கோலா தகான்

கோலா தகான் (மலாய்: Kuala Tahan, சீனம்: 瓜拉大汉), மலேசியாவின், பகாங் மாநிலத்தின் ஜெராண்டுட் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய நகரம் ஆகும். இந்த நகரம், மலேசியாவில் புகழ்பெற்ற தாமான் நெகாரா தேசிய வனப்பூங்காவின் நுழைவாயிலாக விளங்குகிறது. சுங்கை தகான் ஆறும், தெம்பிலிங் ஆறும் சங்கமிக்கும் இடத்தில் அமைந்து உள்ளது.[1]

கோலா தகான்
Kuala Tahan
கோலா தகான் பட்டினம்
நாடு மலேசியா
உருவாக்கம்1925
நேர வலயம்MST (ஒசநே+8)
  கோடை (பசேநே)பயன்பாடு இல்லை 4° 23′ 0″ North, 102° 24′ 0″ East (ஒசநே)
இணையதளம்http://www.mdjerantut.gov.my/

கோலாலம்பூர் தலைநகரில் இருந்து 241 கி.மீ. தொலைவில் உள்ளது. பகாங் மாநிலத்தின் தலைநகரான குவாந்தான் நகரில் இருந்து 232 கி.மீ. தொலைவில் உள்ளது. காராக் நெடுஞ்சாலை வழியாக, மெந்தகாப் நகருக்கு வந்த பின்னர், ஜெராண்டுட் நகருக்குச் சென்று, அங்கு இருந்து கோலா தகான் நகருக்குச் செல்லலாம். கோலா தகான் நகருக்கு மிக அருகாமையில்தான் தாமான் நெகாரா தேசிய வனப்பூங்கா அமைந்து உள்ளது.[2]

அமைவிடம்

தாமான் நெகாரா தேசிய வனப்பூங்காவிற்கு, இந்த நகரைக் கடந்துதான் செல்ல வேண்டும். இதுதான் அந்த வனப்பூங்காவிற்கு நுழைவாயிலாகவும் அமைகின்றது. ஜெராண்டுட் நகருக்கு அருகில் இருக்கும் சுங்கை தெம்பிலிங் நதியின் வழியாக கோலா தகானைச் சென்று அடையலாம். படகுப் பயணங்கள் உள்ளன. இரண்டரை மணி நேரம் பிடிக்கும். ஜெராண்டுட் நகரில் இருந்து 76 கி.மீ. தொலைவில் இருக்கிறது. சாலை வழியாகச் சென்றால் ஒன்றரை மணி நேரம் பிடிக்கும். இரவு நேரங்களில் படகுப் பயணங்கள் நடைபெறுவது இல்லை.[3]

கோலா தகான் நகருக்கு அருகில் கம்போங் தெரிசிக் (மலாய்: Kg Teresik), கம்போங் பெலேபார் (மலாய்: Kg Belebar), கம்போங் தெக்கா (மலாய்: Kg Tekah), கம்போங் பாடாங் (மலாய்: Kg Padang), கம்போங் தூயிட், கம்போங் செபேராங் ஆகிய கிராமங்கள் உள்ளன. கம்போங் என்றால் மலாய் மொழியில் கிராமம் என்று பொருள்படும். மலேசியாவில் உள்ள கிராமங்களை, கம்போங் என்றுதான் அழைக்கிறார்கள்.

சுற்றுலாத் துறை

உலகின் பல பாகங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகை தருகின்றனர்.[4] இருபத்து நான்கு மணி நேரமும் மக்கள் நடமாட்டம் இருந்து கொண்டே இருக்கும். இந்த நகரில் வாழும் மக்கள் பெரும்பாலும் மலாய்க்காரர்கள் ஆவர்.[5] இவர்கள் சுற்றுலாத் துறையில் தீவிரமாக ஈடுபாடு காட்டி வருகின்றனர். சீனர்களும், இந்தியர்களும் சிறு கடை வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தவிர, நகரைச் சுற்றி நிறைய சிறு சிறு ரப்பர் தோட்டங்கள் உள்ளன. மத்திய கூட்டரசு அரசாங்கம் பெல்க்ரா, ரிஸ்டா எனும் ரப்பர், எண்ணெய்ப்பனை நடவுத் திட்டங்களையும் அறிமுகம் செய்துள்ளது. கணிசமான அளவிற்கு ரப்பர் உற்பத்தியும் செய்யப் படுகின்றது. நெல் விவசாயமும் நடைபெறுகின்றது.

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.