கி. சிவநேசன்

கிட்டிணன் சிவனேசன் (சனவரி 21, 1957 - மார்ச் 6, 2008) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2008 மார்ச் 6 இல் இலங்கை படைத்துறையின் ஆழ ஊடுருவித்தாக்கும் படையணியினால் மேற்கொள்ளப்பட்ட கண்ணிவெடித் தாக்குதல் ஒன்றில் கொல்லப்பட்டார்.[1]

கிட்டிணன் சிவனேசன்
Kiddinan Sivanesan

நாஉ
யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
2004–2008
தனிநபர் தகவல்
பிறப்பு சனவரி 21, 1957(1957-01-21)
இறப்பு மார்ச்சு 6, 2008(2008-03-06) (அகவை 51)
ஏ-9 நெடுஞ்சாலை, மாங்குளம், இலங்கை
அரசியல் கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
பணி அரசு அதிகாரி
சமயம் இந்து

ஆரம்ப வாழ்க்கை

1957 ஆம் ஆண்டில் பிறந்த சிவனேசன் யாழ்ப்பாண மாவட்டம், கரவெட்டியைச் சேர்ந்தவர். நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தில் கல்வி கற்றர். யாழ் குடாநாட்டில் பனை, மற்றும் தென்னை அபிவிருத்திச் சபைகள் பலவற்றைத் தோற்றுவித்தார். ஏ9 நெடுஞ்சாலை மூடப்பட்ட போது மல்லாவிகு இடம்பெயர்ந்தார். 1996 முதல் 2004 ஆம் ஆண்டு வரை வட பிராந்திய தென்னை அபிவிருத்துக் கூட்டுறவுச் சபையின் பொது முகாமையாளராகப் பணியாற்றினார்.

அரசியலில்

2004 நாடாளுமன்றத் தேர்தலில் சிவனேசன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளராக யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிட்டு 43,730 விருப்பு வாக்குகள் பெற்று நாடாளுமன்றம் சென்றார்.[2]

படுகொலை

2008 மார்ச் 6 அன்று, சிவனேசன் கொழும்பில் நாடாளுமன்றத்தில் இருந்து ஏ9 நெடுஞ்சாலை வழியாக மல்லாவி நோக்கிப் பயணம் செய்தார். வவுனியா மாவட்டம் ஓமந்தையில் உள்ள விடுதலைப் புலிகளின் சோதனைச் சாவடியைக் கடந்து சென்று 30 நிமிடங்களின் பின்னர், பிற்பகல் 1:20 மணியளவில், சிவனேசன் சென்ற வாகனம் ஓஒமந்தை சாவடியில் இருந்து 35 கிமீ தொலைவில் மாங்குளம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது கிளைமோர் கண்ணிவெடிகள் ஒரே நேரத்தில் வெடித்தன. சிவனேசனின் வாகன ஓட்டுனர் பெரியண்ணன் மகேசுவரராசா அதே இடத்தில் உயிரிழந்தார்.[3] சிவனேசன் மாங்குளம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு உயிரிழந்தார்.

இத்தாக்குதலை இலங்கைப் படைத்துறை மேற்கொண்டதாக மீது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியது.[4] படையினரின் ஆழ ஊடுருவித்தாக்கும் படையணியினரே காரணம் என அவர்கள் கூறினர்.[5] சிவனேசன் இலங்கை இராணுவத்தினரால் தான் அச்சுறுத்தப்படுவதாக முன்னர் தெரிவித்திருந்தார்.[6] இவரது வாகனம் 2007 ஆம் ஆண்டிலும் கிளைமோர் தாக்குதலுக்கு உள்ளானது.[7] இக்குற்றச்சாட்டுகளை இராணுவம் மறுத்தது.

2008 மார்ச் 7 இல் விடுதலைப் புலிகள் சிவனேசனுக்கு மாமனிதர் விருது வழங்கிக் கௌரவித்தது.[8]

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.