ஏப்பம்

ஏப்பம் (belching) அல்லது ஏவறை[1] என்பது செரிமானப் பாதையிலிருந்து (பெரும்பாலும் இரைப்பை மற்றும் உணவுக் குழாயிலிருந்து) வாய் வழியாக காற்று வெளியேறுவது ஆகும். இது பெரும்பாலும் தனக்கே உரித்தான ஓசையுடன் வெளிப்படும். சில நேரங்களில் குறிப்பிட்ட மணத்துடனும் வெளிப்படும். உலகின் பெரும்பாலான பகுதிகளில் பொது இடங்களில் சத்தமாய் ஏப்பம் விடுவது மரியாதைக்குரிய செயலன்று. இந்தியா உள்ளிட்ட கீழை நாடுகளில் ஏப்பம் விடுவதென்பது வயிராற உணவுண்டதைக் குறிக்கும் நல்ல அறிகுறியாக பன்னெடுங்காலமாய்க் கருதப்படுகிறது.

நோய் உணர்குறிகள் /
நோய் அறிகுறிகள்:
ஏப்பம் Eructation
வகைப்படுத்தம் மற்றும் வெளிச்சான்றுகோள்கள்
ஐ.சி.டி.-10 R14.
ஐ.சி.டி.-9 787.3

உண்டாகும் விதம்

(பார்க்க: முதன்மைக் கட்டுரை- வளி விழுங்கல்)

ஏப்பம் வளி விழுங்கலினால் (aerophagy) உண்டாகிறது. பொதுவாக மனிதர்கள் உண்ணும் போது சிறிதளவு காற்றையும் சேர்த்துத் தான் இரைப்பைக்குள் விழுங்குகிறோம். ஆனால் அவசர அவசரமாக உண்ணும் போதும் பேசிக்கொண்டே உண்ணும் போதும் இன்னும் அதிக காற்று உட்செல்லும். கார்பானிக் அமிலம் (H2CO3) கலந்த பானங்களான சோடா, பீர் முதலியவற்றை அருந்தும் போது கார்பானிக் அமிலம் நீராகவும் கார்பன் டை ஆக்சைடாகவும் (C02) பிரியும். இந்த கார்பன் டை ஆக்சைடு வாய் வழியாக ஏப்பமாக வெளியேறும். இரைப்பை அமிலச் சுரப்பு நோய் (acid peptic disease) போன்ற செரிமான மண்டல நோய்களின் அறிகுறியாகவும் ஏப்பம் இருக்கலாம். ஏப்பம் விடும் போது ஏற்படும் ஒலிக்கு காரணம் கீழ் உணவுக்குழாய்ச் சுருக்கு தசைகள் (lower esophageal sphincter) அதிர்வடைவது ஆகும்.

குழந்தைகளில்

பச்சிளங் குழந்தைகளின் வயிற்றில் காற்று அதிகம் சேர வாய்ப்புண்டு. இதனால் குழந்தைக்கு வயிற்றுத் தொந்தரவு ஏற்படும். இதைத் தவிர்க்கும் பொருட்டு தாய்மார்கள் பால் கொடுத்து முடித்ததும் குழந்தையைத் தோளில் போட்டுத் தட்டிக் கொடுப்பது வழக்கம். அதாவது குழந்தையை நேராக வைத்துக் கொண்டு குழந்தையின் வயிறு தாயின் நெஞ்சின் மீது இருக்குமாறு வைத்துக் கொண்டு கீழ் முதுகை மிக இலேசாக அழுத்துவர்.

விலங்குகளில்

ஆடு, மாடு போன்ற கால்நடைகள், நாய்கள் ஆகிய விலங்குகளும் ஏப்பம் விடுகின்றன. அசை போடும் விலங்குகளான கால்நடைகள் செல்லுலோஸ் நிறைந்த தாவர உணவையே உண்ணுகின்றன. இவற்றைச் செரிக்கும் நொதிகள் விலங்குகளிடம் இல்லை. இந்த வேலையை அவற்றின் உணவுப் பாதையில் உள்ள பாக்டீரியங்கள் தான் செய்கின்றன. எ.கோலை (E.coli) போன்ற பாக்டீரியங்கள் நொதித்தல் மூலம் தாவர உணவைச் செரிக்கும் போது மீத்தேன் உண்டாகிறது. ஒரு பசு சராசரியாக ஒரு நாளில் சராசரியாக 500 முதல் 600 லிட்டர் மீத்தேன் வரை வெளிவிடுகிறது.

இவற்றையும் பார்க்க

சான்றுகள்

வெளியிணைப்புகள்

ஏப்பம்-வயிற்றுப் பொருமல்-வாயு

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.