என். வி. நடராசன்

என். வி. நடராசன் (என். வி. நடராஜன், சூன் 12, 1912 - ஆகத்து 3, 1975) ஒரு தமிழக அரசியல்வாதி மற்றும் திராவிட இயக்கத் தலைவர் ஆவார்.

என். வி. நடராசன் ஆசிரியராக இருந்த திராவிடன் இதழ்.

அரசியல்

நடராசன் 1938-49 காலகட்டத்தில் நீதிக்கட்சியின் (1944 முதல் திராவிடர் கழகம்) உறுப்பினராக இருந்தார். 1949ல் கா. ந. அண்ணாதுரை பெரியார் ஈ. வே. ராமசாமியுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடுகள் காரணமாக தி.கவிலிருந்து வெளியேறி திராவிட முன்னேற்றக் கழகத்தை துவங்கிய போது அவருடன் சென்ற தலைவர்களுள் நடராசனும் ஒருவர். நடராசன் திமுகவின் ஐம்பெரும் தலைவர்களுள் ஒருவராகக் கருதப்பட்டார். (ஏனைய நால்வர் - அண்ணா, இரா. நெடுஞ்செழியன், கே. ஏ. மதியழகன், ஈ. வே. கி. சம்பத்). 1960 முதல் 1975 வரை திமுகவின் அமைப்புச் செயலாளராக பதவி வகித்தார்.

தேர்தல்

1957 மற்றும் 1962 சட்டமன்றத் தேர்தல்களில் பேசின் பிரிட்ஜ் தொகுதியில் திமுக சார்பாகப் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். பின்னர் 1964ல் தமிழக சட்டமன்ற மேலவைக்குத் தெர்ந்தெடுக்கப்பட்டார். 1967ல் திமுக வென்று ஆட்சியமைத்த போது அண்ணாவின் அமைச்சரவையில் தொழிலாளர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராகப் பதவியேற்றார். 1975ல் இறக்கும் வரை அப்பதவியில் நீடித்தார். அவரது மகன் என். வி. என். சோமு பிற்காலத்தில் திமுக சார்பாக இந்திய மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கூடுதல் செய்திகள்

  • தி.மு.க.வின் சென்னை மாவட்ட செயலாளராக முதன் முதலில் இருந்தவர்.
  • தி.மு.க.வின் சட்டத்திட்டங்களை உருவாக்குவதற்கு அமைக்கப்பட்ட சட்டத்திட்டத் திருத்தக் குழுவின் முதல் செயலாளர்.
  • தி.மு.க.வில் மிக நீண்டகாலம் தலைமை நிலையச் செயலாளராக இருந்தவர்.
  • ’திராவிடன்’ என்னும் இதழைத் தொடங்கி நடத்தினார்.
  • இந்தி எதிர்ப்பு, விலைவாசி உயர்வு எதிர்ப்பு போன்ற பல போராட்டங்களில் கலந்து கொண்டு சிறை சென்றார்.

நூல்கள்

  1. நமது கடவுள்கள், 1952, பாண்டியன் பதிப்பகம், சென்னை 1 [1]

குடும்பம்

இவர் புவனேஸ்வரி என்பவரை மணந்தார். இவர்களுக்கு சோமு என்னும் மகனும் இராணி என்னும் மகளும் பிறந்தனர். மகள் இராணிக்கும் ஞா.கலைச்செழியனுக்கும் கா. ந. அண்ணாதுரை தலைமையில் சென்னையில் 15-4-1956இல் திருமணம் நடைபெற்றது.[2]

உசாத்துணை

  1. திராவிடநாடு (இதழ்) நாள்:25-5-1952, பக்கம் 7
  2. திராவிடநாடு (இதழ்) நாள்:8-4-1956, பக்கம் 18
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.