இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370

இந்திய அரசியலமைப்பு சட்டப் பிரிவு 370 ஜம்மு & காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு சலுகைகள் வழங்க வழிவகை செய்கிறது. 1949-இல் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் 21 பகுதியில் திருத்தம் செய்து தற்காலிக மற்றும் மாறுதலுக்கு உட்படுத்தலின் கீழ் 370 வது பிரிவு வரையறுக்கப்பட்டது.[1]

சட்டப் பிரிவு 370-இன் கீழ் வழங்கப்படும் சிறப்புச் சலுகைகள்

  • இராணுவம், வெளியுறவு, தகவல் தொடர்பு துறைகள் தவிர, பிற துறைகள் தொடர்பாக நடுவண் அரசு நாடாளுமன்றத்தில் இயற்றும் சட்டங்கள், இம்மாநிலத்தின் இசைவு இல்லாமல் இயற்றினால், அந்த சட்டங்கள் இம்மாநிலத்திற்கு பொருந்தாது.[2]
  • ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தில் பிற மாநிலத்தவர்கள் அசையாச் சொத்துக்கள் வாங்க முடியாது. ஆனால் இம்மாநில மக்கள் இந்தியாவின் பிற மாநிலங்களில் அசையாச் சொத்துக்கள் வாங்கலாம்.
  • இம்மாநில பெண்கள் வெளிமாநில ஆண்களை திருமணம் செய்து கொண்டால், அப்பெண்கள் இம்மாநிலத்தில் அசையாச் சொத்துகள் வாங்க முடியாது. ஆனால் ஆண்கள் வெளிமாநில பெண்களை திருமணம் செய்து கொண்டாலும், அவர்கள் இம்மாநிலத்தில் அசையாச் சொத்துக்களை வாங்கலாம்.
  • இந்திய அரசியல் சாசனத்தின் 238 வது பிரிவு இம்மாநிலத்திற்கு பொருந்தாது.
  • இம்மாநிலத்தின் எல்லைகளை குறைக்கவோ அல்லது கூட்டவோ முடியாது.

வரலாறு

இந்தியா விடுதலை அடைந்த போது, ஜம்மு & காஷ்மீர் சமஸ்தானத்தை ஆண்ட மன்னர் ஹரி சிங், ஜம்மு & காஷ்மீர் சமஸ்தானம் மற்றும் அங்கு வாழும் மக்களின் நலன் கருதி சில நிபந்தனைகளுடன், ஜம்மு & காஷ்மீர் சமஸ்தானத்தை இந்தியாவுடன் 1949-இல் இணைக்க சம்மதித்தார். மன்னர் ஹரிசிங்சின் நிபந்தனைகளை நிறைவேற்ற, இந்திய அரசு, இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் தக்க திருத்தங்கள் மேற்கொண்டு, சட்டப் பிரிவு 370-இல் ஜம்மு & காஷ்மீர் பகுதிக்கும் மக்களுக்கும் சில சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டது.[3][4]

சட்டப் பிரிவு 370 மற்றும் 35ஏ குறித்த சட்ட முன்வடிவுகள், 2019

ஜம்மு காஷ்மீரை இரண்டாக பிரித்தல் மற்றும் அரசியல் அமைப்புச் சட்டப்பிரிவு 370 மற்றும் இந்திய அரசியலமைப்புச் சட்டம், பிரிவு 35ஏ-இன் கீழ் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்புரிமைகளை நீக்கி 5 ஆகஸ்டு 2019 அன்று இந்தியக் குடியரசுத் தலைவர் ஆணையிட்டார்.[5] 5 ஆகஸ்டு 2019 அன்று இந்திய நாடாளுமன்றக் கூட்டத்தில், உள்துறை அமைச்சர் அமித் ஷா, அரசியல் அமைப்புச் சட்டப் பிரிவு 370 மற்றும் 35ஏ குறித்து நான்கு சட்ட மசோதாக்களை தாக்கல் செய்தார்.[6] அவைகள்:

  1. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்புரிமை தரும் அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 370ஐ நீக்குவதற்கான மசோதா.
  2. ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான இட ஒதுக்கீட்டுக் கொள்கையை மாற்றுவதற்கான மசோதா.
  3. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்புரிமை அளிக்கும் 35ஏ-ஐ நீக்குவதற்கான மசோதா.
  4. ஜம்மு காஷ்மீரை இரண்டாகப் பிரித்து, சட்டமன்றம் கொண்ட ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாகவும், லடாக் சட்டமன்றம் அற்ற யூனியன் பிரதேசமாகவும் ஆக்குவதற்கான மசோதா.

ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்ட முன்வடிவம் 2019

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா 5 ஆகஸ்டு 2019 அன்று ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்ட முன்வடிவத்தை மாநிலங்களவையில் அறிமுகம் செய்து வைத்தார். அரசியல் அமைப்பு சட்டப் பிரிவு 370-ஐ நீக்க வகை செய்யும் இத்தீர்மானத்திற்கு ஆதரவாக பாரதிய ஜனதா கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, அதிமுக, பிஜு ஜனதா தளம், அகாலி தளம், சிவ சேனா போன்ற அரசியல் கட்சிகளும், எதிராக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்,விடுதலை சிறுத்தை கட்சி, திமுக, இந்திய தேசிய காங்கிரசு, இந்தியப் பொதுவுடமைக் கட்சி போன்ற கட்சிகள் மாநிலங்களவையில் கருத்துக்கள் கூறினர். முடிவில் அரசின் இத்தீர்மானத்தை மாநிலங்களவையில் வாக்கெடுப்பிற்கு விட்டதில், அரசின் தீர்மானத்திற்கு ஆதரவாக 125 வாக்குகளும், எதிராக 61 வாக்குகள் பெற்று தீர்மானம் நிறைவேறியது.[7]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

மேலும் படிக்க

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.