உருமாற்றம்

உருமாற்றம் (Metamorphosis) எனப்படுவது சில விலங்குகளில் முட்டை பொரித்தலின் பின்னர் அல்லது பிறப்பின் பின்னர், இலகுவாக பார்த்தறியக் கூடியவாறு, அவற்றின் உடலில் நிகழும் உயிரியல் மாற்றங்களாகும். இந்த மாற்றங்கள் உயிரணுப்பிரிவு (Cell division), உயிரணு வேற்றுமைப்பாடு (cell differentiation) போன்ற செயற்பாடுகள் மூலம் நிகழும் உடல் தொடர்பான மாற்றங்களால் ஏற்படும். உயிரினங்களின் உடலில் ஏற்படும் சாதாரண வளர்ச்சி தவிர்ந்த, பிரித்தறியக்கூடிய வெவ்வேறு பருவ நிலைகளை உள்ளடக்கியதாக இந்த உருமாற்றம் அமையும்.

தட்டாரப்பூச்சியில் கடைசி இளம் வளர்நிலை பருவத்திலிருந்து, முதிர்நிலைக்கு இறுதியான தோல்கழற்றல் மூலம் மாறும் உருமாற்றம்.

பூச்சிகள், நீர்நில வாழ்வன, மெல்லுடலிகள், Cnidarians, Crustaceans, முட்தோலிகள், Tunicates என்பன இவ்வகை உருமாற்றத்துக்கு உட்படுவனவாகும். இந்த உருமாற்றத்தின்போது அவை பொதுவாக தமது வாழிடம், நடத்தை போன்றவற்றையும் மாற்றிக் கொள்ளும். இதனால் ஒரு உயிரியின் வெவ்வேறு பருவ நிலைகளுக்கிடையே போட்டி குறைக்கப்படும்.

Pterygota துணை வகுப்பைச் சேர்ந்த பூச்சிகளில் இந்த உருமாற்றத்தை தெளிவாக அவதானிக்க முடிகின்றது. உருமாற்றமானது இயக்குநீர்களால் கட்டுப்படுத்தப்படுகின்றது. இந்த உருமாற்றமானது முழுமையான உருமாற்றமாகவோ, முழுமையற்ற உருமாற்றமாகவோ இருக்கலாம்.

முழு உருமாற்றம்

கைமனொப்தரா (Hymenoptera) வரிசையைச் சேர்ந்த பூச்சிகளில் முழுமையான உருமாற்றம்.

முழு உருமாற்றம் அல்லது நிறையுருமாற்றம் (holometabolism), முழுமையாக உருவத்தில் வேறுபட்ட வளர்நிலை என்னும் இடை நிலைகளைக் கொண்ட உருமாற்றமாகும். இங்கே முட்டை அல்லது முளையம், குடம்பி, கூட்டுப்புழு, முதிர்நிலை என அறியப்படும் தெளிவான உருவவியல் வேறுபாடுகளைக் கொண்ட வெவ்வேறு வளர்நிலைகள் காணப்படும். இவ்வகையான உருமாற்றம் பொதுவாக உள் இறக்கை அமைப்புடைய Endopterygota என்னும் துணை வகுப்பைச் சேர்ந்த பூச்சிகளில் காணப்படும். பட்டாம்பூச்சி, இருசிறகிப் பூச்சிகள், தேனீ, எறும்பு, வண்டு போன்ற உயிரினங்களில் இத்தகைய உருமாற்றம் நிகழ்கின்றது.

இங்கே முட்டை பொரித்து வெளிவரும் நிலையான குடம்பியானது பொதுவாக புழுப் போன்ற வடிவத்தைக் கொண்டிருக்கும். அவை மயிர்களைக் கொண்ட மயிர்க்கொட்டி வடிவில், மிகவும் தடித்த புழுக்கள் வடிவில், அல்லது தட்டையான புழுக்கள் வடிவில் என்று வெவ்வேறு வடிவங்களில் காணப்படும். குடம்பிகளுக்கு அடுத்த நிலையான கூட்டுப்புழு நிலையானது அசைவுகளற்ற அல்லது மிகவும் குறைந்த அசைவைக்கொண்ட வடிவமாகும். இந்நிலையில் இவை ஒரு தடித்த உறையினால் (cocoon) மூடப்பட்டுக் காணப்படலாம். இந்தக் கூட்டுப்புழு நிலையில் இருக்கும்போதே உடல் விருத்தி நிகழ்ந்து தோல்கழற்றலின்போது முதிர்நிலை வெளிவரும். சிறகுகள், இனப்பெருக்க உறுப்புக்கள் முற்றாக விருத்தியடைந்த முதிர்நிலைகள் தோல்கழற்றலைத் தொடர்ந்து வெளிவரும்.

முழுமையற்ற உருமாற்றம்

வெட்டுக்கிளியின் முழுமையற்ற உருமாற்றத்தில்/குறையுருமாற்றதில் காணக்கூடிய இளம் பருவ நிலையான அணங்குப்பூச்சி, முதிர்ந்த நிலையான முதிர்நிலை உட்பட்ட வெவ்வேறு வளர்நிலைகள்

முழுமையற்ற உருமாற்றத்தில் (hemimetabolism) ஒரு உயிரியின் இளம் வளர்நிலைப் பருவமானது, அதன் முதிர்நிலையின் வெளியான உடல் உருவத்தை ஒத்திருப்பினும், உருவத்தில் சிறியதாகவும், முதிர்நிலை உயிரியில் காணப்படும் சிறகுகள், இனப்பெருக்க உறுப்புக்கள் போன்ற சில உடல் உறுப்புக்கள் விருத்தியடையாத நிலையிலும் காணப்படும். இளம்பருவத்தில் இருந்து முதிர்நிலையை அடைய முன்னர் பல தடவைகள் தோல்கழற்றல் (Ecdysis or moulting) செயல்முறை மூலம் வெவ்வேறு வளர்நிலைகளைக் (instars) கடந்து செல்லும். இந்த வளர்நிலைகள் அணங்குப்பூச்சி (Nymph) என அழைக்கப்படும்.

வெட்டுக்கிளி, தட்டாரப்பூச்சி, கரப்பான் பூச்சி, கறையான் போன்றவற்றில் இவ்வகை உருமாற்றம் நிகழ்கின்றது.

தும்பியில் முதிர்நிலைக்கு முன்னரான புறவன்கூட்டை உதிர்க்கும் பல தோல்கழற்றல் நிகழ்வுகள்

வெளி இணைப்புக்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.