கே. வி. மகாதேவன்

கே. வி. மகாதேவன் (மார்ச் 14, 1918 - சூன் 21, 2001), ஒரு தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் மொத்தம் 1500க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். மொத்தமாக 218 தமிழ்ப் படங்களுக்கு இசையமைத்தார். 1942 இல் மனோன்மணி என்ற திரைப்படத்துக்கு முதன்முதலில் இசையமைத்த இவர் 1990 இல் முருகனே என்ற படத்துடன் தன் இசையமைப்புப் பணிகளை நிறுத்திக்கொண்டார்.

கே. வி. மகாதேவன்
இயற்பெயர்கிருஷ்ணன்கோயில் வெங்கடாசலம் மகாதேவன்
[1]
பிற பெயர்கள்மாமா
பிறப்புமார்ச்சு 14, 1918(1918-03-14)
பிறப்பிடம்சென்னை, தமிழ்நாடு, இந்தியா
இறப்பு21 சூன் 2001(2001-06-21) (அகவை 83)
இசை வடிவங்கள்திரையிசை, அரங்கு
தொழில்(கள்)இசையமைப்பாளர்
இசைத்துறையில்1942–1992

வாழ்க்கைக் குறிப்பு

தமிழ்நாட்டின் தென்பகுதியில் நாகர்கோவில் என்ற ஊரில் கிருஷ்ணன்கோவில் என்ற சிற்றூரில் வெங்கடாசல பாகவதர், பிச்சையம்மாள் ஆகியோருக்கு மகாதேவன் பிறந்தார். இவரது பாட்டனார் ராம பாகவதர் திருவனந்தபுரம் அரசரின் ஆஸ்தான வித்துவானாக இருந்தவர். தந்தையார் வெங்கடாசல பாகவதர் கோட்டு வாத்தியம் இசைப்பதிலும் வல்லவர். சிறு வயதிலோயே இசையில் நாட்டம் கொண்டிருந்தமையினால் மகாதேவன் பள்ளிப் படிப்பைத் தொடரவில்லை. பாலகாந்தர்வ நாடக சபையில் இணைந்து பெண் வேடம் ஏற்றுப் பாடியவாறு நடித்தார்.

பூதப்பாண்டி அருணாசலக் கவிராயரிடம் முறையாக இசை பயின்றார். முறையாக இசை பயின்ற பின்னர் அங்கரை விசுவநாத பாகவதரின் இசைக் குழுவில் இணைந்து பம்பாய் ஐதராபாத், தில்லி, நாக்பூர் ஆகிய வெளியூர்களுக்குச் சென்று கச்சேரி செய்து வந்தார்.

திரைப்படத் துறையில்

1942 இல் மனோன்மணி என்ற திரைப்படத்துக்கு டி. ஏ. கல்யாணம் இசையமைத்தபோது கே. வி. மகாதேவன் அவரிடம் உதவியாளராக இருந்தார். அப்போது டி. ஏ. கல்யாணம், ஒரு பாடலுக்கு இசையமைக்கும் பொறுப்பை மகாதேவனிடம் தந்தார். பி. யு. சின்னப்பா பாடிய, கானடா ராகத்திலமைந்த, மோகனாங்க வதனி என்ற அந்தப் பாடலே மகாதேவன் முதன்முதலில் இசையமைத்த திரைப்படப் பாடலாகும்.[2]

மதன மோகினி உள்ளிட்ட சில திரைப்படங்களில் தன் சொந்தக் குரலில் பாடியுமுள்ளார்.

இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள்

விரிவான தரவுகளுக்கு -

விருதுகள்

  • சிறந்த இசை அமைப்பாளருக்கான தேசிய விருது (1967, கந்தன் கருணை) (இவ்விருதின் முதல் பெறுநர்)
  • சிறந்த இசையமைப்பாளருக்கான தமிழ்நாடு அரசு விருது (1969, அடிமைப் பெண்)
  • சிறந்த இசை அமைப்பாளருக்கான தேசிய விருது (1980, சங்கராபரணம்)
  • சிறந்த இசையமைப்பாளருக்கான பில்ம்பேர் விருது (தெலுங்கு) (1992, சுவாதி கிரணம்)
  • கலைமாமணி விருது

மறைவு

கே. வி. மகாதேவன் 2001 சூன் 21 இல் தனது 83வது அகவையில் சென்னையில் காலமானார்.[3]

மேற்கோள்கள்

  1. "Article on K. V. Mahadevan in The Hindu" (2001-06-29).
  2. "மடி மீது தலை வைத்து ...". தினமணி. பார்த்த நாள் 5 மே 2018.
  3. "The Hindu : K.V. Mahadevan dead". Hinduonnet.com (2001-06-22). பார்த்த நாள் 2012-02-29.

வெளி இணைப்புக்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.