உம்பளச்சேரி மாடு

உம்பளச்சேரி மாடு என்பது தமிழ்நாட்டில் நாகை, திருவாரூர், தஞ்சை மாவட்டங்களில் காணப்படும் மாடுகளின் ஒரு இனமாகும். இவை குட்டையானவை என்றாலும். இதன் கால்கள் உறுதியானவை, ஆழமான சேற்றில் இறங்கி நன்கு உழக்கூடியவை.[1]

உம்பளச்சேரி காளை
உம்பளச்சேரி பசுமாடு

பெயரியல்

நாகப்பட்டினம் மாவட்டத்தின், தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த உம்பளச்சேரி ஊராட்சியின் பெயரைக்கொண்டு இவ்வகை மாடுகள் உம்பளச்சேரி மாடுகள் என அழைக்கப்படுகின்றன. நாகை, திருவாரூர் மாவட்ட சதுப்பு நிலப் பகுதியில் உள்ள உப்பன் அருகு என்ற உப்புச்சத்து நிறைந்த புல் வகைகளை மேய்ந்து இனவிருத்தி செய்ததால் உப்பளச்சேரி மருவி உம்பளச்சேரி எனப் பெயர் பெற்றது.[2]

விளக்கம்

இந்த மாடு பிறக்கும்போது சிவப்பு-பழுப்பு நிறத்தில் இருக்கும். ஆறு மாதங்கள் வளர்ந்த பிறகு சாம்பல் நிறத்துக்கு மாறிவிடுகின்றன. முகம், கால், வால் பகுதிகள் வெள்ளை நிறத்தில் இருக்கும். உம்பளச்சேரி இளம் காளைகளின் கொம்பைத் தீய்க்கும் அல்லது வெட்டும் பழக்கம் இருக்கிறது. காங்கேயம் காளைகளை உள்ளூர் நாட்டுப் பசுக்களுடன் கலப்பு செய்யப்பட்டதால் உம்பளச்சேரி என்ற தனி மாட்டினம் உருவாகி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. காங்கேயம் மாட்டின் தலை அமைப்பைத் தவிர மற்ற உடற்கூறுகளை உம்பளச்சேரி மாட்டிலும் காணலாம்.[2]

பசுக்கள்

இந்த இனப் பசுக்கள் 2.5 லிட்டர் வரை குறைந்த அளவே பால் கறந்த போதிலும், இதன் பால் கெட்டித்தன்மையும் நோய் எதிர்ப்பு சக்தியும் வாயந்ததாகும். முத்துமுத்தாய் நெல் விளைந்தாலும் உம்பளச்சேரி மோருக்கு சோறு கிடைக்காது என்ற காளமேகப்புலவரின் பாடல் வரிகள் மூலமாக உம்பளச்சேரியின் பெருமையினை அறிந்துகொள்ளலாம். [3]

காளை

இந்த இனக் காளைகள் காவிரி கழிமுகத்து எதிர்நிலப் பகுதியில் உள்ள கடுஞ்சேற்றிலும் குறைந்த உணவுடன் ஆறிலிருந்து ஏழு மணி நேரம் உழவு செய்யும் ஆற்றல் மிக்கவை. மேலும், 2500 கிலோ கொண்ட பாரத்தை சுமார் 20 கிமீ தூரம் வரை அனாயசமாக இழுத்துச் செல்லும் ஆற்றல் கொண்டவை.

மாற்றுப் பெயர்கள்

உம்பளச்சேரி இனக் காளைகள் தெற்கத்தி மாடு, மோழை மாடு, மொட்டை மாடு, தஞ்சாவூர் மாடு என்றும், பசுக்கள் ஆட்டுக்காரி மாடு, வெண்ணாமாடு, சூரியங்காட்டுமாடு, கணபதியான்மாடு எனவும் காரணப்பெயர்களால் அழைக்கப்படுகின்றன. [3]

காக்கும் முயற்சிகள்

இந்த உம்பளச்சேரி மாட்டினத்தை பாதுகாக்கும் நோக்கில் தமிழ்நாடு அரசின் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் திருவாரூர் மாவட்டம், கொருக்கையில் மாவட்ட கால்நடை பண்ணை நடத்தப்பட்டுவருகிறது.[4]

மேற்கோள்கள்

  1. ஆதி (2018 பெப்ரவரி 24). "உறுதிமிக்க உழவு மாடு". கட்டுரை. தி இந்து தமிழ். பார்த்த நாள் 24 பெப்ரவரி 2018.
  2. தினமணி புத்தாண்டு மலர் 2013
  3. வி.தேவதாசன் (2018 திசம்பர் 6). "புயலால் கொருக்கை அரசு கால்நடை பண்ணை சேதம் மாட்டுக் கொட்டகைகள் சூறை; 9 கால்நடைகள் உயிரிழப்பு". செய்திக் கட்டுரை. காமதேனு. பார்த்த நாள் 10 மே 2019.

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.