எழுத்து

எழுத்து அல்லது எழுதுதல் (writing) என்பது, ஒரு தொகுதி குறியீடுகளைப் பயன்படுத்தி மொழியை வரிவடிவில் வெளிப்படுத்துவதற்கான ஒரு முறையாகும். இக் குறியீடுகளின் தொகுதி எழுத்து முறைமை எனப்படுகிறது. இது, வரைதல்கள், ஓவியங்கள் போன்ற படவடிவங்களிலிருந்தும், மொழியைப் பதிவுசெய்யப் பயன்படும் காந்தநாடா போன்ற வரிவடிவம் அல்லாத பிற வடிவங்களிலிருந்தும் வேறுபடுகின்றது. கணக்கு வைத்துக் கொள்ளவேண்டிய தேவை காரணமாகவே "எழுத்து" தோன்றியது எனப்படுகிறது. கிமு நான்காம் நூற்றாண்டளவில் மெசொப்பொத்தேமியாவில் வணிகத்தினதும், நிர்வாகத்தினதும் சிக்கல்தன்மை, நினைவாற்றலின் வலுவையும் தாண்டி வளர்ந்தபோது எழுத்து, வணிகப் பரிவர்த்தனைகளைப் பதிவு செய்வதற்கான நம்பத்தகுந்த ஒரு நிரந்தர வடிவமாக உருவானது.[1] பண்டைய எகிப்திலும், மெசொப்பொத்தேமியாவிலும், காலத்தைப் பதிவு செய்வதற்காகவும், வரலாற்று மற்றும் சூழலியல் நிகழ்வுகளைப் பதிவுசெய்வதற்கான அரசியல் தேவைகளுக்காகவுமே எழுத்து தோற்றம் பெற்றிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

எழுதுவதைக் காட்டும் ஒரு படம்

சுருங்கக் கூறின், சொல் என்பது 'ஒலியின் வரி வடிவமே' ஆகும். வையகத்தில் உள்ள பெரும்பாலான ஒலிகளுக்கு எழுத்துக்கள் உள்ளன. பல ஒலிகளுக்கு எழுத்துக்களே இல்லை எனலாம் (உம். யானையின் பிளிறல்).

தகவல்களைப் பதிவு செய்வதற்கான வழிமுறைகள்

ஒப்பந்தங்கள், சட்டங்கள், கட்டளைகள் போன்றவற்றைப் பதிவு செய்து கொள்வதற்கான வல்லமையை எழுத்து வழங்குகிறது என்பது எச். ஜி. வெல்சு அவர்களின் வாதம். இது, நாடுகள் பழைய நகர நாடுகளிலும் பெரிதாக வளர்வதற்கு உதவியது. தொடர்ச்சியான வரலாற்று உணர்வைப் பெறுவது இதன் மூலம் சாத்தியமாகியது. அரசனுடைய அல்லது மதகுருவுடைய ஆணைகள் அவர்களது கண்களால் காணமுடியாததும் காதுகளால் கேட்க முடியாததுமான பெருந் தொலைவு செல்வது சாத்தியமாகியதுடன், அவர்களது வாழ்நாளைக் கடந்து நிலை பெறக் கூடியதாக இருந்தது.[2]

எழுத்து முறைமைகள்

எழுத்து முறைமை, அதாவது எழுதும் முறைகள் நான்கு வகைப்படுகின்றன. அவை, பட எழுத்து முறை, அசையெழுத்து முறை, அகரவரிசை முறை, featural முறை என்பன. இன்னொரு வகையான கருத்தெழுத்து முறை ஒரு மொழியை முழுமையாகப் பிரதிநிதித்துவப் படுத்தும் அளவுக்கு வளரவில்லை. ஆறாவது வகையான ஓவியஎழுத்து முறையும் தன்னளவில் ஒரு மொழியைப் பிரதிநிதித்துவம் செய்யும் அளவுக்குப் போதியதல்ல. ஆனால், படவெழுத்து முறையின் ஒரு முக்கியமான உறுப்பாக இது உள்ளது.

குறிப்புகள்

  1. Robinson, 2003, p. 36
  2. Wells, H.G. (1922). A Short History Of The World. பக். 41.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.