மதுரை அளக்கர் ஞாழலார் மகனார் மள்ளனார்

மதுரை அளக்கர் ஞாழலார் மகனார் மள்ளனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது 13 பாடல்கள் சங்கநூல் தொகையில் இடம்பெற்றுள்ளன. அவை:
அகநானூறு 33, 144, 174, 244, 314, 344, 353,
குறுந்தொகை 188, 215,
நற்றிணை 82, 297, 321,
புறநானூறு 388
ஆகியவை.

  • அளக்கர் ஞாழல் என்பது சங்ககாலத்தில் மதுரையின் ஒரு பகுதியாக விளங்கியது. அது ஞாழல்மரம் மிகுதியாக இருந்த பகுதி. இப்பகுதியில் மிகவும் சிறப்புற்று விளங்கியவர் மதுரை அளக்கர் ஞாழலார். இவரது மகன் இப் புலவர் மள்ளனார்.
  • பாடல் சொல்லும் செய்திகள்
ஞாழல் மரம்

முல்லைத்திணைப் பாடல்கள்

துனிதீர் முயக்கம்

அவருக்கு என்மீது அருள் இல்லாமல் போனாலும் போகட்டும. என்னைப் பிரியாமல் வாழவேண்டிய அறநெறி பிழைக்கிறாரே என்று என் மனைவி புலம்புகிறாளாம். இந்த நிலையிலும் என் போர்க்கள வெற்றிச் செல்வத்தைக் கேட்கும்போதெல்லாம் உவகை கொள்கிறாளாம். நான் அவளது ஊடலைத் தீர்த்து அணைப்பதுபோல் என் வெற்றியைத் தழுவி உவகை கொள்கிறாளாம். - போர்ப்பாசறையில் இருக்கும் தலைவன் இவ்வாறு நினைக்கிறான்.

அகம் 144

நின்றன்று விறல்

வெற்றிச் செல்வம் நிலையானது என்று வேந்தன் போரிட ஏவ நான் வந்துள்ளேன். அது தெரியாமல் என் மனைவி என் தேர் வந்த காலடிப் பள்ளத்தில் முல்லைக்கொடியை நட்டு நீரூற்றி வளர்க்கிறாள். இப்போது மழையும் பெய்து அதனை வளர்க்கிறது. வேங்கைப்பூ கொட்டிக் கிடப்பது போல் சுணங்கு அணிந்த மாந்தளிர் மேனியள் மெல்ல மெல்ல அடியெடுத்து என்னிடமிருந்து நாணத்தோடு ஒதுங்கும் அழகே அழகு - போர்ப் பாசறையில் இருக்கும் தலைவன் இவ்வாறு நினைக்கிறான்.

அகம் 174

பாணன் தூது

வரினும், வாராராயினும் ஆண்டு அவர் இனிதுகொல்! வாழி! தோழி! என்று தன் தோழியிடம் சொல்லித் தலைவி வருந்திக்கொண்டிருக்கிறாள் என்று தூது வந்த பாணன் சொன்னான். நம் வினை முற்றுப் பெற்றது. நீ புரவியைத் தேரில் விரைந்து பூட்டிச் செலுத்துக! என்று தலைவன் தன் தேர்ப்பாகனிடம் சொல்கிறான்.

அகம் 244

கடவுள் கற்பின் மடவோள்

  • கடவுள் = கடமை உள்ளமை. கடமை உணர்வும், கற்பும், இவற்றில் மடம்பட்டுக் கிடத்தலும் அவள் பண்பு. அவள் சொல்கிறாள், கார்காலம் வந்துவிட்டது. அவர் இன்னும் வரவில்லையே எதனால்? - என்கிறாள்.

நூல்நெறி நுணங்கிய கால்நவில் புரவி

குதிரை பூட்டிய தேரை ஓட்டும் இலக்கணம் சொல்லும் நூல் அக்காலத்தில் இருந்தது.

இனந்தேர் உழவர் இன்குரல்

மாலையில் செவ்வழிப்பண் என்பது போன்ற பண்ணின் இனம் தேர்ந்து அப் பண்ணை உழுவோரின் இனிய வாய்பாட்டு.

மாலை நிகழ்வுகள்
  • இனம் தேர் உழவர் பாடுவர்.
  • இரலை மான் அணும் பெண்ணும் தழுவிக்கொண்டு உகளும்(துள்ளி விளையாடும்)
  • காதலர் தேரில் செல்வர்.
  • யாழில் செவ்வழிப்பண் ஒலிக்கும்.
அகம் 314

கையுடை வலவன்

தேரோட்டும் கைவண்ணம் பெற்ற வலவ! என் காதலி நகைமுத்தை நான் பெறும்படி தோரை விரைந்து செலுத்துக. மழை பொழிந்து பிடவம் பூ பூத்துக்கிடக்கிறது. மகளிர் கையில் அணியும் தோணி என்னும் அணிகலன் போல மரத்தில் மயிலினம் நடமாடுகிறது. இரவு வருமுன் போய்ச் சேரும்படி தேரைச் செலுத்துக என்கிறான் தலைவன்.

அகம் 344

வாலிழை நெகிழ்த்தோர் வாரார்

முல்லை பூத்து முல்லைநிலம் தகைமை பெற்றுள்ள கார்காலம் வந்துவிட்டது. மாலைப் பொழுதும் வந்துவிட்டது. அவர் இன்னும் வரவில்லையே! என்று கவலை கொள்கிறாள் தலைவி.

குறுந்தொகை 188

பார்ப்பன மகளிர்

செந்நிலப் புறவின் புன்மயிர்ப் புருவை

வலவ! பார்ப்பன மகளிர் முல்லைப் பூ அணியவும், புருவை ஆட்டின் தொகுதி மணியொலி போல் பாடிக்கொண்டு இருப்பிடம் நோக்கிச் செல்லவும் மாலைப் பொழுது வந்துவிட்டது. அதோ பார். என்னவள் இருக்கும் ஊரின் மரம் தெரிகிறது. நான் இல்லாமல் வறண்டுபோயிருக்கும் மனையில் அவள் வருந்திக்கொண்டிருப்பாள். விரைந்து தேரைச் செலுத்துக - என்கிறான் தலைவன்.

நற்றிணை 321

பாலைத்திணைப் பாடல்கள்

உளிவாய் வெம்பரல்

நெஞ்சே! உளியைப் போன்ற வாயையுடைய சூடான பரல் கற்கள் காலை உருத்தும் வருத்தும் வழியில் சென்றாலும் ஆள்வினையால் பொருளைத் தேடுவதுதான் நன்று என்று எனக்குக் காட்டுகிறாய். மனைக்கு மாட்சிமை உடைய வாணுதலைப் பிரிய எண்ணுகிறாய். பொருளைப் பிறர் தரமுடியும். வானவன் ஆளும் கொல்லிமலையில் வளைந்து வளர்ந்திருக்கும் மூங்கில் போன்ற இவளுடைய தோளைப் பிறர் தர முடியுமா - என்கிறான் தலைவன்.

அகம் 33

மூப்பினது வரவு

மீண்டும் பொருளீட்டச் செல்ல எண்ணிய தலைவன் நினைத்துப் பார்க்கிறான்.

நெஞ்சே! நாள் சென்றுகொண்டிருக்கிறது. மூப்பு வந்துகொண்டிருக்கிறது. காம இன்பம் பற்றி உனக்குத் தெரியுமே! விருந்தினரைப் பேணும்பொருட்டு நீரோ, நிழலோ இல்லாத காட்டில் மீண்டும் ஆள்வினை மேற்கொள்வாயா?

அகம் 353

வருவர்கொல் வாழி தோழி

தோழியிடம் சொல்லித் தலைவி ஏங்குகிறாள்.

ஆண்யானை நீரில்லாத வெற்றுக் குளத்தைத் துழாவிவிட்டுத் தன் பெண்யானையிடம் சென்று அதனைப் புலி தாக்காமல் காக்கும் பாலைநில வழியில் சென்றவர் இன்று பொழுது இறங்கும் நேரத்திலாவது வருவாரா?

குறுந்தொகை 215

குறிஞ்சித்திணைப் பாடல்கள்

முருகு புணர்ந்து இயன்ற வள்ளி

தோழி தலைவியைத் தலைவனுக்குத் தந்தாள். அவன் அவளைத் துய்த்துவிட்டுப் பாராட்டுகிறான்.

கொடிச்சியே!உன் தோள் எனக்கு நோயும் தருகிறது. நோயையும் போக்குகிறது. காட்டுப் பன்றியைக் கோணாய் (=கோள்+நாய்) கவ்வப் பிடித்துக்கொண்டு வரும் கானவர் சிறுகுடியில் முருகனைப் புணர்ந்து தோன்றும் வள்ளி போல் இருக்கிறாய். என் நோயை நீ அறிவாயா?

நற்றிணை 82

பொன் செய் வள்ளம்

தலைவனுக்குக் கேட்குமாறு தோழி தலைவியிடம் சொல்கிறாள்.

பொன்னால் செய்த கிண்ணத்தில் இருக்கும் பாலை அருந்தாமல் படுக்கையைப் பகையாக்கிக்கொண்டு படுத்திருக்கிறாய். உன் மகிழா மகிழ்ச்சி எனக்குப் புரிகிறது. உனக்குள் தோன்றும் குறிப்பு மிகப் பெரியது. அது மிளகுக்கொடி சுற்ற உறங்கும் யானையை உடைய நாடன் மெல்ல வந்து உன் நெஞ்சுக்குள் அகப்பட்டுக்கொண்டதுதானே?

நற்றிணை 297

சிறுகுடி கிழான் பண்ணனைப் பாடியது

(இந்தப் பாடலின் அடிகள் சிதைந்துள்ளன) சிறுகுடி மக்களின் உரிமைத் தலைவனாக விளங்கிய இந்தப் பண்ணன் 'தென்னன் மருகன்' என்று குறிப்பிடப்படுகிறான். இந்தப் புலவரைப் பேணிவந்தவன் வழுதி. தென்னன் மருகன் பண்ணனைப் பாடாவிட்டால் வழுதியின் கண்ணோட்டம் இல்லாமல் போய்விடும் என்கிறார் புலவர்.

கிணைப்பறையை முழக்கிக்கொண்டு பண்ணனிடம் சென்றால் துன்பமெல்லாம் பறந்தோடும்படி கொடை நல்குவானாம்.

புறம் 388

வெள்ளி தென்புலத்து உறைய ...

வெள்ளிக்கோள் நிலத்திலிருந்து பார்ப்பவர்களுக்குச் சூரியனுக்குத் தென்நிசையில் காணப்பட்டால் நாட்டில் மழை குறையும் எனக் கூறப்படுகிறது. பள்ள வயல்களிலும் குளநீர் பாயாதாம். அப்படிப் பாயாத காலத்திலும் பண்ணன் கிணைமக்களைப் பேணிவந்தானாம்.

வெள்ளிக்கோள் 225 நாட்களுக்கு ஒருமுறை சூரியனைச் சுற்றிவருகிறது. என்றாலும் பூமியிலிருந்து அதனைக் கணக்கிட்டுப் பார்ப்பவர்களுக்கு 584 நாளைக்கு ஒருமுறை சுற்றுவதாக அமையும். இதனால் இதன் விலகல் திசை மக்கள் கண்களுக்குப் புலப்படும்.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.