க. அன்பழகன்

க.அன்பழகன் (பிறப்பு: திசம்பர் 19, 1922)[1] ஒரு தமிழக அரசியல்வாதி ஆவார். தமிழக அமைச்சரவையில் நிதி அமைச்சராகப் பணியாற்றியுள்ளார். திராவிடக் கொள்கையில் பற்று கொண்ட இவர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆரம்ப காலம் முதல் முக்கியப் பங்கு வகிக்கின்றார். இவர் 1977 முதல் திமுகவின் பொதுச் செயலாளராக உள்ளார்.[2]

பேராசிரியர் க. அன்பழகன்
முன்னாள் தமிழ்நாட்டு நிதியமைச்சர்
தனிநபர் தகவல்
பிறப்பு திசம்பர் 14, 1922 (1922-12-14)[1]
சென்னை, தமிழ்நாடு இந்தியா
அரசியல் கட்சி தி.மு.க.
வாழ்க்கை துணைவர்(கள்) வெற்றிசெல்வி
இருப்பிடம் சென்னை
கல்வி முதுகலைமானி தமிழ்

இளமைப் பருவம்

அன்பழகன் திருவாரூர் மாவட்டத்திலுள்ள காட்டூர் கிராமத்தில், எம். கல்யாணசுந்தரனார் மற்றும் சுவர்ணம்பாள் தம்பதியருக்கு திசம்பர் 19, 1922 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் இயற்பெயர் இராமையா. அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பி.ஏ. (ஹனர்ஸ்) தமிழ் படித்தார். இது கலைமுதுவர் (எம்.ஏ) பட்டத்திற்கு இணையானது. படிப்பை முடித்தபின் 1944 முதல் 1957 வரை சென்னை பச்சையப்பன் கல்லூரியில் துணைப்பேராசிரியராகப் பணியாற்றியவர்.[3]

பொது வாழ்க்கை

தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினராக 1962 ஆண்டில் சென்னை-செங்கற்பட்டு ஆசிரியர் தொகுதிக்கான இடைத்தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4] இந்திய நாடாளுமன்றத்தில் மக்களவை உறுப்பினராக 1967 முதல் 1971 வரை பங்கு பெற்றவர். 1971 இல் சமூகநலத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார். 1984 இல் இலங்கைவாழ் மக்களின் தமிழ் ஈழக்கோரிக்கையை வலியுறுத்தி தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை துறந்தவர்களில் இவரும் ஒருவர். திமுக வின் மூத்த மேடைப் பேச்சாளரும், ஈ.வெ.ரா அடியொற்றி நடப்பவரும் ஆவார். 2011 சட்டமன்றத் தேர்தலில் வில்லிவாக்கம் தொகுதியில் நின்று தோல்வியுற்றார்.

”தமிழர் இனம்” குறித்தும் அவர்கள் வாழ்கின்ற நிலை குறித்தும், சுயமரியாதை குறித்தும் தன் பேச்சுக்களில் அதிகம் குறிப்பிட்டு வலியுறுத்தி வந்ததால் இனமானப் பேராசிரியர் என்று அன்புடன் அவர் கட்சித் தொண்டர்களாலும், மக்களாலும் அழைக்கப்படுகின்றார். திமுக கட்சியின் பொதுச்செயலாளராக நீண்டகாலமாக கட்சி பணியாற்றிவருபவர். திமுக வின் தலைவர் மு. கருணாநிதியுடன் அதிக நெருக்கமானவர்.

இதழாளர்

க. அன்பழகன் சென்னை புரசைவாக்கம், வெள்ளாளர் தெரு, கட்டிட எண் 10-இலிருந்து "புதுவாழ்வு" என்னும் மாத இதழை 1948 சனவரி 15ஆம் நாள் (தை முதல் நாள்) முதல் ஆசிரியராக இருந்து வெளியிட்டார்.[5]

எழுத்துப் பணி

எழுத்தாளராகப் பல தமிழ் சமூகக் கட்டுரைகளையும் நூல்களையும் எழுதியவர். இவர் எழுதிய நூல்கள் பின்வறுமாறு:

  1. அழகுராணி [6]
  2. இன-மொழி வாழ்வுரிமைப் போர்
  3. உரிமை வாழ்வு, 1956, பாரி நிலையம், சென்னை.
  4. தமிழர் திருமணமும் இனமானமும்
  5. தமிழினக்காவலர் கலைஞர்
  6. தமிழ்க்கடல்
  7. தமிழ்க்கடல் அலை ஓசை பரவும் தமிழ் மாட்சி
  8. தமிழ் வானின் விடிவெள்ளி தந்தை பெரியார்
  9. தொண்டா? துவேஷமா? 1953, பாரி நிலையம், சென்னை. (தி.மு.க. பார்ப்பனர்களைச் துவேஷிக்கிறாதா தமிழக்கத்திற்கு தொண்டுபுரிகிறதா என விளக்கும் நூல்)
  10. நீங்களும் பேச்சாளர் ஆகலாம்
  11. வகுப்புரிமைப் போராட்டம், 1951; மக்கள் மன்றம், பவழக்காரத்தெரு, சென்னை.[7]
  12. வளரும் கிளர்ச்சி, 1953, பாரி நிலையம், சென்னை. (டாக்டர் நாயர் காலத்திலிருந்து 1953 வரை திராவிட இயக்கத்தின் வரலாறு)
  13. வாழ்க திராவிடம் (ஓர் ஆராய்ச்சி நூல்), 1947, திராவிடன் பதிப்பகம், வேலூர்.[8]
  14. விடுதலைக் கவிஞர்
  15. விவேகானந்தர் - விழைந்த மனிதகுலத் தொண்டு
  16. பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்கள்

குடும்பம்

இவர் வெற்றிச்செல்வி என்பவரை 21-2-1945ஆம் நாள் பெரியார் ஈ.வெ.ரா. தலைமையில் சென்னையில் மணந்தார்.[9] இவர்களுக்கு அன்புச்செல்வன் (பிறப்பு: 17-2-1952[10] ) என்னும் மகனும் இரண்டு பெண்மக்களும் பிறந்தனர். வெற்றிச்செல்வியின் மறைவிற்குப் பின்னர் சாந்தகுமாரி என்பவரை மணந்தார். இவர்களுக்கு புருஷோத்தமராஜ், ராஜேந்திரபாபு என்னும் இரு மகன்களும் ஜெயக்குமாரி என்னும் மகளும் பிறந்தனர்.[11] சாந்தகுமாரி 23-12-2012ஆம் நாள் மறைந்தார்.

க. அன்பழகனுக்கு புலவர் க. திருமாறன், க. அறிவழகன், க. மணிவண்ணன், க. பாலகிருட்டிணன் என்னும் நான்கு தம்பிகள் உள்ளனர். இவர்களுள் புலவர் க. திருமாறன் விருதுநகர் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றினர். திருமாறனுக்கும் பத்மா என்பவருக்கும் 12-9-1955ஆம் நாள் சென்னையில் மு.வரததாசன் தலைமையில் திருமணம் நடந்தது.[12] மற்றொரு தம்பியான க. அறிவழகன் சென்னை தியாகராயர் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றினார். இவருக்கும் எழிலரசி என்பவருக்கும் குத்தாலம் ஒன்றியம் எலந்தங்குடியில் கா. ந. அண்ணாதுரை தலைமையில் 11-9-1957ஆம் நாள் திருமணம் நடைபெற்றது.[13]

மேற்கோள்கள்

  1. "திமுகவின் பொதுச்செயலாளர் க.அன்பழகனின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்".
  2. https://www.thenewsminute.com/article/veteran-dmk-leader-k-anbazhagan-not-contest-election-41585
  3. http://www.thehindu.com/elections/tamilnadu2016/tn-assembly-polls-spry-at-94-dmks-professor-loves-the-lectern/article8557725.ece
  4. திராவிடநாடு, 15-4-1962, பக்.16
  5. குடி அரசு 1948 சனவரி 24, பக்.14
  6. திராவிடநாடு (இதழ்) நாள்:30-3-1952, பக்கம் 9
  7. திராவிடநாடு (இதழ்) நாள்:10-6-1952, பக்கம் 3
  8. குடி அரசு நாள்:27-12-1947, பக்கம் 13
  9. குடிஅரசு, 17-3-1945, பக். 4
  10. திராவிடநாடு (இதழ்) நாள்:2-3-1952, பக்கம் 11
  11. https://tamil.oneindia.com/news/2013/05/06/tamilnadu-now-k-anbazhagan-faces-family-dispute-174763.html
  12. திராவிடநாடு (இதழ்) நாள்:2-10-1955, பக்கம் 10
  13. திராவிடநாடு (இதழ்) நாள்:29-7-1957, பக்கம் 2
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.