இறைவன் கோயில்

சன்மார்க்க இறைவன் கோயில் என்பது இந்தியாவில் செதுக்கப்பட்டு, தற்போது, அமெரிக்க ஹவாய் தீவில் அமைக்கப்பட்டுவரும், சிவாலயம் ஆகும். தமிழில் கடவுளைக் குறிக்கப் பயன்படும் "இறைவன்" என்ற பெயரே, இவ்வாலயத்துக்கும் வைக்கப்பட்டுள்ளது. வயிலுவா (Wailua) நதிக்கரையில் அமைக்கப்பட்டு வரும் இவ்வாலயமே, அமெரிக்காவின் முதலாவது கற்கோயில் ஆகும்.[1] ஹவாய் ஆதீனம் என்று அழைக்கப்படும், சைவ சித்தாந்த இமாலயன் அகாதமியால், இவ்வாலயம் அங்கு அமைக்கப்பட்டு வருகின்றது.

இறைவன் கோயில்
இறைவன் கோயில் விமானம்
அமைவிடம்
நாடு:ஐக்கிய அமெரிக்க நாடுகள்
மாநிலம்:ஹவாய்
கோயில் தகவல்கள்
மூலவர்:சிவன்


வரலாறு

ஹவாய் ஆதீனத்தைச் சேர்ந்த, சிவாய சுப்பிரமுனிய சுவாமிகள், சிவபெருமானின் தரிசனத்தைப் பெற்ற இடத்திலேயே, இவ்வாலயம் அமைக்கப்படுகின்றது.[2]சிவாகமங்களுக்கு உட்பட்டதாகவும், ஆயிரமாண்டுகள் நின்று நிலைக்கத் தக்கதாகவும், கையை அன்றி, எவ்வித பொறியுதவியும் இல்லாமல் இவ்வாலயம் கட்டப்படவேண்டும் என்ற சிவாய சுப்பிரமுனிய சுவாமிகளின் ஆணைப்படியே இவ்வாலயம் அமைக்கப்பட்டு வருகின்றது. 1980களின் பிற்பகுதியில், கணபதி ஸ்தபதியால், இக்கோயிலுக்கான நிருமாண வடிவமைப்பு பூர்த்தியானது. 1990இலிருந்து, பெங்களூரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கருங்கற்பாளங்கள் மூலம், சிற்ப வேலைப்பாடுகள் நடந்து வருவதுடன், 2001 இலிருந்து, அவை கப்பல் மூலம் ஹவாய்க்கு அனுப்பப்பட்டு, அங்குள்ள சிற்பிகள் மூலம் பொருத்தப்பட்டு, ஆலயத் திருப்பணிகள் இடம்பெற்று வருகின்றது. 2017இல், 3.2 மில்லியன் பவுண்டு நிறையுள்ள ஆலயப்பாகங்கள் கொணரப்பட்டு, ஆலயம் நிறைவுறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. [3]

கட்டுமானம்

ஆலய வடிவமைப்பு

பாரம்பரிய வழமை மாறாமல், உளிகளைக் கொண்டு, வெறும் கைகளாலேயே இவ்வாலயம் அமைக்கப்பட்டு வருகின்றது என்பது, இக்கோயிலின் சிறப்பம்சமாகும்[4] தட்டும் போது ஒலியெழுப்பும் இசைத்தூண்களும் இங்கு அமைக்கப்பட்டு வருகின்றன. [2] அகற்ற முடியாத, ஆனால் சுழலும் பந்துகளைத் தம் வாயில் ஏந்திய சிங்கங்களும் ஆறு தூண்களில் செதுக்கப்பட்டுள்ளதுடன், ஆறடி நீளமான தனிக்கல்லால் ஆன, கற்சங்கிலிகளும் கூட, அமைக்கப்பட்டு வருகின்றன.[2]

தெற்கு நோக்கி அமைக்கப்படும் இக்கோயில், வாஸ்து சாத்திரத்துக்கு ஏற்பவே, அமைக்கப்பட்டு வருகின்றது.[5]சிவாய சுப்பிரமுனிய சுவாமிகளின் ஆணைப்படி, இக்கோயிலுக்கு மின்னினைப்பு வழங்கப்படப் போவதில்லை.

அறுமுகம் கொண்ட அரியவகை பளிங்குருவான படிக இலிங்கமே இவ்வாலய மூலவராக அமைய இருக்கின்றது.சிவாய சுப்பிரமுனிய சுவாமிகளுக்கும், உள்ளூர் இரத்தினக்கல் வியாபாரியான அல்மித்ரா சியோன் எனும் பெண்மணிக்கும் கிடைத்த கனவுக் காட்சிகளை அடுத்து, அமெரிக்காவின் ஆர்கன்சா மாநிலப்பகுதியில், இக்கல் கண்டெடுக்கப்பட்டது. ஐம்பது மில்லியன் ஆண்டுகள் பழைமையானதாகக் கருதப்படும் இவ்விலிங்கக் கல், இயற்கையாகவே இதே வடிவில், சேற்றில் மூழ்கியதாகக் கிடைத்தது. 1987இல் இவ்விலிங்கம் ஹவாய்க்குக் கொணரப்பட்டபோது, உலகைக் காக்கும் அரிய சுயம்பு இலிங்கம் என்று,விழவெடுத்துக் கொண்டாடப்பட்டது[6] முன்மண்டபம் முதலான பல பகுதிகள் கட்டிமுடிக்கப்பட்டு விட்டன. 2017இல், இக்கோயில், தற்போதைய ஆதீன முதல்வர், போதிநாத வேலன் சுவாமியின் தலைமையில் திருக்குடமுழுக்குக் காணும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


காட்சியகம்

உசாத்துணைகள்

வெளி இணைப்புகள்


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.