சிங்கப்பூர் மகா மாரியம்மன் கோயில்
மகா மாரியம்மன் கோயில் சிங்காப்பூரில் சைனா டவுன் என்னும் வட்டாரத்தில், சவுத் பிரிட்ச் சாலை என்னுமிடத்தில் அமைந்திருக்கும் ஓர் இந்துக் கோயில் ஆகும். இதுவே சிங்கப்பூரின் மிகப் பழமையான கோயில்.
Sri Mariamman Temple ஶ்ரீ மாரியம்மன் கோவில் | |
---|---|
சிறீ மாரியம்மன் கோவிலின் கோபுரம் | |
![]() ![]() Location within Singapore | |
பெயர் | |
சப்பானிய மொழி: | スリ・マリアマン寺院 |
அமைவிடம் | |
நாடு: | சிங்கப்பூர் |
அமைவு: | தெற்கு பாலம் சாலை south bridge road |
ஆள்கூறுகள்: | 1°16′57.4″N 103°50′43″E |
கோயில் தகவல்கள் | |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | திராவிட கட்டிடக்கலை |
வரலாறு | |
அமைத்தவர்: | நாராயண பிள்ளை |
இணையதளம்: | அதிகாரப்பூர்வ இணையதளம் |
மகா மாரியம்மன் கோவில் தமிழ்நாட்டில் நாகப்பட்டினம், கடலூர் போன்ற இடங்களில் இருந்து சிங்கப்பூரில் தமிழ் மக்களின் உறுதுணையோடு 1827-ல் அமைக்கப்பட்டது. மாரியம்மனை முதற் தெய்வமாகவும், மூலஸ்தான தெய்வமாகவும் அமைத்துள்ளார்கள்.
வரலாறு
இக்கோயில் உருவாகவும், தோற்றம் பெற்று அமைவதற்கும் காரண கர்த்தாவாக இருந்தவர் நாராயண பிள்ளை என்பவர் ஆவார். கோவில் அமைப்பதற்கான நிலத்தை வழங்கக் கிழக்கிந்திய கம்பெனி முதன்முதலாக 1822-ல் ஆண்டில் முன் வந்தது. 1823-ல் இப்போதுள்ள மாரியம்மன் கோவில் அமைந்துள்ள இடமான சவுத் பிரிட்ஜ் சாலையில் கோவில் கட்ட அனுமதி தரப்பட்டது.
1827-ல் கோவிலின் அடித்தளப்பணி ஆரம்பிக்கப்பட்டது. தமிழ் நாட்டின் கடலூரைச் சேர்ந்த ஒருவர் தம்முடன் எடுத்து வந்த அம்மன் சிலையை மரப்பலகை, கூரையுடன் கூடிய சிறு குடில் அமைத்து சின்ன அம்மன் என்ற பெயரில் பிரஷ்டை செய்து வழிபாடு தொடங்கப்பட்டது. அந்த அம்மனே இன்று மகா மாரியம்மன் ஆலயத்தின் மூலஸ்தானத்தில் இருக்கிறது.

16 ஆண்டுகளுக்குப் பின் சிறு அளவிலிருந்த கோயில் 1862-ல் முழுமையான செங்கல் கட்டிடமாக மாற்றப்பட்டது. தற்போதுள்ள மூலவரான பெரிய அம்மன் எப்போது கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது என்பதற்கான ஆதாரம் இல்லை. அதன்பின் சுமார் 100 ஆண்டுகள் மாற்றமின்றி இருந்த ஆலயம்,1962–ல் இப்போதுள்ள நிலையில் மாற்றம் கண்டது. புதுப்பொலிவுடன் நவீன வசதிகளுடன் திருமண மண்டபம், அரங்கம் போன்றவையும் கட்டப்பட்டன. சிங்கப்பூர் அறக்கட்டளை வாரியத்தினால் இவ்வாலயம் தற்போது நிர்வகிக்கப்படுகிறது.
ஜூன் 1936-ல் தான் முதல் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. அதன் பின்னர் 1949, 1977, 1984, 1996 ஆகிய ஆண்டுகளில் குடமுழுக்குகள் நடைபெற்றன.
சமூக சேவை
பிரித்தானிய ஆட்சிக் காலங்களில் தமிழ் நாட்டிலிருந்து இங்கு வேலை தேடி வரும் தமிழர்க்கு உதவி நல்கிடும் அமைப்பாக இக்கோயில் இருந்துள்ளது. ஒரு நிலையான தொழில்,வேலை கிடைக்கும் வரை கோவிலில் தங்கியிருக்க அனுமதி அளித்துள்ளார்கள்.
இந்திய திருமணங்களைச் சட்டப்படி பதிவுசெய்து செய்யும் பதிவகமாகவும் மகா மாரியம்மன் ஆலயம் செயல்பட்டு வருகிறது. அதோடு மட்டுமின்றி திருமணச் சடங்கும் முறைப்படி நடைபெறுகிறது. தற்போது மருத்துவ முகாம், இந்து சமய நிகழ்ச்சிகள், சமய வகுப்புகள் ஆகியவற்றை நடத்துவதோடு பள்ளி குழந்தைகளின் கல்வி முன்னேற்றத்திற்கும் ஆதரவு நல்கி வருகிறது.
கோயிலில் சீனர்களின் பங்கு
இக்கோயில் கோவில் சீனர்கள் அதிகம் வாழும் பகுதியில் அமைந்திருக்கும் காரணத்தால் சுற்றுபுறத்திலிருக்கும் சீனர்களும் மாரியம்மன் கோயிலுக்கு வந்து வழிபடுகிறார்கள். ஆண்டுதோறும் நடக்கும் தீமிதிப்பு விழாவில் சீனர்கள் பெரும்வாரியாக பங்கு பெறுகிறார்கள். கட்டுமானப் பணிகளுக்கு நிதியுதவி வழங்கினார்கள்.

விழாக்கள்
- அக்டோபர்/நவம்பரில் திரெளபதை அம்மனுக்கு தீமிதிப்பு விழா நடக்கிறது. இத்திருவிழா 1842 முதல் நடைபெறுவதாகக் கூறப்படுகிறது.
- நவராத்திரி, 1008 சங்காபிஷேகம், மகா சத சண்டி யாகம், நவசக்தி அர்ச்சனை, திரெளபதை உற்சவம் ஆகிய விழாக்கள் சிறப்பாக நடந்து வருகின்றன.