கிருஷ்ணா வைகுந்தவாசன்

கிருஷ்ணா வைகுந்தவாசன் (எஸ். கே. வைகுந்தவாசன், ஏப்ரல் 15, 1920 - சனவரி 4, 2005[1]) இலங்கையைச் சேர்ந்த முன்னாள் சட்டத்தரணியும், தமிழ் ஆர்வலரும், தொழிற்சங்க வாதியும் ஆவார். ஈழத்தமிழர்களின் பிரச்சனையை ஐக்கிய நாடுகள் அவையின் கவனத்தில் கொண்டு வந்து தமிழீழ தேசத்தினைத் தனிநாடாக அங்கீகரிக்குமாறு 1978 ஆம் ஆண்டு அக்டோபர் 5 ஆம் நாள் வியாழக்கிழமை நியூயோர்க் நகரில் ஐநா பொதுச்சபைக் கூட்டத்தில் உரையாற்றியவர்.

கிருஷ்ணா வைகுந்தவாசன்
புது தில்லியில் வைகுந்தவாசன் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியுடன் (1980 ஜனவரி 28)
பிறப்புஏப்ரல் 15, 1920
அளவெட்டி, யாழ்ப்பாணம்
இறப்புசனவரி 4, 2005(2005-01-04) (அகவை 84)
இலண்டன், ஐக்கிய இராச்சியம்
பணிவழக்கறிஞர்
அறியப்படுவதுஐநா பொதுச்சபையில் ஈழத் தமிழினப் படுகொலை குறித்து உரையாற்றியவர்

வாழ்க்கைக் குறிப்பு

வைகுந்தவாசன் இலங்கையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் அளவெட்டி எனும் ஊரில் பிறந்தார். இலங்கை அரச சேவையில் எழுத்தராகப் பணியாற்றி, அரசு எழுத்தர்களின் தொழிற்சங்கத்தில் உறுப்பினராய் இணைந்து அதன் பொதுச் செயலாளரானார். 1950களில் மக்கள் குரல் என்ற இலங்கையின் முன்னணி இதழின் ஆசிரியராகவும் பணியாற்றினார். தொழிற்சங்கவாதியாக இருந்தபோது சட்டம் பயின்று 1960 இல் இங்கிலாந்து சென்றார். பின்னர் 10 ஆண்டுகள் இலங்கை உயர் நீதிமன்ற வழக்கறிஞராக 1971 வரை பணியாற்றினார். ஐக்கிய இடதுசாரி முன்னணியின் சார்பில் இலங்கை நாடாளுமன்றத்துக்காக 1965 தேர்தலில் காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் போட்டியிட்டார்.[2]

1971 இல் சாம்பியா நாட்டில் மாவட்ட நீதிபதியாகப் பதவியேற்று சென்றார். 1973, 1975 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற பொதுநலவாய நீதிபதிகளின் மாநாடுகளில் சாம்பியாவின் சார்பில் கலந்து கொண்டார். இதன் பின் ஓய்வு பெற்று இலண்டன் சென்று வழக்கறிஞராகப் பணியாற்றினார். ஆகத்து 1978 இல், இங்கிலாந்தில் பாரிஸ்டராகப் பணியாற்றியபோது நியூயோர்க்கில் நடைபெற்ற அமெரிக்க வழக்குரைஞர்கள் கழகத்தின் மாநாட்டில் பிரித்தானியாவின் பிரதிநிதிகளில் ஒருவராகக் கலந்து கொண்டார்.[3] தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் இலண்டன் கிளையின் செயலாளராகப் பணியாற்றினார்.[4] நாடுகடந்த தமிழீழ அரசை நிறுவும் முயற்சிக்கு ஆதரவு தேடும் பொருட்டு இந்தியா சென்றிருந்த போது 1982 நவம்பர் 5 இந்திய அரசினால் நாடு கடத்தப்பட்டு இங்கிலாந்துக்குத் திருப்பி அனுப்பப்பட்டார்.[4]

ஐநா பொதுச்சபையில் உரை

ஐக்கிய அமெரிக்காவில் நியூயோர்க் நகரில் இடம் பெற்ற அமெரிக்க வழக்கறிஞர்கள் சங்க ஆண்டு மாநாட்டில் கலந்து கொள்ளவென அமெரிக்காவுக்குச் சென்றார். அதே நாட்களில் ஐக்கிய நாடுகள் கூட்டத் தொடர் இடம்பெற்றுக் கொண்டிருந்தது. இந்தக் கால கட்டத்தில் அவர் ஐக்கிய நாடுகளின் இந்தியக் குழுவுடன் பழகும் வாய்ப்பைப் பெற்றார்.

இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தமிழீழத்தின் குரலை ஐநா சபையில் ஒலிக்க ஒரு சந்தர்ப்பத்தை அவர் உருவாக்கினார். 1978 ஆம் ஆண்டு அக்டோபர் 5 ஆம் நாள் நண்பகலில் சைப்பிரஸ் நாட்டுத் தலைவரின் ஒரு மணி நேர உரையைத் தொடர்ந்து சுரினாம் நாட்டு பிரதமரின் உரையையும் பொதுச் சபையில் 150 நாடுகளைச் சேர்ந்த 2000 பேராளர்கள் வரை கேட்டுக் கொண்டிருந்தார்கள். இவர்களில் உலக நாடுகளின் - அரசுத்தலைவர்கள், பிரதமர்கள், வெளிநாட்டு அமைச்சர்கள் எனப் பலரும் பங்கு கொண்டிருந்தார்கள்.

இந்த வேளையில் அப்போதைய இலங்கையின் வெளிநாட்டு அமைச்சர் சாகுல் ஹமீது பேச நிகழ்ச்சி நிரலில் அறிவிக்கப்பட்டிருந்த வேளையில் தனது பேச்சை நிகழ்த்த கிருஷ்ணா வைகுந்தவாசன் திட்டம் தீட்டினார்.

உலக நாடுகளைச் சேர்ந்த உயர்மட்டத் தலைவர்கள் சுமார் 2000 பேருக்கு மேல் கூடியிருந்த அந்த உலகின் உயர்சபையில் இலங்கையின் வெளிநாட்டு அமைச்சர் எப்படி இருப்பார் என்று எவருக்குமே தெரியாத சூழ்நிலையில் ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச் சபைத் தலைவர் இலங்கையின் வெளிநாட்டு அமைச்சரை உரையாற்ற அழைத்த நேரத்தில் தடித்த தலை நரைத்த வைகுந்தவாசன் பேராளர் வரிசை ஒன்றிலிருந்து எழுந்து சென்று மேடையேறியபோது இலங்கையின் பிரதிநிதிகளைத் தவிர வேறுயாருமே வைகுந்தவாசனை அறிந்திருக்கவில்லை.

அன்றையதினம் பொதுச்சபைக் கூட்டத்துக்குத் தலைமை தாங்கியவர் கொலம்பியாவைச் சேர்ந்த "இன்டேல்சியோ லிவியானோ" என்பவராவார். அவரும் வைகுந்தவாசனை இலங்கையின் வெளிநாட்டு அமைச்சர் என்றே எண்ணிக்கொண்டார். அதனால் மிக வேகமாக மேடையில் ஏறிய வைகுந்தவாசனுக்கு சிரம்தாழ்த்தி வணக்கம் செய்தார்.

இலங்கையின் வெளிநாட்டு அமைச்சர் ஐ.நாவில் பேசுவதற்குத் தனது இருக்கையை விட்டு எழும்புவதற்கு முன்னரேயே கிருஷ்ணா வைகுந்தவாசன் எழுந்து சென்று மிகவும் கம்பீரமான தொனியில் உலக சபையில் சொல்ல வேண்டியதைச் சொல்லி விட்டார்[3][5].

எனது பெயர் கிருஷ்ணா சிறி லங்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையே இருக்கும் 25 இலட்சம் மக்களைக் கொண்ட பலம் பொருந்திய தமிழீழத்திலிருந்து வந்திருக்கின்றேன். தமிழீழம் போன்ற அடக்கி ஒடுக்கப்பட்டுள்ள சிறிய தேசங்கள் உலகின் ஆக உயர்ந்த மன்றமான இந்தச் சபையில் தமது முறையீடுகளை வைக்க முடியாதென்றால் நாங்கள் எங்கேதான் போவது? தயவுசெய்து ஒரே ஒரு நிமிடம் என்னைப் பேசுவதற்கு அனுமதியுங்கள். சிறிலங்கா அரசாங்கம் தனது இனக்கொலைக் கொள்கையைத் தொடருகின்றது....[6]

இவ்வளவும் பேசி முடித்ததும் ஒலிவாங்கி நிறுத்தப்பட்டது. அவரைப் பாதுகாப்பு அதிகாரிகள் அங்கிருந்து வெளியேற்றி விட்டார்கள். இதைத் தொடர்ந்து அவரைச் சூழப் பெரும் எண்ணிக்கையிலான தொலைக்காட்சி ஊடகவியலாளர்களும் பத்திரிகையாளர்களும் சூழ்ந்து கொண்டார்கள். அமெரிக்காவின் நியூயோர்க் டைம்ஸ் இதழின் நிருபர் முதலில் அவரிடம் கேள்விக் கணை தொடுத்தார். "நீங்கள் உங்கள் பேச்சில் தமிழீழம் பற்றிக் குறிப்பிட்டீர்களே - இந்த நாடு உலக வரை படத்தில் எங்கே இருக்கிறது?" எனக் கேட்டார். அதற்கு வைகுந்தவாசன் பின்வருமாறு பதில் கொடுத்தார்.

நான் குறிப்பிடும் தமிழீழம் இந்தியப் பெருங்கடலில் தென்னிந்தியாவுக்குத் தெற்கேயும் இலங்கைக்கு வடக்கேயும் பாக்கு நீரிணையை அண்மித்ததாகவும் வங்காள விரிகுடாக் கடலை ஒரு பக்க எல்லையாகவும் கொண்டிருக்கிறது. அங்கு 25 லட்சம் தமிழ் பேசும் மக்கள் வாழ்கிறார்கள். அவர்களை இலங்கை அரசாங்கம் இனப் படுகொலைக்குள்ளாக்குகிறது.

இதைத் தொடர்ந்து நியூயோர்க்கில் இருந்து வெளிவரும் "இந்தியா எப்றோட்" என்ற ஆங்கில ஏட்டின் பி.பி.கூப்பர் என்பவர் வைகுந்தவாசனை விரிவான முறையில் பேட்டி கண்டு 1978 ஆம் ஆண்டு அக்டோபர் 20 இதழில் நேர்காணலை பிரசுரித்திருந்தார். மேலும் பல ஊடகவியலாளர்கள் வைகுந்தவாசனின் பேட்டிகளைத் தமது பத்திரிகைகளில் வெளியிட்டிருந்தார்கள்.

எழுதிய நூல்கள்

  • நான் கண்ட நவசீனா
  • "ஐ.நா வில் தமிழன் - என் முதல் முழக்கம்!" (முதற் பதிப்பு: சூலை 1990, இரண்டாம் பதிப்பு: 1993)

மேற்கோள்கள்

  1. இலண்டனில் எஸ்.கே.வைகுந்தவாசகன் காலமானார்
  2. "Result of Parliamentary General Election 1965". இலங்கைத் தேர்தல் திணைக்களம்.
  3. Submission to LLRC Part VIII - Who really shot Jaffna Mayor Alfred Duraiyappah?, K.T.Rajasingham, சூன் 29, 2010
  4. "Indian Govt deports Vaikunthavasan". Tamil Times II (1): 20. November 1982. http://www.noolaham.org/wiki/index.php/Tamil_Times_1982.11.
  5. War Or Peace in Sri Lanka By Saroj Pathak
  6. ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் அக்டோபர் 5, 1978 அன்று வைகுந்தவாசன் ஆற்றிய உரை:
    Mr President! Leaders of the World!
    If oppressed minority nations such as Tamil Eelam cannot make representations to this supreme body, then where are we to go?
    My name is Krishna and I come from the 2.5 million strong Nation of Tamil Eelam lying between Sri Lanks and India.
    The Sri Lanka Sinhala government is continuing a policy of genocide aimed at the destruction of our Tamil Nation.
    We have exercised our right of self-determination to live as a separate Nation.
    There is every danger of the Tamil problem thretening the peace of the Indian Region.
    The problem inSri Lanka will develop to be a s serious as the Palestinian and the Cyprus problems unless you, the world leaders intervene and help in its solution now.
    We appeal to you for such help! Thank you. I apologise for speaking without permission.
    LONG LIVE TAMIL EELAM!

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.