குராசான்

குராசான் (பாரசீகம்: خراسان بزرگ, or خراسان کهن listen  ஆங்கிலம்:Khurasan) என்பது பாரசீக நாட்டின் வடகிழக்கில் உள்ள ஒரு வரலாற்றுப் பகுதி. தற்காலத்தில் பெரிய என்ற அடைமொழி இந்த வரலாற்றுப் பகுதியை பண்டைய குராசானின் மேற்குப் பகுதியாக இருந்த இன்றைய ஈரானில் உள்ள குராசான் மாகாணத்திலிருந்து வேறுபடுத்தி அறிய உதவுகின்றது.[1] பண்டைய இஸ்லாமிய காலத்தில் நடு ஆசியாவையும் ஆப்கானிஸ்தானையும் உள்ளடக்கிய ஒரு அகண்ட நிலப்பரப்பாக இருந்தது. தொடக்க இஸ்லாமிய காலத்தில் மேற்கு பாரசீகத்தின் கிழக்குப் பகுதியிலிருந்த எல்லா இடங்களையும் குராசான் என்று அழைத்தனர். அப்பகுதி சிந்து சமவெளி வரை ஒரு தெளிவற்ற முறையில் பரவியிருந்தது.[2]

கலீபாக்கள் காலத்தைய நிலப்பகுதிகளின் பெயர்கள் 750 C E.

குராசான் அதன் சரியான பொருளில் இப்போதைய ஆப்கானிஸ்தானிலுள்ள ஹெராத், பால்க், இப்போதைய வடகிழக்கு ஈரானில் உள்ள மஷ்ஷாத், நிஷப்பூர், இப்போதைய தெற்கு துர்க்மெனிஸ்தானில் உள்ள மெர்வ் மற்றும் நிஸா, இப்போதைய உஸ்பெகிஸ்தானில் உள்ள புகாரா, சமர்கந்து முதலிய நகரங்களை உள்ளடக்கிய நிலப்பரப்பாக இருந்தது. சில காலங்களில் இந்திய துணைக்கண்டம் வரை நீண்டு திரான்சோக்சியானாவின், சொக்தியானா, சிச்தான் பகுதிகளையும் உள்ளடக்கிதாக இருந்தது என்று நம்புகின்றனர். அராபியர்கள் தெற்கு இந்துகுஷ்ஷிற்கு வந்து சுன்பில்களைத் தோற்கடித்த போது இந்தப் பகுதியை அல் ஹிந்த் என அழைத்துள்ளனர்.

14 முதல் 16 ஆம் நூற்றாண்டு வரையான காலப்பகுதியில் இந்துகுஷ் மலைத்தொடரின் தெற்குப் பகுதி (ஸமிந்தவார், பலுச்சிஸ்தான், காபூலிஸ்தான்) குராசானுக்கும் இந்துஸ்தானத்திற்கும் எல்லையாக இருந்துள்ளது.[3]

இஸ்லாமிய காலத்தில் பாரசீக ஈராக்கும் குராசானும் முக்கிய மாகாணங்களாக இருந்துள்ளன. இந்த இரண்டு மாகாணங்களுக்கான எல்லையாக குர்கான் தாம்கான் கூமிஸ் நகரங்களைச் சுற்றியுள்ள பகுதிகள் இருந்துள்ளன. குறிப்பாக கஸ்நாவித், ஸெல்ஜுக், தைமுரிட் பரம்பரையினர் தங்கள் அரசுகளை ஈராக்கிய குராசானியப் பகுதிகளாகப் பிரித்துக்கொண்டனர்.

பெயர்

குராசான் என்ற பெயர் நடுப் பாரசீகச் சொற்களான குவார், ஆஸான் என்றவற்றின் சேர்க்கையில் உருவானது. குவார் என்பது பரிதி என்ற பொருளையும் ஆஸான் என்பது வருதல் அல்லது வரவிருத்தல் என்ற பொருளையும் குறிக்கும். எனவே குராசான் என்பது பரிதி எழும் நிலம் எனப் பொருள்படும்.[4] இதே பெயர்மூலம் குவாரிஸ்ம் பகுதிக்கும் வழங்கப்படுகின்றது. கிழக்கு நிலம் எனப்பொருள்படும் பாரசீகச் சொல்லான காவர் ஸமீன் இதற்கு இணையாகப் பயன்படுத்தப்படுகின்றது.[5]

பண்பாடு

பண்டைய பெரிய ஈரானில் இருந்த பிற பகுதிகளை விடக் குராசான் பண்பாட்டுச் சிறப்புமிக்கது. புதிய பாரசீக இலக்கியமொழி[6] குராசானிலும் திரான்சோக்சியானாவிலும் தோன்றி பார்த்தியமொழியை அகற்றியது.[7] பாரசீகக் கவிஞர்களான ருதாகி, ஷகீத் பல்கி, அபுல் அப்பாஸ் மர்வாஸி, அபூ ஹஃபாஸ் சுக்தி குராசானைச் சேர்ந்தவர்கள்.

பெருங்கேடு விளைவித்த 13 ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்த மங்கோலியப் படையெடுப்பு வரை குராசான் பாரசீகத்தின் பண்பாட்டுத் தலைநகராக இருந்தது.[8] கணிதம், வானவியல், மருத்துவம், இயற்பியல், புவியியல், நிலவியல் போன்ற பல துறைகளில் பங்களித்த பல அறிஞர்களை குராசான் உருவாக்கியது. குறிப்பிடத்தக்க அறிஞர்களுள் அவிசென்னா, அல் ஃபராபி, அல் பிரூனி, உமர் கய்யாம், அல் குவாரிசுமி போன்றோர் அடங்குவர்

மக்கள் வகைப்பாடு

பார்த்திய மக்கள் இப்பகுதியில் வாழ்ந்த முதல் இனக்குழுவினராகக் கருதப்படுகின்றனர். வெளிநாட்டு படையெடுப்பாளர்களுடன் ஏற்பட்ட கலப்பால் அவர்களின் விகித எண்ணிக்கை வெகுவாகக் குறைந்ததது.[9] ஏழாம் நூற்றாண்டில் மேற்கில் இருந்து வந்த அராபியர்களும் இடைக்காலத்தில் வடக்கில் இருந்து வந்த துருக்கியர்களும் இப்பகுதியில் குடியேறினர். 13 ஆம் நூற்றாண்டில் பாரசீக நாட்டைக் செங்கிஸ் கான் கைப்பற்றியது முதல் பல மங்கோலியர்களும் குராசானில் குடியேறினர்.

சான்றுகள்

  1. Dabeersiaghi, Commentary on Safarnâma-e Nâsir Khusraw, 6th Ed. Tehran, Zavvâr: 1375 (Solar Hijri Calendar) 235–236
  2. "Khurasan", The Encyclopaedia of Islam, page 55.. Brill. https://books.google.com/books?id=cJQ3AAAAIAAJ&printsec=frontcover#v=onepage&q&f=false. பார்த்த நாள்: 2010-10-22.
  3. Zahir ud-Din Mohammad Babur (1921). "Events Of The Year 910 (p.4)". Memoirs of Babur. Packard Humanities Institute. பார்த்த நாள் 2010-08-22.
  4. Humbach, Helmut, and Djelani Davari, "Nāmé Xorāsān", Johannes Gutenberg-Universität Mainz; Persian translation by Djelani Davari, published in Iranian Languages Studies Website
  5. DehKhoda, "Lughat Nameh DehKhoda", Online version
  6. Frye, R.N., "Dari", The Encyclopaedia of Islam, CD edition
  7. Lazard, G., "Dari", Encyclopaedia Iranica
  8. Lorentz, J. Historical Dictionary of Iran. 1995 ISBN 0-8108-2994-0
  9. "Khorasan i. Ethnic Groups,"' Pierre Oberling, Encyclopaedia Iranica
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.