வளர்நிலை

வளர்நிலை (Instar) என்பது பூச்சிகள் போன்ற கணுக்காலிகளில், அவை தமது பால் முதிர்ச்சி நிலையை அடைவதற்கு முன்னராக, ஒவ்வொரு தோலுரித்தல், உருமாற்ற நிகழ்வின்போதும் உருவாகும் விருத்தி நிலைகளில் ஒன்றாகும்.[1][2] கணுக்காலிகள் வளர்ச்சியடையவும், அல்லது ஒவ்வொரு புது வடிவத்தை எடுக்கவும் தமது புறவன்கூட்டை (exoskeleton) தோலுரித்தல் என்னும் நிகழ்வின் மூலம் அகற்ற வேண்டியுள்ளது. அவ்வாறான வெவ்வேறு வளர்நிலைகள் தமது அளவு, அமைப்பு, நிறம், உடல் துண்டங்களின் எண்ணிக்கை போன்றவற்றில் வேறுபாட்டைக் கொண்டிருக்கும். சில கணுக்காலிகள் தமது பால் முதிர்ச்சி நிலையை அடைந்த பின்னரும் தோலுரித்தல் மூலம் வேறு விருத்தி நிலைகளைக் கொண்டிருப்பினும், அவை வளர்நிலை என அழைக்கப்படுவதில்லை.

Eacles imperiali அந்துப்பூச்சியின் (moth) விருத்தி - முட்டையில் இருந்து, கூட்டுப்புழுவாகும் வரை சில வளர்நிலைகள்.
A.புதிதாக இடப்பட்ட முட்டைகள்,
B.பொரிக்கும் நிலையில் முட்டைகள்,
C.முதலாம் வளர்நிலைக் குடம்பியான கம்பளிப்புழு. இது தனது முட்டை ஓட்டையே முதலில் உணவாகக் கொள்ளும்,
D.வளர்ந்த முதலாம் வளர்நிலை,
E.இரண்டாம் வளர்நிலை,
F.மூன்றாம் வளர்நிலை,
G.நான்காம் வளர்நிலை,
H.ஐந்தாம் வளர்நிலை,
I.கூட்டுப்புழு ஐந்தாம் வளர்நிலைக் குடம்பி நிலத்தினுள்ளே சென்று அங்கே கூட்டுப்புழுவாக மாறும்.

பொதுவாக முழுமையான உருமாற்றத்துக்கு உட்படும் பூச்சிகளில் குடம்பி நிலையும், முழுமையற்ற உருமாற்றத்திற்கு உட்படும் பூச்சிகளில் அணங்குப்பூச்சிகளும் வளர்நிலைகள் என அழைக்கப்படும். ஆனால் சிலசமயம் இந்தக் குறிப்பிட்ட சொல்லானது கூட்டுப்புழு, முதிர்நிலை ஆகிய விருத்தி நிலைகளைக் குறிக்கவும் பயன்படலாம்.

ஒரு பூச்சியில் காணப்படும் வளர்நிலைகளின் எண்ணிக்கை குறிப்பிட்ட இனம், மற்றும் சூழலுக்கு ஏற்ப அமையும்.

Papilio polytes இன் இரு வளர்நிலைக் குடம்பிகள்

மேற்கோள்கள்

  1. Allaby, Michael: A Dictionary of Ecology, page 234. Oxford University Press, USA, 2006.
  2. The Free Dictionary
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.