கோவிந்த தீட்சிதர்
கோவிந்த தீட்சிதர் (1515 - 1635) தஞ்சையை ஆண்ட நாயக்க அரசர்களான செவ்வப்ப நாயக்கர், அச்சுதப்ப நாயக்கர், இரகுநாத நாயக்கர் ஆகிய மூவருக்கும் ஆசானாகவும் ஆலோசகராகவும் இருந்தவர். இவரைச் சிறப்பிக்கும் வகையில் இரகுநாத நாயக்கர் ‘கோவிந்தய்யா’ என்று தமிழில் பெயர் பொறிக்கப்பட்டக் காசுகளை வெளியிட்டார். கோவிந்த தீட்சிதர் தஞ்சாவூரில் பல கோயிற் பணிகளைச் செய்துள்ளார்[1][2].

அமைச்சர்
சேவப்ப நாயக்கர், அச்சுதப்ப நாயக்கர், இரகுநாத நாயக்கர் எனும் மூன்று தஞ்சை மன்னர்களுக்கும் மதியமைச்சராக, அறிவுசார்ந்த ஆசிரியராக, பெரும்புலவராகத் திகழ்ந்தவர் கோவிந்த தீட்சிதர் ஆவார். [3]
பணிகள்
பட்டீச்சரத்துக்கு அருகில் உள்ள கோவிந்தகுடி எனும் ஊரில் கோவில் ஒன்று எடுப்பித்தார். குடி என்பது தெலுங்கில் கோயிலைக் குறிக்கும் சொல்லாகும். சேவப்ப நாயக்கர் காலம் வரை சிங்கரசன்பாளையம் எனும் பெயரில் திகழ்ந்த இவ்வூர் அச்சதப்ப நாயக்கர் காலத்தில்தான் கோவிந்தகுடி எனும் பெயர் மாற்றம் பெற்றது. இவ்வூரிலிருந்து தான் தினம் பல்லக்கில் தஞ்சை சென்று அரசு அலுவல்களைக் கவனித்ததாகவும், இவரால் பட்டீச்சரம் தேனுபுரீஸ்வரர் கோயில், திருப்பாலைத்துறை பாலைவனநாதர் கோயில், கும்பகோணம் கும்பேசர் கோயில், திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில் போன்றவை மிகவும் சிறப்பும் ஆக்கமும் பெற்றதாகவும் இலக்கியம் மற்றும் கல்வெட்டுச் செய்திகளால் அறியமுடிகிறது.[3] திருப்பாலைத்துறை கோயில் கோபுரம், திருப்பாலைத்துறை நெற்சேமிப்புக்கிடங்கு, கும்பகோணம் கும்பேசர் கோயிலின் புதிய சன்னதிகள், ராஜகோபுரம், கும்பகோணம் இராமசுவாமி கோயில், புராதன வேத கல்விச்சாலை, ராஜா வேத காவ்ய பாடசாலை, இவையெல்லாம் தீட்சிதரின் முயற்சியில் வந்தவையாகும். மகாமகக் குளத்தைச் சுற்றி இருந்த மணல் சேற்றுப்பகுதிகளை நீக்கி, தூய்மைப்படுத்தி, குளத்தின் உள்ளே ஏறி இறங்க வசதியாக படித்துறைகளை அமைத்தவர். அதன் மேல் தளத்தில் மகாமகக் குளத்தைச் சுற்றிலும் பதினாறு மண்டபங்களையும் கட்டினார். அதன் நினைவாக ஒவ்வொன்றின் அருகிலும் பதினாறு சிவன் கோயில்களைச் சிறியதாக அழகுற வடிவமைத்தார். இன்று நாம் காணுகின்ற மகாமகக்குளத்தின் அழகுக்கும், கலை நேர்த்திக்கும், சுந்தர அழகில் சொக்க வைக்கும் சுற்று மண்டபங்களின் எழில் தோற்றத்துக்கும் கோவிந்த தீட்சிதர் முக்கியக் காரணமாய் இருந்தார். [4]
நூல்கள்
அவர் இயற்றிய நூல்களில் தற்போது கிடைப்பன “கௌமாரிலதர்சனம்“, “ஸங்கீத ஸுதா“ என்பவையாகும். சமசுகிருதம், தமிழ், தெலுங்கு முதலிய பல மொழிகளிலும் வித்தகராய்த் திகழ்ந்த இவரது தமிழார்வத்துக்கு சான்றாக அவர் வடமொழியில் இருந்த பஞ்சநதீசுவர புராணத்தைத் தமிழில் கி.பி.1605இல் மொழிபெயர்த்ததைக் கூறலாம். [3]
மேற்கோள்கள்
- [http://www.tamilvu.org/courses/diploma/a031/a0314/html/a0314553.htm கோவிந்த தீட்சிதர்
- சோழ நாட்டை சிறப்பித்த மகான் கோவிந்த தீட்சிதர்!-சக்தி விகடன், ஏப்ரல் 24, 2009
- கண்ணம்மா பாலசுப்ரமணியன், கோவிந்த தீட்சிதர், மகாமகம் 1992 சிறப்பு மலர்
- பாலாஜி, கோவிந்த தீட்சிதர், கல்கி, 29.2.2014