சகப் பிணைப்பு

சகப் பிணைப்பு அல்லது பங்கீட்டு வலுப்பிணைப்பு (covalent bond) என்பது இரு அணுக்கள் எலக்ட்ரான்களை சமமாக வழங்கி சமமாகப் பகிர்ந்து கொள்வதால் உருவாகும் பிணைப்பு ஆகும்.

ஐதரசன் மூலக்கூறில் H - H இடையிலான சகப்பிணைப்பு

வேதிப்பிணைப்புகளுள் ஒன்று. இரண்டு அணுக்கள் எதிரெதிர் சுழலெண் (spin) கொண்ட இணையான எதிர்மின்னிகளைத் தங்களுக்குள் பங்கிட்டுக் கொள்வதால் பகிர்வுப்பிணைப்பு அல்லது பகிர்பிணைப்பு அல்லது சகப்பிணைப்பு என்னும் வகையான வேதியியல் பிணைப்பு உண்டாகிறது. இப் பிணைப்பில் பங்கு கொள்ளும் இரு அணுக்களுமே எதிர்மின்னிகளை தங்கள் அணுக்கருவில் உள்ள நேர்மின்னிகளில் விசையால் கவர முயலும். இதனால் உருவாகும் நிகர விசை சகப் பிணைப்பை உண்டாக்குகிறது.

ஐதரசன் மூலக்கூறில் உள்ள இரண்டு ஐதரசன் அணுக்களுமே ஒரே மாதிரியான எதிர்மின்னிக் கவர்மை கொண்டவை. எனவே எதிர்மின்னிகள் (எலக்ட்ரான்கள்) உண்மையிலேயே இரு அணுக்களுக்கும் பொதுவாக இருக்கின்றன (இயங்குகின்றன). இங்கு சகப் பிணைப்பு உருவாகிறது.

மேலும் ஒரு எடுத்துக்காட்டை நோக்குவோம்.

Cl + Cl ----> Cl2

குளோரின் அணு ஒவ்வொன்றும் 2,8,7 எலக்ட்ரான்களை மூன்று வட்டப்பாதைகளில் முறையே பெற்றுள்ளன. தங்களது கடைசி வட்டப்பாதையில் உள்ள 7 எலக்ட்ரான்களில் ஒன்றை ஒவ்வொரு குளொரின் அணுவும் வழங்கி, அவ்விரு எலக்ட்ரான்களை இரன்டு குளோரின் அணுக்களும் சமமாகப் பகிர்ந்து கொள்வதன் மூலம் சகப் பிணைப்பு உருவாகி குளோரின் மூலக்கூறு உருவாகிறது. ஆனால் ஓர் அணு எதிர்மின்னியை முழுமையாகத் தன்பக்கம் இழுத்துக் கொள்ளுமாயின், அது அயனிப் பிணைப்பு எனப்படும். எடுத்துக்காட்டு: சோடியம் குளோரைடு

சகப்பிணைப்பு (பங்கீட்டு வலு) சேர்மங்களின் பௌதீகப் பண்புகள்

பௌதீகப் பண்புகள்பங்கீட்டு வலுச் சேர்மங்கள்
பௌதீக நிலை (அறை வெப்பநிலையில்)திண்மம், திரவம், வாயு
மின்கடத்துதிறன்பொதுவாக மின்னைக் கடத்தாது
உருகும், கொதிக்கும் வெப்பநிலைவேறுபடும், பொதுவாக அயன் சேர்மங்களினதை விடக் குறைவு
நீரில் கரைதிறன்மாறுபடும், பொதுவாக அயன் சேர்மங்களினதை விடக் குறைவு
வெப்பக் கடத்துதிறன்பொதுவாகக் குறைவு

சகப்பிணைப்புகளில் முனைவாக்கம்

சகப்பிணைப்பில் ஈடுபடும் அணுக்களின் மின்னெதிர்த்தன்மையைப் பொறுத்து மூலக்கூறுகள் முனைவாக்கமுடையனவாகவோ, முனைவாக்கமற்றதாகவோ காணப்படலாம். H-H பிணைப்பு போல அணுக்களிடையே மின்னெதிர்த்தன்மை சமமாக இருந்தால், அது முனைவாக்கமற்ற சகப்பிணைப்பாகும். H-Cl பிணைப்பு போல அணுக்களின் மின்னெதிர்த்தன்மை சமமற்றதாக இருந்தால், அது முனைவாக்கமுடைய சகப்பிணைப்பாகும்.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.