வள்ளல்

கடையெழு வள்ளல்கள் என நாம் குறிப்பிடுவோரைச் சங்ககாலப் புலவர்களே தொகுத்துக் காட்டியுள்ளனர். தலையெழு வள்ளல்கள் எனக் கற்பனையும் நீண்டுள்ளது. இங்குச் சங்ககாலத்தில் புகழ்பெற்று விளங்கிய பிற வள்ளல்களையும் தொகுத்துப் பார்க்கிறோம்.

தாவரம் குறித்து அறிய, காண்க வள்ளல் (தாவரம்).

வள்ளல் - சொல்விளக்கம்

கொடையாளியை வள்ளல் என்கிறோம். வள்ளல் [1], வள்ளியோர் [2], என்னும் படர்க்கைப் பெயர்களும், வள்ளியம் [3] என்னும் தன்மைப் பெயரும், வள்ளியை [4] என்னும் முன்னிலைப் பெயரும், வள்ளியோய் [5] என்னும் விளிப்பெயரும், வள்ளண்மை [6] என்னும் தொழிற்பெயரும் சங்க நூல்களில் காணக் கிடக்கின்றன.
வள்ளி நுண்ணிடை [7] என்னும்போது வள்ளி என்னும் சொல் வளைதலைக் குறிக்கிறது. 'மல்லல் வளனே' [8] என்னும்போது வளம் என்பது செழுமையைக் குறிக்கிறது. நிலவளம், பொருள்வளம், உடல்வளம், மனவளம் என்றெல்லாம் குறிப்பிடும்போது வளம் என்பது பயன்படு பொருளைக் குறிப்பதை உணரமுடியும். மாங்கிளை வளைந்திருந்தால் பழத்தை எளியாகப் பறித்துக்கொள்ளலாம் அல்லவா? அதுபோலப் பயன்படு பொருளை வளைந்து கொடுத்து நல்குபவர் வள்ளல்

வள்ளி, வேள், வேஎள், வேள்வி, கந்தன்

இந்தச் சொற்கள் வள்ளல் என்னும் சொல்லோடு ஒப்புநோக்கத் தக்கவை.

வள்ளல் என்பதன் பெண்பால் வள்ளி.
'தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு' என்னும் திருக்குறளில் 'வேள்' (வேளாண்மை) என்னும் சொல் உதவி செய்தலை உணர்த்துகிறது.
உதவி செய்யும் கடவுள் வேஎள்.
'விருந்தோம்பி வேள்வி தலைப்படாதார்' [9] என்னும்போது வேள்வி என்பதும் உதவி செய்தலைக் குறிக்கிறது. கடவுளுக்கு சோறாக்கிப் படைப்பதைப் 'பெரும்பெயர் ஆவுதி' என்றும், மக்களுக்குச் சோறாக்கிப் படைப்பதை 'அடுநெய் ஆவுதி' என்றும் பதிற்றுப்பத்து (21) குறிப்பிடுவதையும் இங்கு நினைவுபடுத்திக்கொள்ளலாம்.
'காதனமை கந்தா அறிவறியார்த் தேறுதல்' [10] என்னும்போது கந்து என்னும் சொல் துணை என்னும் பொருளைத் தருவதை அறிவோம். கந்திற்பாவை என்னும்போது வரும் கந்து தூண் என்னும் பொருள் தருவதை அறிவோம். எனவே கந்தன் என்னும் சொல்லும் உதவி செய்பவன், தூண் போல் தாங்குபவன் என்னும் பொருளைத் தருவதை உணரமுடியும்.

சங்க கால வள்ளல்கள்

தொகுத்துக் காட்டப்பட்ட வள்ளல்கள்

கடையெழு வள்ளல்கள்

பிற வள்ளல்களும் அவர்களது கொடையும்

கொடுத்தவர்கள்

அஃதை
அம்பர் கிழான் அருவந்தை
ஆதி அருமன்
இவன் வழிப்போக்கர்களுக்கு நுங்கு தருவான். ஊருக்குள் வந்துவிட்டால் அவர்கள் விரும்பும் கள்ளோ, பதநீரோ தருவான் [11]
உதியன்
குழுமூர் என்னும் ஊரில் இருந்துகொண்டு அட்டில் (அன்னதான மடம்) அமைத்து மக்களுக்கு உணவு வழங்கும் தொண்டு செய்துவந்தவன் கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான் [12]
நன்னன்
நாஞ்சில் வள்ளுவன்
ஒருசிறைப் பெரியனார், ஔவையார், கதப் பிள்ளையார், மருதன் இளநாகனார் ஆகிய சங்ககாலப் புலவர்கள் இவனைப் பாடியுள்ளனர்.
பண்ணன் (சிறுகுடி வள்ளல்)
இவன் சிறுகுடி என்னும் ஊரில் வாழ்ந்த வள்ளல். சிறுகுடி காவிரியாற்றின் வடகரையில் இருந்தது. கிள்ளிவளவனின் உறையூரிலிருந்து பறந்து செல்லும் வண்டுகள் இவன் ஊரிலிருந்த பாதிரி மலர்களைப் பெரிதும் விரும்புமாம். சிறுகுடியின் நெல்லிமரத் தோப்பு அக்காலத்தில் சிறப்புப் பெற்றிருந்தது.'தனக்கென வாழாப் பிறர்க்குரியாளன்' என்றும், 'கைவள் ஈகைப் பண்ணன்' என்றும், இவனைப் புலவர்கள் போற்றினர். சோழவேந்தன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் தான் பாடிய் பாடலில் [13] 'யான் வாழு நாளும் பண்ணன் வாழிய' என்று என்று கூறிச் சிறப்பித்துள்ளான். கிணைப்பறை முழக்கத்துடன் இவனது புகழை நாள்தோறும் பாடுவேன் என்றும், பாடாவிட்டால் தென்னன் மருகன் வழுதியின் சுற்றம் என்னை மதிக்காமல் போகட்டும் என்றும் மதுரைப் புலவர் பாடுவதிலிருந்து பாண்டிய மன்னர்களும் இவனைப் பெரிதும் மதித்தனர் என்பது தெரியவருகிறது.[14]
பண்ணன் (வல்லார் கிழான்)
வலாஅர் (வல்லார்) என்னும் ஊர் 'பெருங்குறும்பு' என்று கூறப்படுவதால் இதனை ஒரு பேரூர் எனலாம். இந்த ஊரைச்சுற்றிப் பெருங் காவற்காடு இருந்தது. இவ்வூர் மக்கள் எயிற்றியர். இவ்வூர்ச் சிறுவர்கள் யானைக் கன்றுகளோடு அந்தக் காவற்காட்டில் விளையாடுவார்களாம். இந்த ஊரில் வாழ்ந்தவன் பண்ணன். இவனது தொழில் வேந்தர்க்காகப் போரிடுதல். போரில் இவன் பெற்ற வெற்றிகளுக்காக வல்லார் என்னும் பேரூர் இவனுக்கு வழங்கப்பட்டது. அந்த ஊருக்கு உரியவன் ஆகிவிட்ட பிறகு இவனை 'வல்லார் கிழான் பண்ணன்' என்று போற்றினர். வறுமையில் வாடுவோர் இவன் போருக்குச் செல்வதற்கு முன் சென்றால் அவர்களது வறுமையைப் போக்குவான் [15]
மூதில் அருமன்
இவன் பெரிதும் புகழ் பெற்று விளங்கிய சிறுகுடி என்னும் ஊரில் வாழ்ந்துவந்தான். இவன் தன் இல்லத்தில் இருந்துகொண்டு கூழும் கருணைக் கிழங்குக் குழம்பும் தந்து பசிப்பினியைப் போக்கிவந்தான்.[16] இதே ஊரில் வாழ்ந்த பண்ணன் அரிசிப் பொங்கல் படைத்து வழிப்பயணத்துக்குக் கட்டுச்சோறும் கொடுத்தனுப்பினான். பார்க்க; பண்ணன்

கொடுக்காதவர்கள்

அடிக்குறிப்பு

  1. அகம் 142-3
  2. புறம் 47-1
  3. குறள் 598
  4. புறம் 211-8
  5. புறம் 203-11
  6. புறம் 393-6
  7. அகம் 286-2
  8. தொல்காப்பியம் 766
  9. திருக்குறள் 88
  10. திருக்குறள் 507
  11. கள்ளில் ஆத்திரையனார் குறிந்தொகை 293
  12. அகம் 168
  13. புறம் 173
  14. இவனை மேலும் பாடிய புலவர்கள்
    கொற்றங் கொற்றனார் அகம் 54,
    மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார் புறம் 388,
    செயலூர் இளம்பொன் சாத்தன் கொற்றனார் 173,
    கோவூர் கிழார் புறம் 70
  15. புறம் 181 புலவர்; சோணாட்டு முகையலூர்ச் சிறுகருந் தும்பியார்
  16. நக்கீரர் - நற்றிணை 367
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.