சிந்துவெளி மொழி

சிந்துவெளி மொழி என்பது, கிமு 1,500 ஆண்டுக் காலப்பகுதிக்கு முன்னர் இன்றைய பாகிசுத்தான், இந்தியா ஆகிய நாடுகளுள் அடங்கியுள்ள பகுதிகளில் செழித்திருந்த சிந்துவெளி நாகரிக மக்கள் பேசிய மொழியைக் குறிக்கும். இந்த நாகரிகத்தின் முக்கிய நகரங்களான அரப்பா, மொகெஞ்சதாரோ என்பவற்றின் பெயர்களைத் தழுவி இம் மொழியை அரப்பா மொழி அல்லது மொகெஞ்சதாரோ மொழி என்றும் குறிப்பிடுவது உண்டு. சிந்துவெளி நாகரிகம் அதன் காலத்தில் ஒரு பரந்த நிலப்பரப்பில் உன்னத நிலையில் இருந்த ஒரு நாகரிகமாக இருந்தும், நகர அமைப்பு முதலியவற்றை நோக்கும்போது அவர்கள் அறிவிற் சிறந்து விளங்கியிருப்பர் என்று சொல்லக்கூடியதாக இருந்தும், குறிப்பிடத்தக்க அளவில் எழுத்துவடிவில் எந்தத் தகவல்களையும் இந்த நாகரிகம் விட்டுச் செல்லவில்லை. எழுத்து என்று சொல்லக்கூடிய அளவுக்குக் கிடைத்தவை பெரும்பாலும், வணிக முத்திரைகள் என்று அடையாளம் காணப்பட்ட முத்திரைகளில் காணப்படுபவை மட்டுமே. இந்த முத்திரைகளில் காணப்படும் குறியீட்டுத் தொடர்கள் மிகவும் நீளம் குறைந்தவை. ஆகக் கூடிய நீளம் கொண்டது 14 குறியீடுகளை மட்டுமே கொண்டுள்ளது. இவை தவிரச் சிந்துவெளி நாகரிக மக்களின் மொழி பற்றிய தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை.

சிறிய அளவினதாக இருந்தும், பெரும் எண்ணிக்கையில் கிடைத்த இந்த முத்திரைகளை ஆதாரமாகக் கொண்டு சிந்து வெளி மக்களின் மொழிபற்றிய ஆய்வுகளை ஆய்வாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். கிடைத்திருக்கும் தகவல்களைக் கொண்டு இந்த மொழியின் இயல்புகளை அறிந்து கொள்வதற்கு அவர்கள் முயன்று வருகிறார்கள்.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.