கிளி மூக்கு கோழி
கிளி மூக்கு கோழிகள் அல்லது விசிறிவால் சேவல் என்பவை இவை தமிழகத்துக்கே உரித்தான கோழி இனமாக கருதப்படுகிறது. என்றாலும், இது அசில் நாட்டுக் கோழியின் கலப்பினம் என்பதே கால்நடை நிபுணர்களின் கருத்து. இந்தச் சேவல்கள் கம்பீரத் தோற்றத்துடன் மூர்க்கமானவையாகக் கருதப்படுகின்றன. இவை பெரும்பாலும் சேவல் சண்டைக்காகவும், அழகுக்காகவும் வளர்க்கப்படுகின்றன. கோவை, பொள்ளாச்சி, நாமக்கல், திண்டுக்கல், உடுமலைப்பேட்டை ஆகிய பகுதிகளில் இந்த வகை சேவல்கள் அதிகமாக வளர்க்கப்படுகின்றன.
_from_Alanganallur%2C_Madurai.jpg)
பெயரியல்
இந்தக் கோழி இனங்களில் கிளியைப் போன்ற அலகினைக் கொண்டதால் கிளி மூக்கு சேவல் என்றும், இவற்றுக்கு மயிலைப் போல நீண்ட வால்கள் இருப்பதால் இதை 'விசிறிவால் சேவல்' என்றும், திண்டுக்கல் போன்ற பகுதிகளில் 'கிளிமூக்கு விசிறிவால் சேவல்' என்றும் அழைக்கின்றனர்.
இந்த இனங்களை மற்றக் கோழிகளைக் காட்டிலும் அதிக எடை கொண்டதால், இயல்பான இனப்பெருக்கம் நிகழ்வது கடினமாக உள்ளது. எனவே இனப்பெருக்கத்தில் கைமிதியாடுதல் போன்ற வழிமுறைகளை வளர்ப்பாளர்கள் கையாளுகிறார்கள்.
ஆரோக்கியமான கிளிமூக்குச் சேவல் ஒன்றின் உடல் எடை சுமார் 10 கிலோ. இதன் சராசரி உயரம் 2 அடி. இந்த வகைச் சேவல்களின் சராசரி வாழ்நாள் 5 முதல் 7 ஆண்டுகள். இவற்றின் விலை ரூ.15 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம்வரை உள்ளன. கிளி மூக்கு கோழிகளின் குஞ்சுகள் அதிக விலைக்கு விற்பனை வாய்ப்பினைக் கொண்டுள்ளன.
நிறத்தை அடிப்படையாகக்கொண்டு இவை கறுப்பு மயில், செங்கறுப்பு, செவலை, செங்கீரி, சாம்பல் பூதி, கொக்கு வெள்ளை, பொன்ரம் என்று பெயரிடப்படுகிறன.[1]
மேற்கோள்கள்
- ந. வினோத் குமார் (2018 பெப்ரவரி 10). "கிளிமூக்குச் சேவல்". கட்டுரை. தி இந்து தமிழ். பார்த்த நாள் 10 பெப்ரவரி 2018.