கொற்றங் கொற்றனார்

கொற்றங் கொற்றனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். சங்கநூல் தொகுப்பில் இவரது பாடல்களாக இரண்டு உள்ளன. அவை அகநானூறு 54, நற்றிணை 259 ஆகியவை.

  • கொற்றம் = அரசுரிமை, வெற்றி
  • கொற்றன் = எருது, வெற்றியாளன்

அகம் 54

  • திணை - முல்லை

போர் முடிந்து வீடு திரும்பும் தலைவன் தன் தேரோட்டியிடம் சொல்கிறான்.

புதிய மன்னர்கள் செல்வத்தைத் தந்தனர். அதனால் வேந்தன் பகை எண்ணத்தைக் கைவிட்டுவிட்டான். மழையும் பெய்யத் தொடங்கிவிட்டது. நிலத்தில் ஓவியம் தீட்டியது போல கோபம் என்னும் தம்பலப் பூச்சிகள் மேய்கின்றன. தேர் உருளை ஒதுங்கும்படி தேரைப் பார்த்து ஓட்டு.
கோலைக் கையிலே உடைய கோவலர் கொன்றையங் குழல் ஊதும் ஒலி கேட்டு மடியில் பால் சுரக்கும் பசுக்கூட்டம் மணியொலியுடன் மனைக்குத் திரும்பும் மாலை வேளையும் வந்துவிட்டது. விரைந்து ஓட்டு. என் மகனுடன் என் மனைவி பொய்தல் விளையாடுவதைக் காணவேண்டும் - என்கிறான் தலைவன்.

பண்ணன் கொடை

பண்ணன் 'தனக்கென வாழாப் பிறர்க்குரியாளன்' அவன் ஊர் சிறுகுடி.

தலைவியும் குழந்தையும்

தலைவி தன் குழந்தையிடம் மழலைமொழி பேசுகிறாள். பண்ணன் சிறுகுடியில் உள்ள நெல்லிப்பழத்தைத் தின்றுவிட்டு தண்ணீர் குடித்தால் இனிப்பது போன்று தன் நா இனிக்கப் பேசுகிறாள்.

மகன் கழுத்தில் பொன்தாலி

பொன்னாலான தாலி அணிந்துள்ள தன் மகனுக்கு முத்தம் கொடுத்து('ஒற்றி') விளையாட விடுகிறாள். ('பொய்க்கும்') பின் கை கை விரல்களால் அழைக்கிறாள். 'வந்தால் பால் தருவேன்' என்கிறாள். இப்படிச் சொல்லும்போது அவளது நா இனிக்கிறதாம்.

பொய்க்கும் பொய்தல் விளையாட்டு

குழந்தையிடம் பொய் சொல்லி நடக்கவைக்கும் விளையாட்டு

தலைவி வீட்டிலேயே அடைந்துகிடக்கும் நிலை வந்துவிட்டது என்பதைத் தலைவனுக்குச் சொல்லித் திருமணம் செய்துகொண்டு அவளை அடையுமாறு குறிப்பாலுணர்த்தும் பாடல் இது.

நற்றிணை 259

  • திணை - குறிஞ்சி

தோழி தலைவியிடம்

தோழி! இனி என்ன செய்யப்போகிறோம்? வேங்கைச் சாரல் நாடனொடு சேர்ந்து கிளி கடிந்து தினைப்புனம் காத்தோம். அங்குள்ள அருவியில் நீராடினோம். அங்கு அவன் சந்தனக் கட்டையைப் புகைத்த மணத்தில் வண்டுகள் மொய்க்குமாறு கூந்தலை உலர்த்தினோம். இத்தகைய நட்பு இனி அரிது போலும்! கடலில் வெள்ளலை பொங்குவது போல தினை விளைந்து கிடக்கிறது.(இனி அறுவடை ஆகிவிடும். நாம் வரமாட்டோம்) இனி என்ன செய்யப்போகிறோம்?
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.