் உள்ளது. இவரது வாகனம் பனி சிங்கம்.
இவற்றையும் பார்க்கவும்
- சதுர்மகாராஜாக்கள்
- யமன்
- ஏழு அதிர்ஷ்ட தேவதைகள்
- வசுதாரா