சிறுகுடி

சிறுகுடி என்னும் பெயர்கொண்ட ஊர் நான்கு இடங்களில் இருந்ததைச் சங்கநூற் பாடல்கள் தெரிவிக்கின்றன. அவற்றின் ஆட்சித் தலைவர்கள் வேறு வேறு சீறூர் மன்னர்கள். அனைவரும் கொடையாளிகள்.

பண்ணன் (சோழநாட்டுச் சிறுகுடி கிழான்)

சிறுகுடி கிழான் பண்ணன் சிறுகுடி என்னும் ஊரில் வாழ்ந்த சங்ககால வள்ளல். இந்த வள்ளலைச் சோழவேந்தன் பாராட்டுகிறான். தன் வாழ்நாளையும் சேர்த்து எடுத்துக்கொண்டு பண்ணன் வாழவேண்டும் என வாழ்த்துகிறான். அவன் ஊரில் அவனது உணவை உண்போர் ஒலி கேட்டுக்கொண்டே இருக்குமாம். அத்துடன் அவனது இருப்பிடத்தில் உணவுண்ட மக்கள் தனக்கோ, தம்மவர்வளுக்கோ, பிறருக்கோ உணவுப் பொதிகளை எடுத்துச் செல்வார்களாம். இது மழை வரப்போவதை அறிந்த எறும்புகள் தம் முட்டைகளைச் சுமந்துகொண்டு மேட்டுநிலங்களுக்குச் செல்வது போல இருக்குமாம். இப்படிப் பாராட்டுபவன் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன். [1]

சிறுகுடி கிழான் பண்ணனைத் தனக்கென வாழாப் பிறர்க்குரியாளன் எனப் புலவர் கொற்றங்கொற்றனார் குறிப்பிடுகிறார். [2]

குளமுற்றத்துத் துஞ்சிய) கிள்ளிவளவன் ஊரிலுள்ள ஆம்பல் மலரில் மொய்த்த வண்டு கைவள் ஈகைப் பண்ணன் சிறுகுடியில் உள்ள பூக்களையும் ஊதும். "அதுபோல முதுவாய் இரவல! (புலவ!) நீ கிள்ளிவளவனிடமும், பண்ணனிடமும் சென்று பரிசில் பெறுக என்கிறார் புலவர் கோவூர் கிழார் [3]

காவிரியாற்றின் வடக்குப் பகுதியில் மாமரக் குளக்கரையில் இருந்த ஊரில் வாழ்ந்த பண்ணன் சிறந்த வேல் வீரன். காலில் வீரக்கழல் அணிந்திருந்தான். பகைவரின் யானையை வேல் வீசி வீழ்த்தினான் என்கிறர் புலவர் செயலூர் இளம்பொன் சாத்தன் கொற்றனார். [4]

பண்ணன் (தென்னாட்டுச் சிறுகுடி கிழான்)

சிறுகுடி கிழான் பண்ணனைப் பாடியது என்னும் பழங்கால அடிக்குறிப்புடன் காணப்படும் புறநானூற்றுப் பாடல் ஒன்று சிதைந்த நிலையில் உள்ளது. மதுரை அளக்கர் ஞாழலார் மகனார் மள்ளனார் பாடல் இது. [5] பாடலில் வரும் ‘பெரும்பெயர்’ என்னும் குறிப்பு இவனைப் பெரும்பெயர்ப் பண்ணன் எனக் குறிப்பிடுவதாகத் தெரிகிறது. ‘வெல்லும் வாய்மொழி’ என்னும் தொடர் இவனது போர் வல்லமையைக் காட்டுகிறது. இவனைத் ‘தென்னன் மருகன்’ எனப் புலவர் குறிப்பிடுகிறார். இதனால் இவன் பாண்டிநாட்டுச் சிறுகுடியில் வாழ்ந்த வள்ளல் என்பது தெளிவாகிறது.. பருவமழை பொய்த்து விளைவயல் வாடிய காலத்திலும் இந்தப் பண்ணன் தன் இருப்பில் இருந்த உணவுப் பண்டங்களை ஊராருக்கு வழங்கி மகிழ்ந்திருக்கிறான். இவனை நாள்தொறும் பாடாவிட்டால் வழுதி என்மேல் கண்ணோட்டம் இல்லாமல் போகட்டும் என்கிறார் புலவர். எனவே, வள்ளலும் போர்மறவனுமாக விளங்கிய இந்த பண்ணன் என்பவன் வழுதி என்னும் பாண்டிய மன்னனின் படைத்தலைவன் எனத் தெளிவாகிறது.

வாணன் (வாணன் சிறுகுடி)

கடுந்தேர்ச் செழியன் நாட்டில் பெருங்குளம் என்னும் ஏரி இருந்தது. இந்தச் செழியனைத் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் எனல் பொருத்தமானது. அந்தக் குளத்து நீர் சிறுகுடியில் பாயும். இந்தச் சிறுகுடியின் அரசன் வாணன் என்கிறார் புலவர் நக்கீரர் [6]

இந்தச் சிறுகுடி நெல்வயல் சூழ்ந்த ஊர் என்கிறார் புலவர் மதுரைக் காமக்கணி நப்பாலத்தனார். [7]

இந்தச் சிறுகுடிக்கு வடக்கில் காட்டாறு ஒன்று ஓடியது. வாணன் சிறுகுடி வடாஅது தீநீர்க் கானாற்று அவிர் அறல் (போன்றது தலைவி கூந்தல்) [8]

மூதில் அருமன் (மூதில் அருமன் சிறுகுடி)

சிறுகுடி மக்கள் அவ்வூர்ச் சூருடைத் தெய்வத்துக்குக் கருணை வெண்சோறு படைப்பர். காக்கை தன் குஞ்சுகளுடன் அதனை உண்டு மகிழும். இந்த ஊரின் அரசன் மூதில் அருமன். [9]

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் பகுதியில் உள்ள தேவாரப் பாடல் பெற்ற ஊர் இது. சிறுகுடி சூடுசுமபரீசுரர் இப்பாடலில் குறிப்பிடப்பட்டுள்ள சூர் எனத் தெரிகிது.

கருவிநூல்

1. அறிஞர் கழகம் ஆய்ந்து வழங்கிப், பேராசிரியர் எஸ். வையாபுரிப் பிள்ளை தொகுத்துப் பதிப்பித்த சங்க இலக்கியம் (பாட்டும் உரையும்) நூலின் (முதற்பதிப்பு 1940, இரண்டாம் பதிப்பு 1967) இறுதியில் சிறப்புப்பெயர் அகராதி என்னும் தலைப்பின் கீழ்த் தரப்பட்டுள்ள பெயர்ப்பட்டியலிலிருந்து தொகுக்கப்பட்டு உரிய பாடல்களை ஒப்புநோக்கி இந்தக் கட்டுரை உருவாக்கப்பட்டுள்ளது.

2. INDEX DES MOTS DE LA LITERATURE TAMOULE ANCIENNE (1970) (சங்கநூல் சொல்லடைவு)

அடிக்குறிப்பு

  1. பாடல் புறநானூறு 173
  2. தனக்கென வாழாப் பிறர்க்கு உரியாளன் பண்ணன் சிறுகுடி கொற்றங கொற்றனார் பாடல் அகம் 54
  3. பாடல் புறநானூறு 70
  4. காடு இறந்து அகன்றோர் நீடினர் ஆயினும்,
    வல்லே வருவர் போலும் வெண் வேல்
    இலை நிறம் பெயர ஓச்சி, மாற்றோர்
    மலை மருள் யானை மண்டு அமர் ஒழித்த 15
    கழற் கால் பண்ணன் காவிரி வடவயின்
    நிழற் கயம் தழீஇய நெடுங் கால் மாவின்
    தளிர் ஏர் ஆகம் தகை பெற முகைந்த
    அணங்குடை வன முலைத் தாஅய நின்
    சுணங்கிடை வரித்த தொய்யிலை நினைந்தே. 20 அகநானூறு 177

  5. புறநானூறு 388
  6. பாடல் நற்றிணை 340
  7. காய்நெல் படப்பை வாணன் சிறுகுடி - பாடல் அகநானூறு 204
  8. அகநானூறு 117
  9. மூதில் அருமன் பேரிசைச் சிறுகுடி நக்கீரர் பாடல் நற்றிணை 367
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.