ஏரிசு (குறுங்கோள்)
ஏரிஸ் (Eris, கிரேக்கம்: Έρις) சூரியக் குடும்பத்தில் கண்டறியப்பட்டுள்ள மிகப் பெரிய குறுங்கோள் (dwarf planet) ஆகும். இது முன்னர் 136199 ஏரிஸ் என அழைக்கப்பட்டது. இது சூரியனின் சுற்று வட்டத்தில் உள்ள 9வது பெரிய பொருள் ஆகும். 2,500 கிலோ மீட்டர் விட்டமும் புளூட்டோவை விட 27% அதிக திணிவையும் கொண்டது[1].


ஏரிஸ் முதன் முறையாக 2003 இல் மைக்கல் பிரவுண் தலைமையிலான வானியல் ஆய்வுக்குழு கலிபோர்னியாவின் பலோமார் விண்வெளி ஆய்வு மையத்தில் அவதானித்தது. ஆனாலும் இது 2005 வரையில் இனங்காணப்படவில்லை. ஏரிஸ் டிஸ்னோமியா என்ற ஒரேயொரு சந்திரனைக் கொண்டுள்ளது. மேலதிகமாக எவ்வித செய்மதிகளையும் இது கொண்டிருக்கவில்லை என அண்மைக்கால ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சூரியனிலிருந்து ஏரிசின் தற்போதைய தூரம் 96.7 வானியல் அலகு ஆகும். இது புளூட்டோவினதை விட மூன்று மடங்காகும். சில வால்வெள்ளிகளைத் தவிர்த்து சூரியக் குடும்பத்தில் உள்ள மிகத் தொலைவான பொருள் இதுவேயாகும்.[2]
புளூட்டோவை விட ஏரிஸ் பெரிதாக இருந்தமையினால் இது கண்டறியப்பட்டபோது சூரியக் குடும்பத்தின் "பத்தாவது கோள்' என்று அதனைக் கண்டுபிடித்தவர்களாலும் நாசாவினாலும் முன்வைக்கப்பட்டது. ஆனால், 2006 ஆகஸ்ட் 24 இல் செக் குடியரசின் பிராக் நகரில் நடந்த மாநாட்டில், பன்னாட்டு வானியல் ஒன்றியம் ஏரிஸ், புளூட்டோ, செரெஸ் போன்றவையெல்லம் கோள்கள் எனக் கருதக் கூடிய அளவில் இல்லாத சிறிய கோள்கள்; கோள்களைப் போன்ற சிறுகோள்கள் (dwarf planets), கோள்கள் அல்ல என்று வரையறுத்து, நிராகரித்து விட்டது[3].
கண்டுபிடிப்பு
ஏரிசு மைக் புரோன் (Mike Brown), சட் டுரிஜில்லோ (Chad Trujillo), மற்றும் டேவில் ரபினோவிட்ஸ் (David Rabinowitz) போன்றோரால் [2] 2005 ஆம் ஆண்டு சனவரி ஐந்தாம் திகதி கண்டுபிடிக்கப்பட்டது. இக்கண்டுபிடிப்பு 2003 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 21 ஆம் திகதி எடுக்கப்பட்ட புகைப்படங்களை அடிப்படையாக வைத்தே கண்டுபிடிக்கப்பட்டது. 2005 ஆம் ஆண்டு சூலை மாதம் 29 ஆம் திகதி இக்கண்டுபிடிப்பும் மைக்மைக் குறுங்கோளின் கண்டுபிடிப்பும் இரு நாட்களின் பின் அவுமியாக் குறுங்கோளுடைய கண்டுபிடிப்பும் அறிவிக்கப்பட்டது.
மேற்கோள்கள்
- "குறுங்கோள் புளூட்டோவை விஞ்சியது". ஸ்பேஸ்.காம் (2007). பார்த்த நாள் 2007-06-14.
- மைக் பிரவுண் (2006). "2003 UB313 ஏரிசின் கண்டுபிடிப்பு, மிகப் பெரும் குறுங்கோள்". பார்த்த நாள் 2007-05-03.
- "கோள் மற்றும் புளூட்டோன்கள் பற்றிய பன்னாட்டு வானியல் ஒன்றியத்தின் வரைவு". பன்னாட்டு வானியல் ஒன்றியம் (2006-08-16). பார்த்த நாள் 2006-08-16.
வெளி இணைப்புகள்
- '10'வது கோள்', ஸீனாவுக்கு கலகக் கடவுளின் பெயர் - (தமிழில்)
- மைக்கல் பிரவுணின் இணையத்தளம்
- ஏரிசின் சந்திரன் பற்றிய பிரவுணின் இணையத்தளம்