கடையெழு வள்ளல்கள்

சிறுபாணாற்றுப் படையைப் பாடிய நல்லூர் நத்தத்தனார், ஏழு வள்ளல்கள் பற்றியும் அவர்களின் கொடைமடச் செயல்கள் பற்றியும் கூறியுள்ளார். கொடைமடச் செயல்கள் என்றால், பகுத்தறியாது மடமையோடு கொடையளித்த செயல்கள் என்று கூறலாம். இத்தகைய செயல்களே அவ்வள்ளல்களுக்குச் சிறப்பைச் சேர்த்தன என்பதும் உண்மையாகும். இந்த வள்ளல்களைப் பற்றிய செய்திகளை எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான புறநானூற்றுப் பாடல்களும் கூறுகின்றன; இதுவே கடையெழு வள்ளல்கள் ஆகும்.

சிறுபாணாற்றுப்படை காட்டும் தொகுப்பு

  1. பேகன் - மயிலுக்குப் போர்வை அளித்தவன்
  2. பாரி - முல்லைக்குத் தேர் தந்தவன்
  3. காரி - ஈர நன்மொழி கூறியவன் (councilman)
  4. ஆய் - நீலநாகம் நல்கிய கலிங்கத்தை ஆலமர் செல்வனுக்கு (குற்றாலநாதருக்கு) அணிவித்தவன்
  5. அதிகன் - நெல்லிக்கனியை ஔவைக்கு அளித்தவன்
  6. நள்ளி - துளிமழை பொழியும் நளிமலை (நீலகிரி) நாடன். நட்டோர் உவப்ப நடைப்பரிகாரம் நல்கியவன். நண்பர்கள் வாழ்க்கை நடத்துவதற்கு வேண்டிய அனைத்து வசதிகளையும் நல்கியவன்
  7. ஓரி - தன் குறும்பொறை நாடு முழுவதையும் கோடியர்க்கு(யாழ் மீட்டும் பாணர்க்கு) அளித்தவன். தன் ஓரி என்னும் குதிரைமீதேறி, காரி என்னும் குதிரைமேல் வந்து தாக்கிய காரியோடு போரிட்டவன்.

பெருஞ்சித்திரனார் பாடல் புறநானூறு 158 காட்டும் தொகுப்பு

  1. பாரி - பறம்பிற் கோமான் (பரம்புமலை அரசன், மூவேந்தரோடு போரிட்டவன்)
  2. ஓரி - கொல்லிமலை நாட்டை ஆண்டவன்
  3. காரி - காரி என்னும் குதிரைமேல் சென்று போரிட்டவன்
  4. மலையன் - 'மறப்போர் மலையன்', மாரி போல் ஈகைப்பண்பு கொண்டவன்.
  5. எழினி - குதிரைமலை நாட்டை ஆண்டவன் ("ஊராது ஏந்திய குதிரை"), கூவிளங்கண்ணி மாலை அணிந்தவன். கூர்வேல் கொண்டு போர் புரிபவன்.
  6. பேகன் - கடவுள் காக்கும் மலை (பொதினி என்னும் பழனி) நாடன்
  7. ஆய் - "மோசி பாடிய ஆய்"

தொகுப்பில் மாற்றம்

சிறுபாணாற்றுப்படையில் அதிகன் எழுவரில் ஒருவனாகத் தொகுக்கப்பட்டுள்ளான்.
புறநானூற்றில் எழினி எழுவரில் ஒருவனாகத் தொகுக்கப்பட்டுள்ளான்.

தலையெழு வள்ளல்கள்

குமணன் , சகரன் , சகாரன் , செம்பியன் , துந்துமாரி , நளன் , நிருதி ஆகிய எழுவரைத் தலையெழு வள்ளல்கள் எனத் தொகுத்துக் காட்டுவர்.

இந்தத் தொகுப்பு வரலாற்றுக்கு முரணானது.
குமணன் கடையெழு வள்ளல்களின் காலத்துக்குப் பிற்பட்டவன்.
செம்பியன் எனக் குறிப்பிடப்படுபவன் சிபிச் சக்கரவர்த்தி எனப் பேசப்படுபவன்.
தந்துமாறன் என்னும் வள்ளலைச் சங்கவருணர் என்னும் நாகரியர் பாடிய பாடல் ஒன்று புறநானூற்றில் உள்ளது.
நிடத-நாட்டு நளன் பற்றிய இலக்கியம் உள்ளது.
பிற மூவர் புராணக் கதை மாந்தர்.

விரிவுக்கு உதவி

வள்ளல்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.